உள்ளம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உள்ளம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 17 செப்டம்பர், 2025

நீ எங்கோ

 காற்றிடம் கிசுகிசுக்கிறேன்,
மேகத்தின் திறைக்கிழித்து 
உனை அடைய..! 

உன் ஆன்மாவின் சுவாசம்
என் நுரையீரல் மடிப்பை
நீவுகின்றது.. 

ஒவ்வொரு இரவும்
நட்சத்திரங்கள் உனக்காக
பதிலளிக்கின்றன..

நான்
நிழல்களில்
நடக்கிறேன்,

நீ எங்கோ ..

காலம் அன்பின் முன்
தலைவணங்கும் இடத்தில்,
ஒளியாய் நிற்கின்றாய்... ❤❤


செவ்வாய், 31 ஜனவரி, 2017

ஒருவேளை . . .

அழகாய் தான் தொடங்கியது
அந்த பயணம் ,
கனிவு பார்வைகளுக்கென
கண்கள் ஏங்கும் வரை.

ஒளிந்து கொண்டு தான் இருந்தன
இயலாமை என்றொரு உணர்வு ,
உரிமையை நிலைத்து கொள்ள
முடியாது போகும் வரை.

காணாமல் தான் இருந்தது ,
எதிர்த்து பேசும் குணம் ,
அநாகரீகமான கேள்விகளை
செவி கேட்காத வரை!

இத்துணைக்கு பிறகும் ,
வெட்கமில்லாமல் ஏங்கும்
மந்தை மனதை கண்டால்,
பொங்கி வழிகிறது வெறுமை!

மடை திறந்து ஓடும் வெள்ளமாய் ,
கண் வழி வரும் நீரை ,
துடைத்தெறிய ஒரு
விரலையாவது தேடுகையில்

உரைக்கிறது பல உண்மைகள்,
துள்ளி திரிந்த காலத்தில்
சேகரித்து வைத்திருக்கலாம்
ஒரு துளியையாவது . .

இத்துணை வெறுமையை ,
உண்ணு விழுங்க ,
இத்துணை தவறுகளை
மொத்தமாய் அழிக்க . . .

ஒரு வேளை இவையனைத்தும்
இல்லாது இருந்திருந்தால் ,
இல்லாமல் போன அவன்
நினைவுகள் புதைந்து இருக்குமோ எங்கேனும்!




திங்கள், 23 ஜனவரி, 2017

பெயரிடாவரிகள்

தூரமிருந்து நோக்கிய
பூந்தோட்டம் நெருங்க நெருங்க
மகரந்த வாசம் தேடி நின்றேன்,
காகித பூக்கள் என அறியாமலே.

புதன், 18 ஜனவரி, 2017

தடை அதை உடை

நாளை நம் கையில் !
கூவியபடியே திரண்ட
தமிழ் தாயின் தவசீலர்களுக்கு
என் தலையாய வணக்கங்கள்!

தலை பிரசவம்
என் தாய்க்கு
ஒவ்வொரு முறையும்,
என தாயின் வலி - தமிழ்
தாயின் வலி உணர்ந்த
தன்மான சிங்கங்களுக்கு,
என் தலை தாழ்த்தி
வணக்கங்கள்!

பட்டினி போராட்டம்
போர் தொடுக்கும்
தமிழ்நாட்டு சிங்கங்களுக்கு,
என் பணிவான வணக்கங்கள்!

காளைகளுக்காக 
களம் இறங்கிய 
எங்குல சிங்கங்களுக்கு 
கை கூப்பிய வணக்கங்கள் !

இனிக்க இனிக்க பொங்கலிட்டு 
இல்லங்களில் இட்ட பொங்கலை 
நம் உணர்வுகளோடு பங்கிட்டு 
குடும்பத்துள் ஒருத்தனாய் 
கருதும் காளைகளுக்காக 
கூட்டமாய் கூடியிருக்கும் 
வீரர்களுக்கு..!

