சோகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சோகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 31 ஜனவரி, 2017

ஒருவேளை . . .

அழகாய் தான் தொடங்கியது
அந்த பயணம் ,
கனிவு பார்வைகளுக்கென
கண்கள் ஏங்கும் வரை.

ஒளிந்து கொண்டு தான் இருந்தன
இயலாமை என்றொரு உணர்வு ,
உரிமையை நிலைத்து கொள்ள
முடியாது போகும் வரை.

காணாமல் தான் இருந்தது ,
எதிர்த்து பேசும் குணம் ,
அநாகரீகமான கேள்விகளை
செவி கேட்காத வரை!

இத்துணைக்கு பிறகும் ,
வெட்கமில்லாமல் ஏங்கும்
மந்தை மனதை கண்டால்,
பொங்கி வழிகிறது வெறுமை!

மடை திறந்து ஓடும் வெள்ளமாய் ,
கண் வழி வரும் நீரை ,
துடைத்தெறிய ஒரு
விரலையாவது தேடுகையில்

உரைக்கிறது பல உண்மைகள்,
துள்ளி திரிந்த காலத்தில்
சேகரித்து வைத்திருக்கலாம்
ஒரு துளியையாவது . .

இத்துணை வெறுமையை ,
உண்ணு விழுங்க ,
இத்துணை தவறுகளை
மொத்தமாய் அழிக்க . . .

ஒரு வேளை இவையனைத்தும்
இல்லாது இருந்திருந்தால் ,
இல்லாமல் போன அவன்
நினைவுகள் புதைந்து இருக்குமோ எங்கேனும்!




திங்கள், 3 அக்டோபர், 2016

வரங்களே சாபங்களானால்

உடலால் மறைந்தாலும்
என் உயிரினுள் உறைந்திரு .
உன் உணர்வினை
தெளித்து வரைந்த
கவிதையினுள் பதுங்கிக்கொள் .
இனி,
சகோதரனை பற்றி
மட்டுமே எழுத
வரம் பெற்றுயிருக்கிறது
என் பேனா,
சபிக்கப்பட்ட
என் கைகளில் இருந்து .
நீ என் வரம்,
நான் உன் சாபம் . . .

செவ்வாய், 28 ஜூலை, 2015

எங்கள் நாட்டில் இலையுதிர் காலம் . . .

எங்கள் நாட்டில் இலையுதிர் காலம்
இப்பொழுது 
எங்கள் நாட்டில் உதிர்காலம் !
"அறிவியசியல்" விருக்ஷத்தின்
கிளையுதிர்காலம்!
மெல்லிசை  விருக்ஷத்தின்
கிளையுதிர்காலம்!
எங்கள் குடும்ப விருக்ஷத்தின்
கிளையுதிர்காலம்!
எப்படி போகுமோ இனி எங்கள் எதிர் காலம் !

கடவுளுக்கு தன்னம்பிக்கை வேண்டுமோ?
கடவுளுக்கு விஞ்ஞான தாகமோ ?
கடவுளுக்கு விவசாய மோகமோ ?
விண் தொட வேண்டுமென
நின் கனவை நெனவாகிய கர்வமோ?

வழி நடத்த வேண்டிய நீர்,
விழிகளை ஈரமாக்கி,
வழியிலேயே விட்டு சென்றது ஏனோ. ?
எங்களை கனவு காண சொன்னீர் ,
ஏங்கி நிற்கிறோம்
இது கனவாக
ஒரு கெட்ட கனவாக
இருக்க கூடாதா என்று !!!
தமிழனை தலை நிமிர செய்தாய்,
இளைஞனை கனவு காண செய்தாய்
குழந்தையை கொஞ்சி மகிழ்ந்தாய்
ஒளி இழந்த கண்களோடு,
எங்கு காண, கனவை...?

அதோ,
இந்திய தாயும்
தமிழ் தாயும்
இயற்பியல் தாயும்
ஒரு சேர அழுகிறார்கள்
எங்களோடு . . .

இந்த ஆண்டில் என்னை உலுக்கிய மூன்றாவது மரணம் :: வலிமை இன்றி வெறுமையாய் என் பேனா . . !

செவ்வாய், 23 ஜூன், 2015

நினைவுகளில் நின்ற ஞாபகங்கள் . . !

குழந்தை பருவத்தினில் 
தாய் சேய் போல்,
நமக்காக நாம்,
நாம் இருவரும் !

சிறிது வளர்ந்த பின்,
நீ பெரியவனா, 
நான் பெரியவளா 
என்று  செல்ல சண்டைகள்! 

