வியாழன், 24 டிசம்பர், 2015

பௌர்ணமி கவிதைகள்,

வானுலவும் பேரேழிலே,
உனை கண்டதும்,
கருவுற்ற என் விரல்கள்,
கவிதை குழந்தைகளை,
நூதன உலகில் பிரசவித்து விட்டது!
நீ பௌர்ணமி . . !

வியாழன், 26 நவம்பர், 2015

பௌர்ணமி கவிதைகள்,

உன் உதடிலிருந்து கசிந்த ஒரு துளி பால் - நீ 
பிள்ளையாய் இருந்த சமயம் - உன் உதடிலிருந்து 
கசிந்த ஒரு துளி பால் - உன் 
அன்னை புகட்டிய ஒரு துளி பால் - வழிந்து 
விண்வெளியில் மோக்‌ஷமடைந்ததோ - 
பௌர்ணமி நிலவாய் ?
நீ என் பிள்ளை நிலா!

பௌர்ணமி கவிதைகள்-016

என் கண்ணீரில் கரைந்து அமாவாசை ஆன நிலவு, 
இன்று நீ கற்பித்த நேசத்தால் 
விண்ணில் ஆடும் வானின் மீதே!
நீ பௌர்ணமி!

‎பௌர்ணமி கவிதைகள்‬

இரவின் வானத்தை 
கோப்பையினில் நிரப்பி,
உன் நெஞ்சமெனும் பூமியில்
என் உயிரெனும் வேர் பதித்து,
நிலவின் ஒளிகொண்டு ,
உன் விழிதனில் தெரியும்
விண்மீன் கூட்டத்தை ,
என் நினைவிலிருத்தி ,
சுகித்திட ஆசை தான் . . .
நீ பௌர்ணமி . . !

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

கவிஞர்கள் தினத்திற்காக என் படைப்பு . . !

அநாதை குழந்தையாய் என் உள்ளம்,
உனக்கென ஏங்குகிறது . . !
வெளிச்சம் தேடும் விட்டில் பூச்சியாய் 
உன்னை காண தவிக்கிறது கண்கள் . . !
நான் உன்னை பிரியாவிடிலும் 
நீ என் அருகினில் இல்லை . . !
நீ காற்றாய் கலந்திருக்கிறாய் ,
உன்னை சுவாசித்தே வாழ்கிறோம் யாம் . . !
உறவாய் நீ இல்லாது பயணிப்பது  ,
குருடனை நிறம் கேட்டறிவது போல் உள்ளது . . !
இருந்தும் பயணிக்கிறேன் ,
நீ விட்டு சென்ற தடயங்களை தேடி,
என் விழிகளில் உன் ஒளி கொண்டு ,
தொடர்கிறேன் உனக்காகவே . . !
என்றாவது ஓர் நாள் ,
நாதமாய்,
பிம்பமாய்,
ரீங்காரமாய் ,
ஒளியாய்,
ஒலியாய்,
மழையாய்,
என் மழலையாய் ,
நீ வருவாயென - மீண்டும் 
நீ வருவாய் - ஒளியேற்றுவாய் 
இருட்டண்டாது - என் வாழ்வினில் 
ஒளியேற்றுவாய் என . . . ! 

ஒளி எனும் தலைப்பினில் இந்த வருடம் கொண்டாடப்படும் கவிஞர்கள் தினத்திற்காக என் படைப்பு . . !

சமர்ப்பணம் : என் உயிராய், மழலையாய், தமயனாய், தந்தையாய், தோழனாய் இருந்த, இருக்கும் என் ராஜ் கைலாஷ் மோகனிற்கு 

செவ்வாய், 28 ஜூலை, 2015

எங்கள் நாட்டில் இலையுதிர் காலம் . . .

எங்கள் நாட்டில் இலையுதிர் காலம்
இப்பொழுது 
எங்கள் நாட்டில் உதிர்காலம் !
"அறிவியசியல்" விருக்ஷத்தின்
கிளையுதிர்காலம்!
மெல்லிசை  விருக்ஷத்தின்
கிளையுதிர்காலம்!
எங்கள் குடும்ப விருக்ஷத்தின்
கிளையுதிர்காலம்!
எப்படி போகுமோ இனி எங்கள் எதிர் காலம் !