பாஞ்சு வரும் காளைகளை,
நெஞ்சில் தாங்கி 
கடலோரமாய் குவிந்த 
கன்றுகளை 
கயவர்கள் கூட்டம் 
கொடுந்திறையிட்டு 
அடக்க தொடங்கும் தருணத்தில் ,
வாழ்த்துப்பாக்களுக்கு 
இடமில்லையென்றாலும் 

எச்சரிக்கைப்பாக்கள் தொடுக்கிறோம்  ,
காண்பிக்காதீர்கள்  வீரத்தை,
கட்டுக்கடங்காது நிற்கும் 
எங்குல கன்றும்  காளைகளும் 
அறப்போர் நிறுத்தி ,
தீஜ்வாலை உமிழ்வார்கள் . . !

வெள்ளி, 16 டிசம்பர், 2016

பௌர்ணமி கவிதைகள்

நீரோடு நிலவு
தெளிந்து தெரிவதைப்போல்
உன்னோடு நான் ,
நிழலாய் மட்டும் . .
நீர் நிலவு ! 

கேட்பதேன் . . ?

தனித்து விடப்பட்ட மென்காற்றாய் ,
கேள்விகள் பார்க்காத கானல்நீராய் ,
அடித்து செல்லப்பட்ட விதைகளாய் ,
இயற்கையின் ஒவ்வோர் பரிமானமும் ,
சேராத காதல் கதை கற்பிக்க,
மனிதம் , சேரும்  காதல் கேட்பதேன் ?

திங்கள், 7 நவம்பர், 2016

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

புதிதாய் ஓர் நாள் விடிய,
பூக்களும் காத்திருக்கின்றன ,
ஓர் மலர் செண்டாய் ,
உன் இசை கேட்க .
உமக்கென கோர்த்த பூமாலை 
உதிரு மேயானா லுதிராது 
ஒவ்வோர் சொல் சேர்த்து 
நாங்கள் வரைந்த பாமாலை.
எங்கள் இதயமெனும் நந்தவனத்தில்,
இசைக்கு இணையாய் வீற்றிருக்கும் உமக்கு,
வாழ்த்துக்கள் சொல்ல வார்த்தைகள் தேடி,
மலர்ந்த ஒவ்வொரு ஸ்வரத்தையும் 
கோர்த்திருக்கிறோம் கவிதையாய்.
எங்கள் கவிதைகளின் மகரந்தமே,
உமக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ! 

வியாழன், 27 அக்டோபர், 2016

காவியங்கள் கருத்தரிக்கிறது . !

குழப்பங்களின் ஊடே,
அவன் நேசிக்க தொடங்கினான்.
துர்கதிகள் கண்ட அவளின் ஆன்மா,
நிதானிக்க தொடங்கியது.
நேசங் கொண்டு அவன் 
அவளை நீவ,
அங்கு இறக்கைகள் முளைக்க தொடங்கின.
இருட்டில் இருந்து
நிழலாய் மாற தொடங்கிய அவள்,
வெளிச்ச பரப்பில் தேவதையானாள்.
தினம் பருகும் காபி கோப்பையின் கீழே,
தன் ஒவ்வொரு இறகுகளை 
தூது விட்டு காத்திருந்தாள்.
அங்கோர் அழகிய பந்தம்.
அவன் மனதில் 
இவள் நினைவுகள் தேங்கி நிற்க,
இவள் மதியில் 
அவன் தாக்கங்கள் கவிதையாய் கொப்பளிக்க,
அழகான காவியங்கள்,
நிறைவாய் கருத்தரிக்கிறது...

திங்கள், 3 அக்டோபர், 2016

வரங்களே சாபங்களானால்

உடலால் மறைந்தாலும்
என் உயிரினுள் உறைந்திரு .
உன் உணர்வினை
தெளித்து வரைந்த
கவிதையினுள் பதுங்கிக்கொள் .
இனி,
சகோதரனை பற்றி
மட்டுமே எழுத
வரம் பெற்றுயிருக்கிறது
என் பேனா,
சபிக்கப்பட்ட
என் கைகளில் இருந்து .
நீ என் வரம்,
நான் உன் சாபம் . . .

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

என் காதல்

தோற்கும் பொழுதும்
நியாயம் தேடி
நியப்படுத்தும் விஷயம் அல்ல
என் காதல் , . !
நியாயமான விஷயம்,
மாலை கோர்க்க முடிந்த உன்னோடு
கை கோர்க்க அவதி படும் என்னை
கண்டால் என் மீதே கழிவிரக்கம் . . !

