அஞ்சலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அஞ்சலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

எந்தன் நிழலின் நிஜத்திற்கு...


நிஜம் தானே கேளடா  - எந்தன்
நினைவெல்லாம் நீயடா!
எங்கோ உன் முகம் கண்ட ஞாபகம்
என்றோ உன்னுடன்  வாழ்ந்த ஞாபகம் !
எந்தன் இதய கடலில்
வீசும் புயற்காற்றில்
சிறகனேன் - நான்
ஒற்றை சிறகனேன்!
சுடும் தீயில் மெழுகானேன்
அணையும் மெழுகானேன்!
தேரில் வந்த தேவதைஎன - தங்க
தேரிலே வந்த சின்ன தேவதைஎன
எனை தலையில் வைத்தாடி;
தேரோட்டம் நிகழும் முன்னே -ஏனடா 
எடுத்தாய் நீ இறுதி ஓட்டம்?
நீ விதைத்த ஞாபக விதைகள் - எந்தன்
மனத்தோட்டத்தில் - உந்தன் நினைவு தளிர்கள்,
திரும்பி பார்க்கையிலே மரமாய் அசையுதடா;
பெரிதோர் மரமாய் அசையுதடா... 
நீ எனை பிரிந்தார் போல் - ஆம்
சொல்லிக்கொல்லாம் நீ எனை பிரிந்தோடியது போல்
காலமும் இங்கே விரைந்தோடுதடா !
நம் வாழ்க்கையும் ஓர் கதை ஆனதடா!
என் கண்ணீர் துளிகளில் - நான் சிந்தும்
செந்நீர் துளிகளில் ஈரம் என்றும் வாழுமடா!
பாரினிலே நீ மீண்டும் வந்தால் - தாயாக
எந்தன் தலை கோதும் தாயக - நானும்
உன் மடி தவழும் சேயாக மீண்டும்
ஓர் ஜனனம் கேட்பேன்! 
அப்பிறவியிலே
மரணதேரில் உனக்குமுன்
நான் நடந்து உன்னை அழைக்க எண்ணினேன்!
அந்தோ!!
நான் ருசித்த வலி - உன் பிரிவால்  
நான் புசித்த வேதனை வேண்டாமடா உனக்கு!
இருவரும் சேர்ந்து செல்வோம் சோர்வாகாமல்..!!!


செவ்வாய், 28 ஜூலை, 2015

எங்கள் நாட்டில் இலையுதிர் காலம் . . .

எங்கள் நாட்டில் இலையுதிர் காலம்
இப்பொழுது 
எங்கள் நாட்டில் உதிர்காலம் !
"அறிவியசியல்" விருக்ஷத்தின்
கிளையுதிர்காலம்!
மெல்லிசை  விருக்ஷத்தின்
கிளையுதிர்காலம்!
எங்கள் குடும்ப விருக்ஷத்தின்
கிளையுதிர்காலம்!
எப்படி போகுமோ இனி எங்கள் எதிர் காலம் !

கடவுளுக்கு தன்னம்பிக்கை வேண்டுமோ?
கடவுளுக்கு விஞ்ஞான தாகமோ ?
கடவுளுக்கு விவசாய மோகமோ ?
விண் தொட வேண்டுமென
நின் கனவை நெனவாகிய கர்வமோ?

வழி நடத்த வேண்டிய நீர்,
விழிகளை ஈரமாக்கி,
வழியிலேயே விட்டு சென்றது ஏனோ. ?
எங்களை கனவு காண சொன்னீர் ,
ஏங்கி நிற்கிறோம்
இது கனவாக
ஒரு கெட்ட கனவாக
இருக்க கூடாதா என்று !!!
தமிழனை தலை நிமிர செய்தாய்,
இளைஞனை கனவு காண செய்தாய்
குழந்தையை கொஞ்சி மகிழ்ந்தாய்
ஒளி இழந்த கண்களோடு,
எங்கு காண, கனவை...?