சின்ன சீண்டல்களும் 
செல்ல சிணுங்கல்களும்,
கண்ணீர் மல்க 
சிதறவிடும் சிரிப்பலைகளும்,
உரமாய் நம் உறவிற்கு !

கால சக்கிரம் 
வேகமாய் சுழல்கையில்,
அவர்தம் வாழ்கை பாதையில் 
தொடங்குகிறோம் பயணத்தை!

ஆனால்,
எனக்கும் நம்பிக்கையுண்டு,
ஒரு நாள்,
உலகம் இருண்டாலும்,
கனவுகள் கலைந்தாலும்,
உறவுகள் சிதறினாலும்,
தனிமை எனக்கென்று எண்ணுகையில்.
காதினில் தீண்டும் உன் கேலிகள்,
பின் திரும்பி காண்கையில்,
கரம் விரித்து காத்திருப்பாய் 
எனை கையில் ஏந்த ! ! !

To my Beloved Brother Dr.Raj Kailash Mohan ! <3 p="">

ஞாயிறு, 18 டிசம்பர், 2011

காதல் பரிசு ....


காதல் என்றான் ,
கவிதை தந்தேன்.
பொருளை கொன்று வார்த்தையாய் தந்தான்.
காதலை தந்தேன்,
அவன் நெஞ்சின் கடைசி துளி ஈரம் வரை
வழித்து என்  கண்ணில் தந்தான்.

கண்ணீர் விட்டேன்,
அவன் தாகம் தீர்த்தான்.
முழுதாய் என்னையே தந்தேன்,
உயிரை பிடுங்கி சடலமாய் வைத்து விட்டான்...





வியாழன், 23 ஜூன், 2011

இதுவும் என் காதலுக்காகத் தானே ... ! ! !

காதலுக்காக மட்டுமே

கவிதை எழுத வேண்டும் என்று நினைத்த என்னை

காதல் தோல்விக்கும் கவிதை எழுத செய்கிறாய் ...

சரி விடு .. வெற்றி என்ன..? தோல்வி என்ன..?

இதுவும் நம் காதலுக்கு (.. மன்னிக்கவும்..)...

இதுவும் என் காதலுக்காகத் தானே ... ! ! !

சனி, 28 மே, 2011

பிரியம்



கம்பன் வீட்டு 
கட்டு தறியும்  கவிபாடும்.
என்னை விட்டு செல்லும்
என் உயிரின் துளிகள்
பிரியத்தை பேசுமா...?
பிரிந்த பிரியத்துடன்,
பிரியத்துக்கு ஏங்குபவள்....

சனி, 19 மார்ச், 2011

பேசுகிறேன், பேசுகிறேன், உன் ஜீவன் பேசுகிறேன்..!

மனிதன் படைக்க தொடங்கிவிட்டான்
இறைவன் அதை நிறுத்தி விட்டான்.
முடிவு அவன் கையில்..!
~~ அழிந்து வரும் பூமி.


என் பொறுமையை கலைத்த 
அவனுக்கு ஏது மன்னிப்பு?
வெடிப்பேன் நானும்..!
~~ பூகம்பம்.

நானும் சேர்கிறேன் உன்னோடு,
சீரும் ஆழ்கடல்,
இனி ஆவதற்கில்லை..!
~~ சுனாமி.


விதைத்தது யாரோ?
நான் இங்கு பூத்துள்ளேன்,
சிதறடிக்க.!
~~ எரிமலை.


மனிதா! 
என்னை சீரழிக்காதே.
சிதைவது நீ தான்!
~~ இயற்கை.




உனக்கு நான்..!


மழைகால நீர் தேக்கமாய் உனக்கு நான்...
நீ கல்லை எறிந்தாலும் சரி ,
நீ சொல்லை எறிந்தாலும் சரி,
அல்ல,
என்னையே எறிந்தாலும் சரி..!





நான்
நீர் குமிழ்கள் போல்,
உன்னை மட்டுமே வட்டமிடுவேன்..!

புதன், 2 மார்ச், 2011

பிரிவும் பிளவும் நமக்குள்ளுமா ?


