திங்கள், 23 மே, 2016

பௌர்ணமி கவிதைகள்

அந்தி மயங்குகையில் ,
ஆடவனான ஆதவன்,
நிலமகளை முத்தமிட்டு பதுங்க,
வெகுண்டெழுந்த நிலா மகள்,
வான வீதியில் வந்துவிட்டாளோ 
ஒற்றை பௌர்ணமியாய்?
நீ பௌர்ணமி !
பௌர்ணமிகவிதைகள்

வெள்ளி, 15 ஏப்ரல், 2016

என் பிள்ளைக்கு அவன் பிள்ளையாய் . . !

சில முறை காற்றோடு தேடுவேன்
சில முறை இருளில் அலறுவேன்
ஒரேயொரு கோர விபத்து ,
புரட்டிபோட்டது அத்துனையும்
திருப்பி போட்டது !

ஆயிரமாயிரம் மனிதர்களின்
நிறத்தை நிஜமாக்கியது,
கண்கள் மட்டும் வறண்ட
குளமாகியது !

ஆண்டொன்று ஓடியது இன்றோடு
கடவுளின் மேல் கொண்ட கோபம்,
பிரார்த்திக்க வழி இல்லை
யாசிக்கிறேன் எமனிடம்
விபத்திற்கோர் விபத்து நேராதோ ?

சாலையில் வண்டிகளின் சத்தம் கேட்டால்
பறக்கும் என் கற்பனை குதிரை!
படியேறி நீ வந்து ,
லூசாடி நீ என்று கேட்பதாய் தோன்றும்.
தோன்றலில் தோற்று போய்
கண்ணீரின் வெப்பமே எஞ்சும் !

நீ இல்லா நாட்களில்
அழுக மறந்து கொண்டேன்,
ஒளிய கற்றுக்கொண்டேன் ,
உள்ளதையும் மறைக்கப்
பழகிக்கொண்டேன் !

நிரந்தர பிரிவில்ல நீ தந்தது,
எங்களுக்கு  நினைவிருக்கும் வரை,
நெஞ்சில் நீ தான் துடிப்பாய்.
இருளிலும் நிழலாய் இருப்பாய் . . !

எதுவும் மறக்கவில்லை,
பிஞ்சு இதழாய் உன் கால்கள்,
கவரும் உன் சிரிப்பு,
உன் கடவுள் வேடங்கள்,
உன்னோடு சண்டையிட்ட தருணங்கள்,
உன்னோடு சாப்பிட்ட உணவுகள்,
நீ கற்று தந்த சமையல்,
நீ காண்பித்த பாதை,
உன்னோடான கடைசி பேச்சு,
குளிர்பெட்டியில் கண் மூடிஇருந்த நீ,
இரும்பு கைவண்டிமேல் ,
வெண்ணிற துணி கட்டிய
உன் உடல் ,
என் கைகளில் கடைசியாய் நின்ற
உன் கால்கள் ,
விறைத்திருக்கும் உன் மார்பில்,
அப்பாயிட்ட தீ,
தேற்ற வழியற்று
மயங்கிய அம்மா,
எரியும் நெருப்பிற்கு
உன்னையே இரையாக்கிய நான்,
ஏதும் மறக்கவில்லை . . .

எதை தேடி அவசரமாய் சென்றாய் ?
யாரை காண விரைந்தோடினாய் ?
விடையில்லா பல வினாக்களும் ,
விலையில்லா நமது பாசமும்,
பல விசனங்களோடு நானும்
அனாதையாய் இன்று . . !

தமயனாய்,
தாயாய்,
தோழனாய் ,
தந்தையாய் ,
சர்வமுமாய் இருந்த
என் பிள்ளையே ,
இனி எப்பிறவியில் காண்பேன் ?

என் பிள்ளைக்கு அவன் பிள்ளையாய் நான் எழுதுவது . . . ஏப்ரல் 16 தெய்வத்திரு DR ராஜ் கைலாஷ் மோகனின் நினைவு நாள் . . !

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

எந்தன் நிழலின் நிஜத்திற்கு...