அதோ,
இந்திய தாயும்
தமிழ் தாயும்
இயற்பியல் தாயும்
ஒரு சேர அழுகிறார்கள்
எங்களோடு . . .

இந்த ஆண்டில் என்னை உலுக்கிய மூன்றாவது மரணம் :: வலிமை இன்றி வெறுமையாய் என் பேனா . . !

வியாழன், 16 ஜூலை, 2015

மன்னவா . . !

இசை தாயின் புத்திர சோகத்தை
துடைக்க வழி தெரியாமல் அவள்
கண்ணீரினிலே மூழ்கி போகிறோம் நாங்கள்.

எக்காலத்திலும் இறவா இசை தந்த வேந்தே,
உமது இசை எம்முடன் இருக்கையிலே
நீவிர் எம்மை விட்டு நீந்தி சென்றதெனோ?

காவியரசரையும் கானவேந்தனையும்,
மக்கள் தலைவரையும், நடிப்பின் திலகத்தையும்
கண்டு கச்சேரி காண்பிக்க சென்றாயோ ?

விண்ணுலகின் தலைவனான கடவுளே,
நீ, இவரை இசைத்தாய்க்கு
பரிசலிக்காமல் கடனாய் தந்தாயோ?

எங்கள் குடும்பத்தின்
இசை செல்(ல)வத்தை திருப்பிவிட்டோம்,
கண்ணீரை வட்டியாய் கொடுத்து!

இசை அனாதை ஆகின்றது,
இசைக்குடும்பம் அனாதை ஆகின்றது,
சங்கீதத்தோடு இங்கீதம் தெரிந்த
 மன்னவனின் மறைவினிலே,
இசை அனாதையாகின்றது !

மன்னாவனோடு முடிந்தது
ஓர் ஜாம்பவன சகாப்தம் . . .
மெல்லிசை மன்னாவனோடு  - முடிந்தது
ஒரு ஜாம்பவன சகாப்தம்....

விரல் நுனியில் இசை படைத்த வேந்தன்,
இனி தென்றல் காற்றாய்
நமது செவி தீண்டுவார்...

உள்ளத்தில் நல்ல உள்ளம்,
கண்ணீர் மத்தியில் ஊமையாய்
 உறங்கிக்கொண்டிருக்கிறது....

மன்னவனே, (இனி) அழலாமா
கண்ணீரை விடலாமா,
மன்னவா . . !

- அதராஞ்சலி - ஹ்ருதயாஞ்சலி - கவிதாஞ்சலி - கானாஞ்சலி -
இசை மன்னன் , தெய்வத்திரு . விஸ்வநாதன் பூத உடல் மறைவிற்கு . . . !

சனி, 25 ஏப்ரல், 2015

உறக்கம் - அமைதியாய்

சுப்புலக்ஷ்மி - ஈஸ்வரய்யரின் பௌத்திரனாய்,
பாரத்வாஜ கோத்ரத்தின் கோமேதகமாய்,
பூச நக்ஷத்திரத்தில் பிறந்து,
மோகன் இலக்குமியின்
கனிஷ்ட புதல்வனாய்
ஜனித்த ஜீவன் - சுந்தர ஹயக்ரீவ ஷர்மா!

பெற்ற தாய் பரிதவித்து நிற்க,
வளர்த்த தந்தை ஊமையாய் அழ
உடன் பிறப்பாய் நான் ஓரமாய் நிற்க ,
உற்ற சொந்தங்கள் உயிர் வலிக்க,
ஊர் மக்கள் கூடி ஓங்கி அழ ,
நண்பர்கள் நாடி துடிக்க,
அழகான ஓவியம் - நீ ,
நிறைவான காவியமாய்,
அங்கே
அமைதியாய் உறங்குகிறாய் !













பூங்குவியலாய் எம்  வாழ்வினில் வந்தாய்,
உன்னுடன் இருந்த பொழுதெல்லாம்
வசந்தமாய் மலர்ந்ததடா
ஆனால் ,
இரவின் முன்பே
இடையினில் மறைந்தாய்
இருள் சூழ நாங்கள் அனைவரும்
நிலைகுலைந்து நிற்கிறோம்.