தொடர்புக்கு ஓர் முற்று புள்ளி 
வைத்தாய் வார்த்தைகளால் !
கடல் அலைகள் அடங்கலாம்,
நம் மன அலைகள் தீருமோ?
கண்கள் பரிமாறிய காதலும்,
உதடுகள் பரிமாறிய நேசமும்,
விரல்கள் பரிமாறிய அன்பும்,
நாசிகள் நெருடும் நம் சுவாசமும்,
எப்படி மறப்பேன் நான்.?
தூரங்கள் நம்மை பிரித்தாளும்,
நீ என்னை விலகி நின்றாலும்,
துயரங்கள் மனதை வதைத்தாலும்,
என் உலகம்,
உன்னை சுற்றியே சுழல்கிறது. 
நேசம் என்ற வார்த்தை 
என் சுவாசம் தீண்டும்போதேல்லாம்,
நீ தான் என் மனகண்ணில்!
காண்பவர்கள்,
காதல் தோல்வியா என்கிறார்கள்.!
ஏன்,
என் தோழமையை நான் நேசிக்க கூடாதா?




பிரிந்த உள்ளம், மறைந்த நேசம்


காதல் பேசி
காவியம் சொன்ன கண்கள்,
இன்று மூடியதேனோ?
உள்ளம் வரை இல்லாது
உதடு வரை தங்கிய உறவு நானோ?

வடிவம் இல்லா உருவமாய்,
உருவம் இல்லா உணர்வாய்,
உணர்வுகள் புரியா உறவாய்,
வார்த்தைகள் இல்லா பாஷையாய்,
பாஷை இல்லா உறையாடலாய்,

ஏன் இந்த கொடுமை?
வந்து கேள் என் தலை அணையை,
கூறும் என் கண்ணீர் கதையை.!

சனி, 19 பிப்ரவரி, 2011

தொலைத்த நிமிடங்கள்..

கால் தடம் இல்லா
கடல் தீவுகளில் கலைத்து தேடுகிறேன் ,
வாழ்வு முழுதுமாய் 
என்னுடன் இருக்கும்
என நினைத்த பொற்குவியல்.
பூமியில் புதையலாய் புதைந்ததோ 
என பிளந்தும் பார்த்தேன்,
பிரபஞ்சம் அலைந்தும் பார்த்தேன்...
கடவுளின் காலை 
பற்றி கேட்டேன்,
கதறி கேட்டேன்..
கடைசியில்.,
பேழையில் பார்த்தேன்...
களவு போன என் புன்சிரிப்பை,
காணாது போன என் நிம்மதியை,
மனித இனம் 
மறந்து போனதென்னவோ உண்மைதான்!
அமைதியும்,
புன்னகையும்,
பொறுமையும்,
பேரானந்தமும்,!
என்று திரும்பும் மனிதம் நம்முள்..??



உழுகிறேன் , விழுகிறேன்...

கற்பனை குதிரை ஏறி,
கனவுகளி அழைத்துக்கொண்டு,
காற்றோடு விரைந்து சென்றேன்
கடிவாளம் இல்லாமல்...
சென்ற இடமெல்லாம் 
வறண்டு இருக்க,
எங்கு நோக்கினும்
கதவுகள் மூடி கிடக்க,
அங்கோ,
என் பூமி வற்றி கிடக்க,

தானியம் இன்றி
என் சிசு பட்டினி கிடக்க,
என் செய்வேன் நான்..?
விவசாய பூமியில்,
உழவனுக்கு சோறில்லை..!

சனி, 5 பிப்ரவரி, 2011

காலமான காலம் .


உன்னை பற்றிய எண்ணங்கள்
ஏதும் இல்லை.!
கேட்டதை தருவாயா;
சில சொற்கள் உதிர்பாயா;
இல்லை எதிர்பார்ப்புகள்,
உன்னிடமிருந்து.!
கனவுலகில் கூட
வேண்டாம் உன் பாராமுகம்!
தூக்கம் இல்லையடா எனக்கு!

உனக்காக,
உணர்வெழுப்பி,
உடைந்துருகி,
உயிர் கசிந்து
நான் எழுதும் காலம்,
காலமாகி,
காலம் பல கரைந்தோடி விட்டது.!


வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

என் உயிருக்குள் நீ!





பல சமயங்களில்

என் மனதில் அடிவாரத்தில்
ஓங்கி அடிக்கும்
உன் நினைவலைகளின்
சில சாரல்களாய்..,
ஓரீரு வரிகள்.!

உன் மழையின்
சாரலில் சிலிர்த்து எழ,
உயிரும் உடையும் சப்தம் 
பலமாய் என்னுள்...!

என் உயிர் தூறல்
சிறிதேனும்
ஈரப்டுத்டுமா
உன் இதயத்தை....
அல்லையேல்
குடை விரித்து பிடி..!
கரை படபோகிறது,
உன் கல்நெஞ்சம்..!