உன் துணை . . !

புரண்டு அழ ஒரு துகள் மண்ணும் இல்லை ,
பறந்து பாட விண் தேட வானம் இல்லை ,
நீ தந்த வலிகளை 
நான் கவிதைகளாக்கிவிட்டேன் .
என் தனிமையில் எனக்கு துணையாய் 
என் கவிதைகள் உண்டு ,
உன் தனிமையில் உனக்கு 
என்னை தவிர வேறு யாருமில்லை,
அதற்காகவேண்டியாவது ,
நான் உன் உடன் இருக்கிறேனே . . ! 

செவ்வாய், 26 ஜூலை, 2016

வற்றாத ஜீவநதி . . . !

தனிமையின் தூவலில்
பற்பல பிதற்றல்கள் . . !
நீர் இல்லா நதி கரை
மணல் சூடாய் நான் . . !
நதி வற்ற மணல் அள்ளும்
அரக்கர்களுக்கு புரியாத
மணலின் குமுறல்களாய்
என் பிதற்றல்கள் . . !
நிரப்ப படாத தருணங்களிலும்
தாய்மையுணர்வோடு தேடிவந்து
நதி மடி அமரும் மனிதர்கள் போல்,
எனக்கமைந்த நண்பர்கள் . . !
எங்கள் வாழ்க்கையை மீண்டுமொரு
பிரதியெடுத்து அலசி கொள்கிறோம் . . ,
வாத்சல்யங்கள் வாழ்க்கையானால் ,
வற்றாத ஜீவநதி தான் . . ! 

நீண்டதொரு சங்கதி . . .

காய்ந்து போன காயத்தின்
தழும்பொன்றிலிருந்து ஒழுகும்
செந்நீர் சகதியாய் ,
நீண்ட நாட்கள் பிறகு,
எடுக்க பட்ட என் எழுத்தாணியின்
நீண்டதொரு சங்கதி . . .
அவ்வப்போது கனாக்குள்
வந்தென்னை வீழ்த்திச்சென்ற
வெண்ணிலாவின் மென் அன்பிற்காய்
பத படுத்திய பேனாவின்
நீண்டதொரு சங்கதி . . .
பாரினில் கண்ட சொந்தமனைத்தும்
ஏய்த்தேய்த்து என்னை வீழ்த்த ,
என் கைப்புகுந்த கள்வனின்
நீண்டதொரு சங்கதி . . .
" கையளவு நிற்கும் கைபேசி வந்ததினால்,
நான் உன் கைமீறி போனதென்னோ ?
உன் கையினுள் நின்ற என்
கண்ணீரில் காயமாற்றிக்கொண்டாய்,
பின்பேன் கையை விடுவித்து
என்னை விட்டாய் . . ? ? ? "

பெயரில்லா பறவை . .

மரத்து போன தழும்பொன்றை
வெண் சிறகினுள் தாங்கியே,
பறவையாக முயற்சிக்கிறேன்,
இருட்கூண்டு ஒன்றினுள் இருந்தே . . !

விற்க பட்ட குஞ்சுகளுக்கு
மத்தியிலே பெயரில்லா பறவையாய்
புதரினுள் சிக்கி,
வலசை போய் தோற்று . .

பெயரில்லா பறவையாய் ,
என் குடில்  தேடி ,
இருட்டினுள் இடறி ,
இருட்கூண்டில் சவமாகி . . .

பின்பு
மரத்து போன தழும்பொன்றை
வெண் சிறகினுள் தாங்கியே,
பறவையாக முயற்சிக்கிறேன்,
இருட்கூண்டு ஒன்றினுள் இருந்தே . . !

தீ தந்த காயத்திற்கு,
என் சிறகை கொண்டு களிம்பு,
இங்கு நான் கொண்ட காயத்திற்கு,
ஏதாவது கிடப்பிலுண்டோ கொலைக்கருவிகலின்றி ? 