கடவுளுக்கு தன்னம்பிக்கை வேண்டுமோ?
கடவுளுக்கு விஞ்ஞான தாகமோ ?
கடவுளுக்கு விவசாய மோகமோ ?
விண் தொட வேண்டுமென
நின் கனவை நெனவாகிய கர்வமோ?

வழி நடத்த வேண்டிய நீர்,
விழிகளை ஈரமாக்கி,
வழியிலேயே விட்டு சென்றது ஏனோ. ?
எங்களை கனவு காண சொன்னீர் ,
ஏங்கி நிற்கிறோம்
இது கனவாக
ஒரு கெட்ட கனவாக
இருக்க கூடாதா என்று !!!
தமிழனை தலை நிமிர செய்தாய்,
இளைஞனை கனவு காண செய்தாய்
குழந்தையை கொஞ்சி மகிழ்ந்தாய்
ஒளி இழந்த கண்களோடு,
எங்கு காண, கனவை...?

அதோ,
இந்திய தாயும்
தமிழ் தாயும்
இயற்பியல் தாயும்
ஒரு சேர அழுகிறார்கள்
எங்களோடு . . .

இந்த ஆண்டில் என்னை உலுக்கிய மூன்றாவது மரணம் :: வலிமை இன்றி வெறுமையாய் என் பேனா . . !

வியாழன், 16 ஜூலை, 2015

மன்னவா . . !

இசை தாயின் புத்திர சோகத்தை
துடைக்க வழி தெரியாமல் அவள்
கண்ணீரினிலே மூழ்கி போகிறோம் நாங்கள்.

எக்காலத்திலும் இறவா இசை தந்த வேந்தே,
உமது இசை எம்முடன் இருக்கையிலே
நீவிர் எம்மை விட்டு நீந்தி சென்றதெனோ?

காவியரசரையும் கானவேந்தனையும்,
மக்கள் தலைவரையும், நடிப்பின் திலகத்தையும்
கண்டு கச்சேரி காண்பிக்க சென்றாயோ ?

விண்ணுலகின் தலைவனான கடவுளே,
நீ, இவரை இசைத்தாய்க்கு
பரிசலிக்காமல் கடனாய் தந்தாயோ?

எங்கள் குடும்பத்தின்
இசை செல்(ல)வத்தை திருப்பிவிட்டோம்,
கண்ணீரை வட்டியாய் கொடுத்து!

இசை அனாதை ஆகின்றது,
இசைக்குடும்பம் அனாதை ஆகின்றது,
சங்கீதத்தோடு இங்கீதம் தெரிந்த
 மன்னவனின் மறைவினிலே,
இசை அனாதையாகின்றது !

மன்னாவனோடு முடிந்தது
ஓர் ஜாம்பவன சகாப்தம் . . .
மெல்லிசை மன்னாவனோடு  - முடிந்தது
ஒரு ஜாம்பவன சகாப்தம்....

விரல் நுனியில் இசை படைத்த வேந்தன்,
இனி தென்றல் காற்றாய்
நமது செவி தீண்டுவார்...

உள்ளத்தில் நல்ல உள்ளம்,
கண்ணீர் மத்தியில் ஊமையாய்
 உறங்கிக்கொண்டிருக்கிறது....

மன்னவனே, (இனி) அழலாமா
கண்ணீரை விடலாமா,
மன்னவா . . !

- அதராஞ்சலி - ஹ்ருதயாஞ்சலி - கவிதாஞ்சலி - கானாஞ்சலி -
இசை மன்னன் , தெய்வத்திரு . விஸ்வநாதன் பூத உடல் மறைவிற்கு . . . !

செவ்வாய், 23 ஜூன், 2015

நினைவுகளில் நின்ற ஞாபகங்கள் . . !

குழந்தை பருவத்தினில் 
தாய் சேய் போல்,
நமக்காக நாம்,
நாம் இருவரும் !

சிறிது வளர்ந்த பின்,
நீ பெரியவனா, 
நான் பெரியவளா 
என்று  செல்ல சண்டைகள்! 

சின்ன சீண்டல்களும் 
செல்ல சிணுங்கல்களும்,
கண்ணீர் மல்க 
சிதறவிடும் சிரிப்பலைகளும்,
உரமாய் நம் உறவிற்கு !