துலைந்த இடம்  ஒன்றாய்,
தேடும் இடம் மற்றொன்றாய்,
மதிகெட்டு தான் திரிகிறேன்,
தீரா அன்பினால்.!


உன்னால் உடைந்த திசுக்கள்
ஒட்ட  தான் இல்லை என்னுள்;
அதில் ஒன்றாய்,
என் சிறு இதயம்!
வெறும் செநீரை மட்டுமே சுமக்காமல்,
உன்னையும் கருவாக்கி தாங்கிட,
ஆசை பட்ட பாவத்திற்கு,
உடைந்தே கிடக்கிறது,
ஆறா ரணமாய்!!
அதனால் தான்
துடி துடித்தே,
ஏங்குகிறதோ??

காயங்களால் மட்டுமே தீண்டி,
நரம்புகளையும் தூண்டி,
சுடும் தீயிற்கு இரையாக்கி விட்டாயோ,
கடைசியில் என்னை??

நெஞ்சம் சரிகிறது,
கண்ணீரும் எரிகிறது!
உரிமை போர் கோடி
தூக்கிட தயார் இல்லை நான்.!
அறிந்தேன் உன் மீதான
என் உரிமையை.!
வார்த்தைகளில் ஒருவாராய்,
செய்கையில் மற்றோருவாராய்,
உணர்த்தியே விட்டாய;
வழியை விலையை எடுத்து.!

பாராமுகமான உன் மொழியை விட
இழந்த வலி பெரிதல்ல!
ஆசைகள் எதிர்பார்புகளாக,
எதிர்பார்ப்புகள் ஏக்கங்களாக,
ஏக்கங்கள் ஏம்மாற்றதை தழுவ,
ஏம்மாற்றங்கள் உன் எதிர்ப்பை பறை சாற்ற,
எதுவுமே நிலையானதில்லையோ.,
உன்னை போலவே??

விழி உடைத்து
வழி கண்டு
உணர்வுகளை தாக்கி,
இன்று,
என் உயிருக்குள் நீ!

மௌனங்களில்
உன்னை எழுதி
வார்த்தைகளில்
உன்னை வரைய..,
உன்னுள் நான் கலந்தேன்.!
இல்லை இல்லை,
என்னுள் நீ தான்,
இன்றும், என்றும்!
உருகி
மருகி
மருவ நேசம் கொள்ள - என்
உயிர் உறங்கிய பின்பாவது
உணர்வாயா,
பெயர் இல்லா 
என் பந்தத்தை.....????
அதன் நேசத்தை...???









செவ்வாய், 30 நவம்பர், 2010

கிழிந்த நெஞ்சம்...

நீ ரசிக்க மாட்டாய் என தெரிந்தும்
உனக்கு பிடித்த ஆடைகளை
தின தேர்தெடுக்கும் கரங்கள்,
நீ அழைக்க மாட்டாய் என தெரிந்தும்
அலை பேசியை எப்போதும்
ஆவலாய் பார்க்கும் கண்கள்,
நீ பேசமாட்டாய் என தெரிந்தும்
உன் வார்த்தைகள் மட்டுமே
கேட்க தவஞ்செய்யும் காது மடல்கள்,
நீ மட்டுமே என்னுள் என
உறுதி செய்யும் என் உடல் திசுக்கள்,
உன்னை மட்டுமே சுவாசிக்கும்
என் நாசியின் துளைகள்.,
உன்னை மட்டுமே காண
துடிக்கும் என் கரு விழிகள்,
நீ இருக்கும் இடத்திற்கு மட்டும்
வலிக்காது பயணிக்கும் என் கால்கள்,

இப்படி,
இப்படி என் அனைத்துக்கும்
எப்படி புரியவைக்கும்
என் மதியும் மனதும்,
உன் மனதில் நான் இல்லை என.?

வியாழன், 25 நவம்பர், 2010

ஊடலாய் ஓர் உரையாடல்...

பூவுக்கு பூ தாவும்
வெட்டுக்கிளி.
இதன் தாகத்தை தீர்ப்பது
எந்த பனித்துளி?

பனித்துளியாக முயற்சிக்காதே.
பேதை பெண்ணே.
உனக்கு கொடுப்பினை இல்லை 
என் தாகத்தை தீர்க்க.

வாழ்வு முழுதும்
வெட்டுகிளியாய் உருகொள்வாயோ?
உன்னை பஞ்சவர்ண கிளியாக
பசுமை கொஞ்சும் மரமாவேன்...