இன்னும் நம்ப முடியாத வார்த்தை
"நீ மறித்து விட்டாய்"
இது அல்லவோ "சொல்லடி"
மருந்தென்று ஒன்று இல்லா
நோயினில் நொடிந்தே போகின்றோம் !

குழந்தையாய் பிறந்து
குழந்தையாய் வளர்ந்து
குழந்தையாய் மரித்தாயோ . ?
இல்லையே,
நீ மருத்துவனாய் - கைராசி
மருத்துவனாய்
மரித்ததாய் சொல்கிறார்களே !

மந்திர சிரிப்புக்கு சொந்தக்கரரன்
தந்திர பேச்சில் வித்தைக்காரன்
ரோஷத்தின் குத்தகைக்காரன்
பல்லவன் என்ற
புதியதொரு பேருக்காரான் . . !

ருசி அறிந்து சமைத்து
மனம் அறிந்து பேசி
நோயறிந்து அருமருந்திட்டு
பண்போடும் அன்போடும்
பழகும் நேசக்காரன்  . . !

இதுவரை எந்த பழிசொல்லுக்கும் ஆளாக நீ
கண்ணீரில் கரையா காயத்தை தந்து
புத்திர சோகத்தில் தள்ளிய
பழிச்சொல் ஏந்தி சென்றதேனோ?

வெண்ணிற மேல் அங்கி இட்ட
உமது கம்பீர தோற்றம் ,
அதோ, வெண்ணிற துணியால்
மூடப்பட்ட சடலமாய் . . .
கழுவிக்கொன்டாலும்
கரை படிந்த காயத்தோடு
இதயம் துடித்துக்கொண்டே இருக்கிறது!

கலங்கரை விளக்கமாய்
நீ இருப்பாய் - கரை கடந்து மீள்வோம்
யாம் என எண்ணுகையிலே
அனைவரையும் துன்ப கடலில்
மூழ்கடித்து ஏமாற்றியதேனோ . . ?

இருமுடி சுமந்து 18 படி கடந்து
மே 16 அவன் தரிசனம் காண
இருந்தாயே என் கண்ணா !!
பொறுமை அவனுக்கு இல்லையா ?
அல்லது அவனை சேர
அவ்வளவு அவசரமா உனக்கு?
ஏப்ரல் 16 அவன் திருவடி
அடைந்து விட்டாயே...
தனியே தாயை தவிக்கவிட்டு
கானகம் நீ சென்றாய் ஐயப்பா!!

துணை என நீ நினைத்தது
வினையை - உனக்கே பெரும்
வினையாய்  -  காலனின் கை போல் 
எங்களுக்கெல்லாம் தீரா


வினையை தந்ததேனோ?

தவழும் கண்ணனாய்
தரணியில் தன்னிகறில்லா
துயர் துடைக்கும் தோழனாய்
தீர பிணி தீர்க்கும் மருத்துவனாய்
தோள் கொடுக்கும் தமயனாய்
வாழ்ந்திட்டாய் நீ

துள்ளி திரிந்த உன்னை
அள்ளி கொடுத்துவிட்டோம்,
உன்னை எண்ணா
ஓர் நாளும் இருக்கபோவதில்லை ,
நீ
எந்தன் இல்லத்தின்
தெய்வமன்றோ !


இதோ,
எங்கள் உணர்வுகள்
உறங்கிவிட்டது உன்னோடு
ஆனால் உந்தன் நினைவுகள்
எங்களுடன்
இன்றும்
என்றும்
உயிர்ப்போடு . . !

வாலி முதல் mandolin ஸ்ரீநிவாஸ் வரை வரைந்த அஞ்சலி இத்துனை வலிக்கவில்லை. . . உனக்கென வரையும் பொழுது பேனா கண்ணீர் சிந்துகையில் இதயம் செந்நீர் சிந்துகிறதே . . . !

கவிதாஞ்சலி தெய்வத்திரு Dr;Sundharahayagreeva Sharma @ Dr.Raj Kailash Mohan.