கால சக்கிரம் 
வேகமாய் சுழல்கையில்,
அவர்தம் வாழ்கை பாதையில் 
தொடங்குகிறோம் பயணத்தை!

ஆனால்,
எனக்கும் நம்பிக்கையுண்டு,
ஒரு நாள்,
உலகம் இருண்டாலும்,
கனவுகள் கலைந்தாலும்,
உறவுகள் சிதறினாலும்,
தனிமை எனக்கென்று எண்ணுகையில்.
காதினில் தீண்டும் உன் கேலிகள்,
பின் திரும்பி காண்கையில்,
கரம் விரித்து காத்திருப்பாய் 
எனை கையில் ஏந்த ! ! !

To my Beloved Brother Dr.Raj Kailash Mohan ! <3 p="">

திங்கள், 8 ஜூன், 2015

பௌர்ணமி கவிதைகள் #14

இருள் பூக்கும் இரவினிலில்
கதிரவனின் முத்தத்துடன்
கருநீல வானில் உலவிடும்
என் கவிதை கண்ணே,
தனித்தாலும் தவித்தாலும்
வெண் பதுமையாய்
மௌன இசையோதும்
முழுமதியே,
நீ பௌர்ணமி . . !

சனி, 25 ஏப்ரல், 2015

உறக்கம் - அமைதியாய்

சுப்புலக்ஷ்மி - ஈஸ்வரய்யரின் பௌத்திரனாய்,
பாரத்வாஜ கோத்ரத்தின் கோமேதகமாய்,
பூச நக்ஷத்திரத்தில் பிறந்து,
மோகன் இலக்குமியின்
கனிஷ்ட புதல்வனாய்
ஜனித்த ஜீவன் - சுந்தர ஹயக்ரீவ ஷர்மா!

பெற்ற தாய் பரிதவித்து நிற்க,
வளர்த்த தந்தை ஊமையாய் அழ
உடன் பிறப்பாய் நான் ஓரமாய் நிற்க ,
உற்ற சொந்தங்கள் உயிர் வலிக்க,
ஊர் மக்கள் கூடி ஓங்கி அழ ,
நண்பர்கள் நாடி துடிக்க,
அழகான ஓவியம் - நீ ,
நிறைவான காவியமாய்,
அங்கே
அமைதியாய் உறங்குகிறாய் !













பூங்குவியலாய் எம்  வாழ்வினில் வந்தாய்,
உன்னுடன் இருந்த பொழுதெல்லாம்
வசந்தமாய் மலர்ந்ததடா
ஆனால் ,
இரவின் முன்பே
இடையினில் மறைந்தாய்
இருள் சூழ நாங்கள் அனைவரும்
நிலைகுலைந்து நிற்கிறோம்.

இன்னும் நம்ப முடியாத வார்த்தை
"நீ மறித்து விட்டாய்"
இது அல்லவோ "சொல்லடி"
மருந்தென்று ஒன்று இல்லா
நோயினில் நொடிந்தே போகின்றோம் !

குழந்தையாய் பிறந்து
குழந்தையாய் வளர்ந்து
குழந்தையாய் மரித்தாயோ . ?
இல்லையே,
நீ மருத்துவனாய் - கைராசி
மருத்துவனாய்
மரித்ததாய் சொல்கிறார்களே !

மந்திர சிரிப்புக்கு சொந்தக்கரரன்
தந்திர பேச்சில் வித்தைக்காரன்
ரோஷத்தின் குத்தகைக்காரன்
பல்லவன் என்ற
புதியதொரு பேருக்காரான் . . !

ருசி அறிந்து சமைத்து
மனம் அறிந்து பேசி
நோயறிந்து அருமருந்திட்டு
பண்போடும் அன்போடும்
பழகும் நேசக்காரன்  . . !

இதுவரை எந்த பழிசொல்லுக்கும் ஆளாக நீ
கண்ணீரில் கரையா காயத்தை தந்து
புத்திர சோகத்தில் தள்ளிய
பழிச்சொல் ஏந்தி சென்றதேனோ?