வியாழன், 21 ஜூலை, 2016

என் பேனா

எனக்கும் எழுத்துக்கும்
வெகு ஜென்ம பந்தம்.
கவிதைகளுக்கு கருவாகி,
எண்ணங்களை உருவாக்கி,
எழுத்துலகில் சஞ்சரிக்க 
என் பேனாயிருக்க,
என் உலகில்,
நான் . . ! 😊

செவ்வாய், 26 ஜனவரி, 2016

நகையொளி தொலைத்த அவளுக்கு . . .

நம்மை காக்க விடைபெற்ற வீரர்களுக்கு 
விருந்தோம்பல் நிகழ்ச்சி வேண்டியதில்லை.
ஊடகங்கள் உதடுவழி இவர்கள் 
உமிழ படவில்லை - நல்லது தான்.
என்றேனும் இவர்களின் நினைவு 
நம்முள் இருக்குமோ - சந்தேகம் தான்!
இருப்பினும் காக்கின்றனர் ,
நீரும் நானும் யாரென்றே யறியாத 
போதிலும் உயிரையே தருகிறார்கள் - அவளோ,
தன் உயிரை தந்து உயிரோடு கலங்குகிறாள்!
கணவனேனும் பந்தத்தில் களவு 
போன தன கொலுசொலி தேட முடியாது 
மௌனமாய் அமைகிறாள் !
ஊடகங்கள் உதடுவழி இவர்கள் 
உமிழ படவில்லை - நல்லது தான்.
ஆனால் நீயும் நானும் ஏன் கதைப்பதில்லை 
இராணுவம் எனும் கடமையே 
ந்தியகண்ணியவான்களை பற்றி ?
சரித்திரத்தில்   பெயர்சொல்ல  
 யாரே   உள்ளார் - நீயும் நானும் அன்றி ?
இந்தியத்துவம் தொலைத்த 
மனித விகாராமாய் வேண்டாம் 
நீயும் நானும் - நாட்டினை மதிப்பது 
நமது பெருமையே . . .
குடியரசு தின வாழ்த்துக்கள் !

அவன் . . . !

குளிர்ந்த நீர் தேக்கத்தில்
அவன் முகம் - தன் 
தாகம் தணிக்க நீர் அள்ளினால்,
கலையும் நீர் சுமந்த கரு . . 
வேண்டாம் ,
அவன் முகம் கண்டே
தாகத்தோடு நிற்கட்டும்
அவர்கள்....!

செவ்வாய், 23 ஜூன், 2015

நினைவுகளில் நின்ற ஞாபகங்கள் . . !

குழந்தை பருவத்தினில் 
தாய் சேய் போல்,
நமக்காக நாம்,
நாம் இருவரும் !

சிறிது வளர்ந்த பின்,
நீ பெரியவனா, 
நான் பெரியவளா 
என்று  செல்ல சண்டைகள்! 

சின்ன சீண்டல்களும் 
செல்ல சிணுங்கல்களும்,
கண்ணீர் மல்க 
சிதறவிடும் சிரிப்பலைகளும்,
உரமாய் நம் உறவிற்கு !

கால சக்கிரம் 
வேகமாய் சுழல்கையில்,
அவர்தம் வாழ்கை பாதையில் 
தொடங்குகிறோம் பயணத்தை!

ஆனால்,
எனக்கும் நம்பிக்கையுண்டு,
ஒரு நாள்,
உலகம் இருண்டாலும்,
கனவுகள் கலைந்தாலும்,
உறவுகள் சிதறினாலும்,
தனிமை எனக்கென்று எண்ணுகையில்.
காதினில் தீண்டும் உன் கேலிகள்,
பின் திரும்பி காண்கையில்,
கரம் விரித்து காத்திருப்பாய் 
எனை கையில் ஏந்த ! ! !

To my Beloved Brother Dr.Raj Kailash Mohan ! <3 p="">

செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

கண்ணகி - மாதவி

மந்தஹாசம் சிந்தும்
மாதவி இல்லையெனில்
கற்புக்கரசி என கண்களில்
கனல் கொண்ட கண்ணகியை
நாம் கண்டறிந்திருக்க முடியுமோ....?

சனி, 29 நவம்பர், 2014

கனவறை

வந்து பார் ,
என் கனவறை முழுதும் உன் பிம்பம்..
நிஜத்தில்
நீ எங்கோ, நான் எங்கோ!