செவ்வாய், 7 அக்டோபர், 2014

கானாஞ்சலி . . . !

அனைவரும் உறங்கிடும் நேரம்
தலையணை தகித்திடும் ஈரம்
உன் விரல் தந்த மாயத்தால்
உறக்கம் எனக்கு பரிச்சியம்!

தெற்கும் வடக்கும் கூடாதென்று
கிழக்கும் மேற்கும் காணாதென்று
கூறியோரின் வாக்கை பொய்யாக்கி
காவியம் படைத்தன உன் விரல்கள்!

வாக் தேவி வெறுத்தாள்
தான் கொண்ட வீணையை,
உன் விரல் விளையாடிக்கொண்டிருந்த
Mandolin கண்டு!

அரை மணி பிரார்த்தனை
ஒவ்வொரு கச்சேரிக்கும் முன்பு;
மனிதனே, உமது ஒவ்வொரு கச்சேரியுமே
கடவுளை உணரும் வழிதான் எமக்கு!

மௌனத்தில் புதையுண்டு
வேதனை நம்முள் விதைத்து
மீளா துயர் ஒன்றை தந்து
மாண்டது Mandolin !

தந்திகள் மீட்டிய விரல்களுக்கு
நரம்பறுந்த உணர்வோடு
வலி"மை" இட்டு வரைகிறேன்
கானாஞ்சலியாய் ஓர் கவிதாஞ்சலியை!

இவள்,
நீ விட்டுசென்ற
இசையின் அடிமை !

எழுத்தில் இதை வடிக்கும் பொழுது கண்ணீர் வடித்தது என் பேனா!
துர்பாக்யவதி என் பேனா, தன்  இரு நூறாவது எழுத்தினை அஞ்சலியாய்  பதிந்ததற்கு!

வியாழன், 18 ஜூலை, 2013

இறை கவியே ! !

தேவலோகதினற்கு
தேனமுதம் கேட்க
ஆசைதோன்றிவிட்டது போலும்
அதுவும், தமிழ் இசை கானங்கள்!

முதலில் அழைத்து கொண்டனர்,
இசை சக்ரவர்த்தியை,
அண்ணல் ராமமூர்த்தி அவரை!
பின்பு தேன்குரல் எடுத்து
தெவிட்டாகானம் பாடும்
ஸ்ரிநிவசரையும் சௌந்தர ராஜரையும்!

தேவர்களே,
உமக்கு
திகட்டாநெல்லைத்  தமிழ் பேசும்
எமது வாலிப கவிஞரும் வேண்டுமோ  ஓய் ?

எங்கள் பிரார்த்தனைகள்
அவரின் பக்தர்களின் கூட்டு பிரார்த்தனைகள்
உமக்கு வந்தடையும் முன்,
அவர் உம் பாதம் கலந்தாரோ ?

தமிழ் தாயின்
தவ புதல்வரே,
தமிழுக்கென
பாட்டெழுதியது
அறுபது ஆண்டுகளாய்
 உமது பேனா !

நெடு தூர பயணங்களிலும்,
நித்திரை இல்ல இரவுகளிலும்,
சாய்ந்து அழ
தோள் தேடும் தருணங்களிலும்,
சிரிப்பலைகள் சிதறவிடும் நேரங்களிலும்,
உணர்ந்ததுண்டு
வாலியின் மை கொண்ட வலிமையை
அதன் இளமையை,
என்றென்றும் இனிமையாய்!
இனி எப்பிறவியில் காண்போம்?

வாலிப கவிஞன் வாலியே,
உம்மிடத்தில் வாய் கொடுதோர்
என்று காலியே !
இருந்தும் நீர் எம் மனபாதிரங்களை
நிரப்பும் ஆழியே !

வலி தாண்டி,
நீர் தமிழ் தீண்டி,
உலா வார காத்துகிடந்தோம்
எல்லோரையும் காக்க வைத்தாயே நிரந்தரமாய் ?