வெண்ணிற மேல் அங்கி இட்ட
உமது கம்பீர தோற்றம் ,
அதோ, வெண்ணிற துணியால்
மூடப்பட்ட சடலமாய் . . .
கழுவிக்கொன்டாலும்
கரை படிந்த காயத்தோடு
இதயம் துடித்துக்கொண்டே இருக்கிறது!

கலங்கரை விளக்கமாய்
நீ இருப்பாய் - கரை கடந்து மீள்வோம்
யாம் என எண்ணுகையிலே
அனைவரையும் துன்ப கடலில்
மூழ்கடித்து ஏமாற்றியதேனோ . . ?

இருமுடி சுமந்து 18 படி கடந்து
மே 16 அவன் தரிசனம் காண
இருந்தாயே என் கண்ணா !!
பொறுமை அவனுக்கு இல்லையா ?
அல்லது அவனை சேர
அவ்வளவு அவசரமா உனக்கு?
ஏப்ரல் 16 அவன் திருவடி
அடைந்து விட்டாயே...
தனியே தாயை தவிக்கவிட்டு
கானகம் நீ சென்றாய் ஐயப்பா!!

துணை என நீ நினைத்தது
வினையை - உனக்கே பெரும்
வினையாய்  -  காலனின் கை போல் 
எங்களுக்கெல்லாம் தீரா


வினையை தந்ததேனோ?

தவழும் கண்ணனாய்
தரணியில் தன்னிகறில்லா
துயர் துடைக்கும் தோழனாய்
தீர பிணி தீர்க்கும் மருத்துவனாய்
தோள் கொடுக்கும் தமயனாய்
வாழ்ந்திட்டாய் நீ

துள்ளி திரிந்த உன்னை
அள்ளி கொடுத்துவிட்டோம்,
உன்னை எண்ணா
ஓர் நாளும் இருக்கபோவதில்லை ,
நீ
எந்தன் இல்லத்தின்
தெய்வமன்றோ !


இதோ,
எங்கள் உணர்வுகள்
உறங்கிவிட்டது உன்னோடு
ஆனால் உந்தன் நினைவுகள்
எங்களுடன்
இன்றும்
என்றும்
உயிர்ப்போடு . . !

வாலி முதல் mandolin ஸ்ரீநிவாஸ் வரை வரைந்த அஞ்சலி இத்துனை வலிக்கவில்லை. . . உனக்கென வரையும் பொழுது பேனா கண்ணீர் சிந்துகையில் இதயம் செந்நீர் சிந்துகிறதே . . . !

கவிதாஞ்சலி தெய்வத்திரு Dr;Sundharahayagreeva Sharma @ Dr.Raj Kailash Mohan.

ஞாயிறு, 29 மார்ச், 2015

எம்மக்கள் யார் . ?

வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் கொள்வோம் உறுதியை
வீழ்ந்த சிங்கங்களின் மரணம் சொல்லும் செய்தியை
என்றும் கொள்வோம் எங்கள் செங்குருதியில்..
நாங்கள் தமிழர்கள் என.....

உயர உயர அலை வீசிஎழும் பிரதேசம்
எங்கள் உணர்வலைகளை தாங்கிய தேசம்
தமிழ்  மட்டுமே எங்கள் முதல் சுவாசம்
அதனால் கொண்டனர் எம்மேல் த்வேஷம் !

உணவில்லை அதை உணரவில்லை
மனம் இல்லை வேறு வழி தேடவில்லை.
ஆனாலும் கொண்டுள்ளோம் உறுதியை
எங்கள் தாய் மண்ணிற்காக சிந்துவோம் குருதியை!


எம் மக்கள் உருகுகின்றனர் எம் மக்கள் அழுகின்றனர்
அலைகளின் ஓசையை விட அலறலின் ஓசை அதீதமாய்
ஒரே நாள் உயிர்தெழுந்த ஏசு கடவுலேனில்
ஒவ்வொரு நாளும் உயிர்த்தெழும் எம் மக்கள் யார்?






சனி, 21 மார்ச், 2015

பௌர்ணமி கவிதைகள்

வானம் வறண்டதாய் இருக்கையில் ,
எங்கிருந்து வருவாள் கவிக்குயில் ?
நிழலாகி சென்ற நிலவு,
நிஜமாய் திரும்பும் வரை !
என் எழுத்து புதையுண்டு கிடக்கிறது
நிலவின் தேகத்தினுள்ளே . . !