வேரறுந்து நிற்பாய்
வேண்டா வேலை செய்தால்.
சருகாகாதே  .!

நேசித்த காரணத்தால்
நெஞ்சோடு குடி இருக்க
என்ன தவம் செய்வது ..?

ஒரு தலை நேசம் 
வேண்டாம் இந்த வேஷம்!
புண்பட்ட நெஞ்சுக்கு
புடம் போட்டால் - பாசம்! 
காதல் அல்லவே.!

காதலால் தான்
சிறகொடிந்த உனக்கு
மரமாகி நிழல் தந்தேன்,
இதமாய் நீவி விட்டேன்...!

புரிதலின் பரிச்சயம் 
இல்லையா உனக்கு? 
தேன் சுவைத்திருக்கும் என்னிடம் 
மற்றொரு மலராய் வருகிறாயே?

மனதில் இல்லையேல்
ஏன் சுவைத்தாய் என்னை.?

மலர் வாடிவிடகூடதென
மகரந்த சேர்க்கைக்கு தான்..!

மகரந்த சேர்கையால்
கனிந்த என் நிலை.?

காற்று காதலன் வருவான் 
கனியே, உன்னை கண்டெடுக்க.!

கணவனாய் உன்னை
காதலித்த என் நிலை.?

அறிந்த முட்டாளாய்
 நீ செய்த பிழை.
நான் என்ன செய்ய.??

உன் மீதான என் நேசம்.?
எது வரை என் சுவாசம்.?
ஏனடா இந்த வேஷம்.?

உன்னை கொண்டாட 
உன்னவன் வருவான்;
உலகின் உயர்வை
நீ அடைவாய்.!

வியர்வை சிந்தி
சகித்திருக்கும் உன் நிலை.?

கடைசி வரை,
சகிப்புடனே சுகித்திருப்பேன்..

கடைசி வரை
மலரை சூடாது
மல்லார்ந்து பார்திருபாயோ ?

இல்லை..
அண்ணார்ந்து பார்த்திருப்பேன்.


நந்தவனத்தில்
நீ குடியேற மாட்டாயா.?


பிருந்தாவனமே
பாலைவனமான கதை நீ அறிவாய்..

பாலையிலும் பசுமை பிறக்கும்
நீ உன்னை மாற்றிகொண்டால்..!

கற்றுகொடுத்ததை 
உன் உள்ளம் மறக்கவில்லை !
அறிவேன் என்றும் நான்.!
தேவை இல்லை நிருபணம்.!

நிருபிக்க கணக்கு பதிவியல்
கல்வி இல்லை இது.!

வாழ்கையும் 
ஒரு கணக்கு தான்.!

முடிவாய்..?

முற்று புள்ளி வைக்க 
மனமில்லை...

உன் இனத்திற்கும்
மனம் உண்டோ என்ன.?

மனதால் மடிந்த என்னை
சொல்லால் சுடாதே.

மலருக்கு தேன் சுவை தெரியும்.
சுடத் தெரியாது.!

மன்னிப்பாயோ.??

மன்னிப்பதற்கான
என் உரிமை.??

சிதைத்து 
உன்னை தான்.!

நான் சிதையவில்லையே.!

பொய்.
 பொய் புகட்டதே..

நீ கூறியதை விடவா .?

என் செய்தேன் நான்..?

உன் மனம் அறியும்.!

என்னுள் புதைந்தவை பல.
நீ குறிப்பிடுவது..?

புகட்டிய பொய்களின்
யோசனை உதவும்...

மறக்க மாட்டாயா.?

உன்னையா.?

இல்லையில்லை. 
என் தவறுகள் என
 நீ கருதுவதனைத்தையும்..

பயனில்லை..
மறித்து விட்டேன்..!

வேண்டாம் என் மலரே.!
காலம் உண்டு உனக்கு வாழ.!

அட..
சாத்தானும் வேதம் ஓதும்
அது  இது தான் போலும்.

முடிவில்லையா இதற்க்கு.?
வழி இல்லையா உன்னை தேற்ற.?

நீங்கி செல்வது உன் பழக்கம்
நீர் சிந்துவது என் வழக்கம்..!

சிறகொடிந்த என்னை
 சிந்தையுள் வைக்காதே.!

இலையுதிர் காலம்
எனக்கல்லவோ.?

நிழல் தரும் என் நிஜமே..
ஏன்...??

வசந்த காலம் வந்துவிடும்
அந்தோ.!
புது மலரும் பூக்கிறது.!