வாலிப கவியே,
எமது வாலியே,
நீர் வலி நீத்து
வலிய வருவீர்
என எண்ணினோமே,
வலி தந்து நீத்ததேன் உமதுயிரை ?

யார் பிடிப்பார்
உமது சிம்மாசனத்தை,
சிங்கமே துயில் கொண்ட போது,
"அழகிய" மனிதராய் நீர் "சிங்கார்"+இ த்த
அரிதொரு சிம்மாசனத்தை  ?

 தமிழ்இனத்தின் தலைவனுள்
தலையானவர்  நீர்
இனி தீர்க்க ஒளியாய்
எம்மை வழிநடத்தி செல்ல,
ஜோதியாய் மின்ன போய்விட்டீர்  !

நெஞ்சம் கனக்கிறது,
கண்கள் கரிக்கிறது !
இறையிடம் சென்றடைந்த
உமது ஆன்மாவை என்றும்
எம் அருகில் உணர்வோமே யாம் !

இறை கவியே,
தெய்வ புலவரே,
பிழை இருந்தேனும்,
பொறுத்து ஏற்றுகொள்ளும் ,
எமது கண்ணீர் விட்டேழுதிய கவிதாஞ்சலியை !

இவண் ,
உமது பிரிவால் வாடி துயர் கொள்ளும்
பலரின் உணர்வலைகளில் ஓர் அலை !

செவ்வாய், 29 ஜனவரி, 2013

நீந்தி செல்கிறாயோ ? ? ?

உதிர்ந்த இலைகளின் இடைவெளியில்
நிழலாகிறது உந்தன் நினைவுகள் !
பூமியை ஒட்டிநிற்கும் கால்களும்
செயலிழந்தன,
நீ ஓய்ந்த செய்தியினை கேட்டு !
தோற்று போன பின்பு தான்
புரிகிறது பிழைகளின் ஆழம் !
கடலினில் கரைந்து
மண் துகள்களில் அமர்கிறது
உந்தன் ஞாபகங்கள்!
என்றோ கட்டுபடுத்திய பாசம் இன்று
காலத்திலும் ஞானபெரிதாய் !
வேறு வழியில்லை,
ஏக்கம் கலந்த வெப்ப மூச்சை
உனக்கு துணை அனுப்பி,
கண்ணீரில் கரைகிறோம் நாங்கள் . . .!
நீந்தி செல்கிறாயோ ? ? ?

வெள்ளி, 18 ஜனவரி, 2013

வெண்மைக்கு ஓர் இரங்கட்பா . . .


எந்த மனிதன் மீது 
நம் நம்பிக்கை வித்தாகிறதோ 
அவர் கடவுளாம் . . .
ஆதலினால் அம்மனிதர்கள் கடவுளாகின்றனரோ 
வெகு விரைவில் ? ? 

தலைமகன்  என்று
அறிந்தனவே யாம் உம்மை,
தலை வணங்கி 
போற்றினார் பலர் !
தேனியாய் உழைத்த நீ,
என்றும் உலகம் உணரும் மானீ  !

மண்ணுலகம் வாழ்த்திடவே, 
இவ்விடத்தி உன் புகழ் இருத்தி,
மண்ணில் நீ உமதுடல் நீங்கி ,
விண்ணுலகம் சென்றாயோ,
மேலுலகிளிருந்து எம்மை காண?
மக்கள் கூட்டம் திரள,
மேட்டுபாலயமே, 
தனது மருத்துவ தலைவனின்,
தனதுயிர் காத்த தவ புதல்வனின் 
பளிங்கு முகம் இறுதியாய் காண,
இல்லத்தில் சூழ்ந்ததோ?
உன்னால் காக்கப்பட்ட 
உயிர்கள் அனைத்தும்
கண்விழித்து நோக்கையிலே,
ஹையோ ,
நீ கண்மூடி உறங்குவதேனோ ?