திங்கள், 16 மார்ச், 2015

சிந்து வெளியும் இந்து தர்மமும்

சிந்து வெளி யின் கலாச்சாரத்தையும்
இந்து தர்மத்தின் ஆச்சாரத்தையும்
கொண்ட நாம் - எப்படி மறந்தோம் ,
ஈழம் என்றொரு இனமுண்டு
தமிழ் என்றொரு மொழியுண்டு
இப்புவிதனிலே அன்றி
வேறொரு கிரகதினில் அல்லவென்று ! !



வியாழன், 5 மார்ச், 2015

பௌர்ணமி கவிதைகள்

நாள் கடக்கையில் 
நூலாகி , நிழலாகி,
ஒளியும் நிலவிற்கு தான் 
காதலர்கள் ஆயிரம் - என்றோ ஓர் நாள்
 நிழல் நிஜமாகக்கூடும் 
பிறை பெளர்ணமியாகும் 
என்ற நம்பிக்கையில் . . !

பௌர்ணமி கவிதைகள்

பௌர்ணமி நிலவும்
என் தோலினை சுடுகிறது
என்று நீ பௌர்ணமி என்றாயோ . . !

ஹைக்கூ

என் கண்களிடமா 
உன் இருப்பிடமா 
குறை எங்கு கடவுளே...?

வாக்கு

நெருப்பு என்றால் தீயாய் 
சுடுவதில்லை நாக்கு - பின் ஏன்
சருகாக்கிறது வாழ்வை
பலரின் பொய் வாக்கு ...?

பௌர்ணமி கவிதைகள் #10

பிறைகளும் நட்சத்திரங்களும்
இருந்தென்ன பயன் - கருநீல 
வானில் கதியற்ற "ஒற்றை" 
நிழலான நிலவு !

வியாழன், 26 பிப்ரவரி, 2015

அமாவாசை .

முத்தம் வாங்கிய மயக்கத்தில்
 நிலவு தன்னை மறைதுகொண்டது.
அமாவாசை .

என் காலத்தை

உன்னில் தொலைந்து
உன்னிடமிருந்து தொலைவாய்
போனதை எண்ணியே கடக்கிறேன்
என் காலத்தை . . .!

செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

நிதர்சனம்

மனதின் தேடல்
சில தருணங்களில்
உடலில் முடியும் !

ஈழ பைங்கிளி

கடல் தாண்டி நின்றாலும்
பாவம் அவள் நிலத்தின்
 மடியில் வீழ்ந்து விடுகிறாள்
வானில் ஓர்
விமானம் பறக்கையிலே...
அவள் - ஈழ பைங்கிளி !

வித்தியாசம்

ஒன்றோடு ஒன்று
உரையாடிய உதடுகள்
இப்பொழுது தங்களுக்குள்
உறவாடுகின்றன . . .
அது சரி,
காதலுக்கும் காமத்திற்கும்
சிறு கோடுகள் தான்
வித்தியாசம் . . .

கண்ணகி - மாதவி

மந்தஹாசம் சிந்தும்
மாதவி இல்லையெனில்
கற்புக்கரசி என கண்களில்
கனல் கொண்ட கண்ணகியை
நாம் கண்டறிந்திருக்க முடியுமோ....?

ஞாயிறு, 11 ஜனவரி, 2015

பனியும் பெண் பாவையும் #30

தொலைதூரத்தில் இருப்போரை
தொலைபேசியில் அழைக்கலாம்
என்னோடு தொடர்ந்து வந்த
பனிபோர்வையை
எப்படி அழைப்பேன் நான்?
ஆதலால் வரவேற்கிறேன்,
பனிப்போர்வையில் ஒளிந்திருக்கும்
(பே)தை பெண் பாவை அவளை.

பனியும் பெண் பாவையும் #29

மார்கழி பனியின் மேல்
பதம் வைத்து
அழகாய் வரும் தை,
என் மை வரைந்த
பெண் பாவை . . !

பனியும் பெண் பாவையும் #28

விடியலுக்கு நகரும் பூமியில்
பனிதுளியோடு பயணித்த பாவை,
அடுத்து வரும் தை அழகை காண,
ஓசையற்ற தன் பாதச்சுவடுகளோடு
பயணித்தே செல்கிறாள்  - சலசலக்கும்
உதிர்ந்த இலைகளின் மத்தியில்.