நிஜம் தானே கேளடா  - எந்தன்
நினைவெல்லாம் நீயடா!
எங்கோ உன் முகம் கண்ட ஞாபகம்
என்றோ உன்னுடன்  வாழ்ந்த ஞாபகம் !
எந்தன் இதய கடலில்
வீசும் புயற்காற்றில்
சிறகனேன் - நான்
ஒற்றை சிறகனேன்!
சுடும் தீயில் மெழுகானேன்
அணையும் மெழுகானேன்!
தேரில் வந்த தேவதைஎன - தங்க
தேரிலே வந்த சின்ன தேவதைஎன
எனை தலையில் வைத்தாடி;
தேரோட்டம் நிகழும் முன்னே -ஏனடா 
எடுத்தாய் நீ இறுதி ஓட்டம்?
நீ விதைத்த ஞாபக விதைகள் - எந்தன்
மனத்தோட்டத்தில் - உந்தன் நினைவு தளிர்கள்,
திரும்பி பார்க்கையிலே மரமாய் அசையுதடா;
பெரிதோர் மரமாய் அசையுதடா... 
நீ எனை பிரிந்தார் போல் - ஆம்
சொல்லிக்கொல்லாம் நீ எனை பிரிந்தோடியது போல்
காலமும் இங்கே விரைந்தோடுதடா !
நம் வாழ்க்கையும் ஓர் கதை ஆனதடா!
என் கண்ணீர் துளிகளில் - நான் சிந்தும்
செந்நீர் துளிகளில் ஈரம் என்றும் வாழுமடா!
பாரினிலே நீ மீண்டும் வந்தால் - தாயாக
எந்தன் தலை கோதும் தாயக - நானும்
உன் மடி தவழும் சேயாக மீண்டும்
ஓர் ஜனனம் கேட்பேன்! 
அப்பிறவியிலே
மரணதேரில் உனக்குமுன்
நான் நடந்து உன்னை அழைக்க எண்ணினேன்!
அந்தோ!!
நான் ருசித்த வலி - உன் பிரிவால்  
நான் புசித்த வேதனை வேண்டாமடா உனக்கு!
இருவரும் சேர்ந்து செல்வோம் சோர்வாகாமல்..!!!


செவ்வாய், 26 ஜனவரி, 2016

நகையொளி தொலைத்த அவளுக்கு . . .

நம்மை காக்க விடைபெற்ற வீரர்களுக்கு 
விருந்தோம்பல் நிகழ்ச்சி வேண்டியதில்லை.
ஊடகங்கள் உதடுவழி இவர்கள் 
உமிழ படவில்லை - நல்லது தான்.
என்றேனும் இவர்களின் நினைவு 
நம்முள் இருக்குமோ - சந்தேகம் தான்!
இருப்பினும் காக்கின்றனர் ,
நீரும் நானும் யாரென்றே யறியாத 
போதிலும் உயிரையே தருகிறார்கள் - அவளோ,
தன் உயிரை தந்து உயிரோடு கலங்குகிறாள்!
கணவனேனும் பந்தத்தில் களவு 
போன தன கொலுசொலி தேட முடியாது 
மௌனமாய் அமைகிறாள் !
ஊடகங்கள் உதடுவழி இவர்கள் 
உமிழ படவில்லை - நல்லது தான்.
ஆனால் நீயும் நானும் ஏன் கதைப்பதில்லை 
இராணுவம் எனும் கடமையே 
ந்தியகண்ணியவான்களை பற்றி ?
சரித்திரத்தில்   பெயர்சொல்ல  
 யாரே   உள்ளார் - நீயும் நானும் அன்றி ?
இந்தியத்துவம் தொலைத்த 
மனித விகாராமாய் வேண்டாம் 
நீயும் நானும் - நாட்டினை மதிப்பது 
நமது பெருமையே . . .
குடியரசு தின வாழ்த்துக்கள் !

அவன் . . . !

குளிர்ந்த நீர் தேக்கத்தில்
அவன் முகம் - தன் 
தாகம் தணிக்க நீர் அள்ளினால்,
கலையும் நீர் சுமந்த கரு . . 
வேண்டாம் ,
அவன் முகம் கண்டே
தாகத்தோடு நிற்கட்டும்
அவர்கள்....!

பௌர்ணமிகவிதைகள்‬

தரை வழி நீயும் நானும்,
தொலை தூரத்தில் ஆனாலும்,
விழி வழி ஒரே இடத்தில் தான்!
விழி புகுந்து ,
உயிரினில் தொய்ந்து,
நம்மை இணைக்கும் பாலமாய்,
நிலவின் ஒளி.
நீ பௌர்ணமி…!
‪‎