விழித்தெழுந்து செவி சாய்பாயோ ,
பெருங்குரலெடுத்து கதறும் மக்களுக்கு?
வெண்ணிற  மேல் அங்கி இட்ட 
உமது கம்பீர தோற்றம் ,
அதோ, வெண்ணிற துணியால் 
மூடப்பட்ட சடலமாய் . . .
அகன்ற விழிதனில் அனைவரையும் கண்டாயாம் ,
விழி வழி கூறிய செய்திதனை 
மொழி பெயர்துணர முயல்கிறோம் நாங்கள்,
நிரந்தர பிரிவை தான் பறை சாற்றினாயோ?
கண்ணீரால் கழுவுகிறோம் நாங்கள்,
அய்யனே உன் பெயரேன்றேன்றும் 
வாழ்ந்திடவே இவ்வையகத்தில் . . .

கவிதாஞ்சலி - மண்ணுலகில் இன்னுயிர் நீத்து விண்ணுலகில் வாழ்ந்திட சென்றிருக்கும் என் தாய் மாமா Dr .N .S .Harihara Iyer அவர்களுக்கு 

திங்கள், 30 மே, 2011

கற் கடவுளுக்கு ....


கடந்து வந்த காலங்களின்று 
கனவாய் மட்டுமே நீ!
கண் அறியா
சுவாசமாய் கலந்த என் நேசமே,
இன்றோ, 
நீ என் கவிதையல் மட்டுமே உயிராய்....
உருவத்தை போல், 
அவனுக்கு உள்ளமும் கல்லோ?
அப்படியேனும் இருந்திருந்தால்,
எங்கள் கண்ணீர் 
அந்த கற்கடவுளை கரைத்திருக்குமே?
இனி எங்கு கண்டறிவேன் நான்  
நட்பின் இலக்கணமாய்,
உன் போல் ஒரு காவியத்தை.....

தோழியின் சரிதா கேடியா வின் மறைவிற்கு.,

திங்கள், 24 மே, 2010

எரிகிறேனடா ...


திசை தெரியாது,
எனது உள்ளுணர்வுகள் 
ஒன்றை ஒன்று
கொளுத்திகொள்கின்றன..
நானும் உடன் எரிகிறேன்
மிக சுகமாகவே...
உன் நினைவுகளில்
ஆரம்பித்து..
அதிலே சாம்பலாகிறேன்....

வியாழன், 20 மே, 2010

ஏன் வந்தாய்??


கண்மூடித்தனமாய் அன்பே
நீ என்று இருந்தேன்!
காதலுடன் பல நாட்கள்
உனக்கென தவம் இருந்தேன்!
 கண்ணீர் பூக்களை அள்ளித்தேறித்து
கற்பாறையாய் நீ நிற்க;
இதற்கெனவே வந்தாயோ - அன்பு
பொங்கித் தருவது போல்
தாளாத் துயர் எனக்களிக்க ?

அற்பனிக்கிறேன்... இன்னுயிர் நீத்தும் எங்கள் மனதில் நீங்காது உயிர் வாழும்
என் சகோதரியின் கணவன் ராஜேஷிற்கு ....

என்ன செய்வேனோ..?


அடிக்கடி நான் கண்ணீர் சிந்த,
அந்நீர் துடைக்க 
நீ வருவாயென
கரைந்தேன் கண்ணீரிலே!
காலம் தாமதிதல்லும் 
கட்டாயம் வந்தாய்..!
இன்றும் கரைகிறேன்,
பிறர் சொல் கேட்டு
பிரிந்து செல்லும் 
உன்னை நினைக்கையில்,
என்னை நேசித்த ஓர் உயிர்,
என்னை உயிரோடு பலிவங்கியதென 
மீண்டும் கண்ணீர் சிந்தவா?
அல்ல,
என் சுவாசம் மறைந்துவிட்டதென 
எனக்கு நானே 
அஞ்சலி செலுத்தவா ??
உனக்களித்த தூய நேசதிற்கென,
என் உயிரையே 
எல்லா நேரங்களிலும்
நீ காவு வாங்கிட..,
என் செய்வேன் நான்??
எங்குசெல்வேன் நான்??