வேண்டியதில்லை 
வேறு மலர்..

உதிர்ந்து விடுகிறேன்
மறந்து விடு.!

சருகாகினும் உன்னை
கருக விட மாட்டேன்.!

கண்ணில் இருந்து மறைந்தால்
கருத்திலும் விலகிவிடுவேன்...

கல்லறை சென்றாலும் 
கருவறை மறப்பதில்லை..

கருவறை இல்ல
வெறும் ஓய்வறை தான்..

என்னை இளைப்பாற்றி 
தாலாட்டும் சுகவறை நீ...

ஓய்வறைகளுக்கு
ஒப்பனை தேவை இல்லை..

ஒப்பனை இல்லாமலும்
என் குழந்தாய்,,
நீ அழகு தான்.!


அழிகிறேன்.
அழாதே..!

வேண்டாம் விபரீதம்.

புது மலர் மலர்ந்தார்பின்,
இனி எனக்கென்ன வேலை.?

விலகாதே.வருத்தாதே.!
மலராது இனி ஓர் மலர்...

வருந்தாதே..
வாழப்பார்..!

நீ இன்றியா.?

காலம் கவலை அகற்றும்.!

காலம் சென்றாலும் 
காலமாகாது  காதல்...

காதல் இல்லை என்றாய்..

இனி கனவிலும் 
உன்னை விலக மாட்டேன்..

உன்னை கடந்த கனவு நான்..
களவு போனது என் குற்றம்..

களவாண்டது 
என் குற்றமே..

தூண்டியது நானே..

தீண்டியது நான் தானே..

தாகம் தனித்தேன்..

தேகம் எரிதேனே...

வேண்டாம்..
மீண்டும் என்னால் முடியாது.!

காத்திருப்பேன் 
காலம் கனியும் வரை.

எதிகாலம் நிதர்சமானது...

நம்பிக்கை வைப்போமே...

நடக்க இயலாத ஒன்றில் நம்பிக்கையா?

இயலாதது 
ஒன்னும் இல்லை இவ்வுலகில் ..

மூடர் சொல்..
மலையை நகர்த்த இயலாது.!

மனதை மாற்ற இயலுமே..

மனதில்லை என் இடத்தில..

எனிடத்தில் தொலைந்த அதை 
மீட்டெடுக்க மாட்டேன்..

எடுக்க அவசியம் இல்லை.
அடக்கம் செய்தேன்..

இனி பேச்சிற்கு இடம் இல்லை..

பேசி பயனில்லை..

உன் காயங்களை ஆற்றுவேன்..

காயங்கள் எனக்கில்லை...

விலகாதே...

வீழ்ந்து விட்டேன்
விட்டு விடு.........!!



.

செவ்வாய், 2 நவம்பர், 2010

பாசமும் வலிப்பதேனோ?

நெஞ்சம் முழுதும்
நிரம்பி ததும்பும்
நிஜ நேசத்துடன்,
நான் உன்னை சுவாசிக்க,
நேசத்தை காட்டிலும்
நேர்மை எனக்கு பிரதானம் என
நீ என்னை ஒதுக்க....
வழக்கமான வார்த்தைகளால்
உன்னை சபிக்க மனமில்லை...
ஒரு புறம் .,
கன்னியமான உள்ளத்தை
நேசித்த பெருமையாய்...
மறுப்புறம்,
அந்த அழகு நெஞ்சத்தில்
குடிகொண்டு பாசம் அனுபவிக்க
எனக்கு குடுப்பினை இல்லை
என வருத்தபடுவதா...?



செவ்வாய், 18 மே, 2010

ஒரு நாள்...



ஒரு நாள்
நீ என்னுடன் இருந்தால்,
உன் விரல் பிடித்து நடந்தால்
உன்னுடன் சேர்ந்து வீதியுலா வந்தால்,
உன் அருகாமையில் லயித்தால் ,
உன் பாசத்தை புரிந்தால்,
உன் நேசத்தை எனகுனர்த்தினால்,
உன் சுவாசத்தில் நான் கலந்திட்டால்,
உனக்காக நான் துடித்தால்,
உன் தோழியாய் தோள் சாய்ந்தால்,
உன் தாயாய் தலை கோதினால்,
உன் சேயாய் மடி சேர்ந்தால்,

என்னவனே!
அன்று.......
உலகின் உச்சத்தில் நான் இருப்பேன்,
இப்பிறவி பயனும் ஈடேற்றுவேன்......