ஞாயிறு, 11 ஜனவரி, 2015

பனியும் பெண் பாவையும் #30

தொலைதூரத்தில் இருப்போரை
தொலைபேசியில் அழைக்கலாம்
என்னோடு தொடர்ந்து வந்த
பனிபோர்வையை
எப்படி அழைப்பேன் நான்?
ஆதலால் வரவேற்கிறேன்,
பனிப்போர்வையில் ஒளிந்திருக்கும்
(பே)தை பெண் பாவை அவளை.

பனியும் பெண் பாவையும் #29

மார்கழி பனியின் மேல்
பதம் வைத்து
அழகாய் வரும் தை,
என் மை வரைந்த
பெண் பாவை . . !

பனியும் பெண் பாவையும் #28

விடியலுக்கு நகரும் பூமியில்
பனிதுளியோடு பயணித்த பாவை,
அடுத்து வரும் தை அழகை காண,
ஓசையற்ற தன் பாதச்சுவடுகளோடு
பயணித்தே செல்கிறாள்  - சலசலக்கும்
உதிர்ந்த இலைகளின் மத்தியில்.

பனியும் பெண் பாவையும் #27

பனித்துளியை தேடி
மகிழம் பூ மரத்தடியில் காத்திருந்தாள்
பெண் பாவை அவள்.
இலையில் நுனியிலிருந்து
தெறித்த பனிதுளியால்
மலர்ந்தது மகிழம் மலர் மட்டுமல்ல
 மகிழ்ச்சியும் தான் !

பனியும் பெண் பாவையும் #26

சுகித்த தருணங்கள் மறந்து
வெண்பனி போர்வையில்
சுகித்த தருணங்கள் மறந்து
பனித்துளியுடன்
பயணித்து வந்த பாதையை கண்டபடி
பறக்க தயாராகிறாள்
பெண் பாவை அவள் 

சனி, 10 ஜனவரி, 2015

பனியும் பெண் பாவையும் #25

அதிகாலை விழித்தெழும்
பெண்  பாவையை வரவேற்க
ஆவலாய் தவம் இருக்கும் பனித்துளி,
இனிஅவளுடன் ஓர் நேர்காணல்.

பனியும் பெண் பாவையும் #24

தன் கந்தர்வ கண்ணனிற்கென ஏங்கி
தனிமையில் தகித்த
பெண் பாவையின் தேக சூட்டில்
காய்ந்துகொண்டிருக்கிறது
அந்த புல்லின் நுனியில் உள்ள
ஓர் பனித்துளி . . .!

பனியும் பெண் பாவையும் #23

நிலவில்லா அமாவாசையிலும்
பூவிதழில் பனித்துளி
நிலவின் நினைவால்
பெண் பாவை சிந்திய
 கண் நீர் துளி !

பனியும் பெண் பாவையும் #22

நிலா முகமும் - குங்கும
பொட்டாய் சூரியனும்
நேர்காணும் நிமிடம் அதில்
வெண்மதி விட்ட பனியை
தாவியணைத்த செங்கதிரோனை
ரசித்தே முகம் சிவந்தாள்
பெண் பாவை அவள் . . !

புதன், 7 ஜனவரி, 2015

பனியும் பெண் பாவையும் #21

பாவைக்கும் பனித்துளிக்கும் ஊடல்
அதனால் தான்
பெண்ணவளின் பவழ இதழ் விட்டு
பூவிதழை அலங்கரித்ததோ பனி துளி..

பனியும் பெண் பாவையும் 20

நாளுக்கு நாள் 
நலிந்துபோகும் 
நிலவின் கண்ணீராய் 
பனித்துளி!
நெஞ்சம் பதைக்க 
காத்திருக்கும் 
பெண் பாவைக்கு  
கவிதை துளி!

பனியும் பெண் பாவையும் #19

எட்டா தூரத்தில் இருந்தாலும் - மனதுக்கு
எட்டிய தூரத்தில் எழும்பும் நினைவலைகள்
அதில் மூழ்கி போகும் பனித்துளியாய்
முத்தம் தேடும் முத்தான  பெண் பாவை அவள்!

செவ்வாய், 6 ஜனவரி, 2015

பௌர்ணமி கவிதைகள் #9

சொன்னது யார்
நானும் நீயும்
தனித்தனியே இருக்கிறோம் என்று ?
அதோ ,
உன்  இருவிழி ரசிக்கும்
முழுநிலவை - அதே
பௌர்ணமி நிலவை
எனது விழிகளும் உள்வாங்குதே
பிரபஞ்சத்தில்
நீயும் நானும்
அருகருகே தான் !
#நிலவின் நிகழ்வுகள்


வியாழன், 1 ஜனவரி, 2015

பனியும் பெண் பாவையும் #18

விடியற்காலை
கதிரவனின் கீற்றுகளுக்கு
இதழ் விரிக்கும் பனி தாங்கிய
வெண்மலர் போல்,
துள்ளி வந்த இளங்கன்றிற்கு
மடி விரித்தாள் பெண் பாவை அவள்!
அவள் - தேவகியோ யசோதையோ
அவள் - கோசலையோ கைகேயியோ!
அவள் - அம்மா !