சனி, 25 ஏப்ரல், 2015

உறக்கம் - அமைதியாய்

சுப்புலக்ஷ்மி - ஈஸ்வரய்யரின் பௌத்திரனாய்,
பாரத்வாஜ கோத்ரத்தின் கோமேதகமாய்,
பூச நக்ஷத்திரத்தில் பிறந்து,
மோகன் இலக்குமியின்
கனிஷ்ட புதல்வனாய்
ஜனித்த ஜீவன் - சுந்தர ஹயக்ரீவ ஷர்மா!

பெற்ற தாய் பரிதவித்து நிற்க,
வளர்த்த தந்தை ஊமையாய் அழ
உடன் பிறப்பாய் நான் ஓரமாய் நிற்க ,
உற்ற சொந்தங்கள் உயிர் வலிக்க,
ஊர் மக்கள் கூடி ஓங்கி அழ ,
நண்பர்கள் நாடி துடிக்க,
அழகான ஓவியம் - நீ ,
நிறைவான காவியமாய்,
அங்கே
அமைதியாய் உறங்குகிறாய் !













பூங்குவியலாய் எம்  வாழ்வினில் வந்தாய்,
உன்னுடன் இருந்த பொழுதெல்லாம்
வசந்தமாய் மலர்ந்ததடா
ஆனால் ,
இரவின் முன்பே
இடையினில் மறைந்தாய்
இருள் சூழ நாங்கள் அனைவரும்
நிலைகுலைந்து நிற்கிறோம்.

இன்னும் நம்ப முடியாத வார்த்தை
"நீ மறித்து விட்டாய்"
இது அல்லவோ "சொல்லடி"
மருந்தென்று ஒன்று இல்லா
நோயினில் நொடிந்தே போகின்றோம் !

குழந்தையாய் பிறந்து
குழந்தையாய் வளர்ந்து
குழந்தையாய் மரித்தாயோ . ?
இல்லையே,
நீ மருத்துவனாய் - கைராசி
மருத்துவனாய்
மரித்ததாய் சொல்கிறார்களே !

மந்திர சிரிப்புக்கு சொந்தக்கரரன்
தந்திர பேச்சில் வித்தைக்காரன்
ரோஷத்தின் குத்தகைக்காரன்
பல்லவன் என்ற
புதியதொரு பேருக்காரான் . . !

ருசி அறிந்து சமைத்து
மனம் அறிந்து பேசி
நோயறிந்து அருமருந்திட்டு
பண்போடும் அன்போடும்
பழகும் நேசக்காரன்  . . !

இதுவரை எந்த பழிசொல்லுக்கும் ஆளாக நீ
கண்ணீரில் கரையா காயத்தை தந்து
புத்திர சோகத்தில் தள்ளிய
பழிச்சொல் ஏந்தி சென்றதேனோ?

வெண்ணிற மேல் அங்கி இட்ட
உமது கம்பீர தோற்றம் ,
அதோ, வெண்ணிற துணியால்
மூடப்பட்ட சடலமாய் . . .
கழுவிக்கொன்டாலும்
கரை படிந்த காயத்தோடு
இதயம் துடித்துக்கொண்டே இருக்கிறது!

கலங்கரை விளக்கமாய்
நீ இருப்பாய் - கரை கடந்து மீள்வோம்
யாம் என எண்ணுகையிலே
அனைவரையும் துன்ப கடலில்
மூழ்கடித்து ஏமாற்றியதேனோ . . ?

இருமுடி சுமந்து 18 படி கடந்து
மே 16 அவன் தரிசனம் காண
இருந்தாயே என் கண்ணா !!
பொறுமை அவனுக்கு இல்லையா ?
அல்லது அவனை சேர
அவ்வளவு அவசரமா உனக்கு?
ஏப்ரல் 16 அவன் திருவடி
அடைந்து விட்டாயே...
தனியே தாயை தவிக்கவிட்டு
கானகம் நீ சென்றாய் ஐயப்பா!!

துணை என நீ நினைத்தது
வினையை - உனக்கே பெரும்
வினையாய்  -  காலனின் கை போல் 
எங்களுக்கெல்லாம் தீரா


வினையை தந்ததேனோ?

தவழும் கண்ணனாய்
தரணியில் தன்னிகறில்லா
துயர் துடைக்கும் தோழனாய்
தீர பிணி தீர்க்கும் மருத்துவனாய்
தோள் கொடுக்கும் தமயனாய்
வாழ்ந்திட்டாய் நீ

துள்ளி திரிந்த உன்னை
அள்ளி கொடுத்துவிட்டோம்,
உன்னை எண்ணா
ஓர் நாளும் இருக்கபோவதில்லை ,
நீ
எந்தன் இல்லத்தின்
தெய்வமன்றோ !


இதோ,
எங்கள் உணர்வுகள்
உறங்கிவிட்டது உன்னோடு
ஆனால் உந்தன் நினைவுகள்
எங்களுடன்
இன்றும்
என்றும்
உயிர்ப்போடு . . !

வாலி முதல் mandolin ஸ்ரீநிவாஸ் வரை வரைந்த அஞ்சலி இத்துனை வலிக்கவில்லை. . . உனக்கென வரையும் பொழுது பேனா கண்ணீர் சிந்துகையில் இதயம் செந்நீர் சிந்துகிறதே . . . !

கவிதாஞ்சலி தெய்வத்திரு Dr;Sundharahayagreeva Sharma @ Dr.Raj Kailash Mohan.