பனியும் பெண் பாவையும் #27

பனித்துளியை தேடி
மகிழம் பூ மரத்தடியில் காத்திருந்தாள்
பெண் பாவை அவள்.
இலையில் நுனியிலிருந்து
தெறித்த பனிதுளியால்
மலர்ந்தது மகிழம் மலர் மட்டுமல்ல
 மகிழ்ச்சியும் தான் !

பனியும் பெண் பாவையும் #26

சுகித்த தருணங்கள் மறந்து
வெண்பனி போர்வையில்
சுகித்த தருணங்கள் மறந்து
பனித்துளியுடன்
பயணித்து வந்த பாதையை கண்டபடி
பறக்க தயாராகிறாள்
பெண் பாவை அவள் 

சனி, 10 ஜனவரி, 2015

பனியும் பெண் பாவையும் #25

அதிகாலை விழித்தெழும்
பெண்  பாவையை வரவேற்க
ஆவலாய் தவம் இருக்கும் பனித்துளி,
இனிஅவளுடன் ஓர் நேர்காணல்.

பனியும் பெண் பாவையும் #24

தன் கந்தர்வ கண்ணனிற்கென ஏங்கி
தனிமையில் தகித்த
பெண் பாவையின் தேக சூட்டில்
காய்ந்துகொண்டிருக்கிறது
அந்த புல்லின் நுனியில் உள்ள
ஓர் பனித்துளி . . .!

பனியும் பெண் பாவையும் #23

நிலவில்லா அமாவாசையிலும்
பூவிதழில் பனித்துளி
நிலவின் நினைவால்
பெண் பாவை சிந்திய
 கண் நீர் துளி !

பனியும் பெண் பாவையும் #22

நிலா முகமும் - குங்கும
பொட்டாய் சூரியனும்
நேர்காணும் நிமிடம் அதில்
வெண்மதி விட்ட பனியை
தாவியணைத்த செங்கதிரோனை
ரசித்தே முகம் சிவந்தாள்
பெண் பாவை அவள் . . !

புதன், 7 ஜனவரி, 2015

பனியும் பெண் பாவையும் #21

பாவைக்கும் பனித்துளிக்கும் ஊடல்
அதனால் தான்
பெண்ணவளின் பவழ இதழ் விட்டு
பூவிதழை அலங்கரித்ததோ பனி துளி..

பனியும் பெண் பாவையும் 20

நாளுக்கு நாள் 
நலிந்துபோகும் 
நிலவின் கண்ணீராய் 
பனித்துளி!
நெஞ்சம் பதைக்க 
காத்திருக்கும் 
பெண் பாவைக்கு  
கவிதை துளி!

பனியும் பெண் பாவையும் #19

எட்டா தூரத்தில் இருந்தாலும் - மனதுக்கு
எட்டிய தூரத்தில் எழும்பும் நினைவலைகள்
அதில் மூழ்கி போகும் பனித்துளியாய்
முத்தம் தேடும் முத்தான  பெண் பாவை அவள்!

செவ்வாய், 6 ஜனவரி, 2015

பௌர்ணமி கவிதைகள் #9

சொன்னது யார்
நானும் நீயும்
தனித்தனியே இருக்கிறோம் என்று ?
அதோ ,
உன்  இருவிழி ரசிக்கும்
முழுநிலவை - அதே
பௌர்ணமி நிலவை
எனது விழிகளும் உள்வாங்குதே
பிரபஞ்சத்தில்
நீயும் நானும்
அருகருகே தான் !
#நிலவின் நிகழ்வுகள்


வியாழன், 1 ஜனவரி, 2015

பனியும் பெண் பாவையும் #18

விடியற்காலை
கதிரவனின் கீற்றுகளுக்கு
இதழ் விரிக்கும் பனி தாங்கிய
வெண்மலர் போல்,
துள்ளி வந்த இளங்கன்றிற்கு
மடி விரித்தாள் பெண் பாவை அவள்!
அவள் - தேவகியோ யசோதையோ
அவள் - கோசலையோ கைகேயியோ!
அவள் - அம்மா !