வியாழன், 27 டிசம்பர், 2012

நிலவும் மலரும்

இரவை திறந்த சூரியனுக்கு,
நிலவும் மலரும்
 காதல் புரிந்த காட்சி சிக்கியதோ?
பார்த்த கணத்தில்
வெட்கி சிவந்தானோ ?
என் நிலவே,
வெண் நிலவே,
இதற்கா உன் கண்ணீரை
பூக்களிடம் விட்டு செல்கிறாய்?

இதோ என்னவள் !

செய்தி கேட்டு
தோழியின் இல்லம் சென்றேன் ,
எங்கள் சிரிப்பை திருடிக்கொண்டு,
புகைப்படத்தில் சூடி இருந்தால்,
பூ மாலைகளுக்கிடையே ஒளிந்திருந்தாள் !
ஒளியிழந்த நான்,
அவள் இல்லை இது என்றேன்!
மரண அறிக்கை,
விபத்தின் விவரங்கள்,
எரித்த சாம்பல்,
இப்படி அனைத்தும் காண்பித்தனர்!
அவள் இல்லை இது என்றேன்!
அவளால் காப்பாற்ற பட்ட
சிறார்களை காண்பித்து,
இதோ என்னவள் . . . . . . . !


பொன்வெயிலும் குளிர் மழையும்!

சூரிய காந்தி தவிரவும்,
சுட்டெரிக்கும் சூரியனுக்கு,
காதலி தேவையாம்!
யாருகென்று தெரியாமல்,
யாருக்குமே தெரியாமல் ,
பூக்கும் சில மலர்களும்,
பல சமயங்களில்,
சூரியனுக்கு
குறுஞ்செய்திகள் அனுப்ப,
குளிர்ந்த அவன்,
பொன்வெயிலும்
குளிர் மழையும்,
பூமிக்கு அனுப்புகிறானோ ? ?


காலமோ? நேரமோ ??

காதை திருகிவிட்டாற்போல் ,
கழண்டு சுழண்டு
பச்சை மரம் அதிலிருந்து
ஓர் பழுத்த இலை,
"என் மேல் என்ன பிழை?"
என்றார் போல்
பகிரங்கமாய் ,
 பூதேவியை முத்தமிட்டது !
இலையுதிர் காலமோ?
இலைகள் புணரும் நேரமோ ??

வெள்ளி, 14 டிசம்பர், 2012

புல்லாங்குழல் !

என்னை ஏன் கண்டாய் ,
காயம் செய்து காதல் உரைக்கவா?
காற்றிடம் புல்லாங்குழல் !

இல்லம் .. !

கல்லுடனும் கலவையுடனும்
சிமெண்ட்டுடன் தன் 
உழைப்பையும் சேர்த்து
சிறுக சிறுக கட்டியது தான்
இல்லம்.!
உணர்ச்சிகள் நிறைந்ததாய்,
மனிதர்கள் குழுமமாய் ,
நகையொளியுடன் நிறைவாய்,
மகிழ்ச்சியின் பிறப்பிடமாய்,
மனிதத்துவத்தின் இருப்பிடமாய்,
அது அல்லவோ இல்லம்?
வெறும் வீடல்ல அது
நிம்மதியின் கூடு
என்றும் நீ அதை நாடு !



செவ்வாய், 4 டிசம்பர், 2012

சாபம் - சல்லாபம்

சுருண் ட வயிறுடன் ,
கருத்த தோலுடன்,
நொந்த  நெஞ்சுடன் ,
பிளவு கொண்ட பூமியுடன்,
வறண்ட நிலத்துடன் ,
போராடும் தன்
விவசாய  காதலனுடன் ,
சல்லாபிக்க வந்துவிட்டான் ,
சபிக்க பட்ட சூரியன் !

காடுகள் தேடி . .

சுவடு படாத
சுனை நீர் தேடி,
வாசம் அழியாத
மலர்களை சூடி ,
காண கிடைக்காத
காட்சிகளை நாடி,
மறக்க முடியாத
மரங்களில் ஏறி,
சந்தோஷிக்க ஆசைப்படுகிறேன் !
ஆனால் ,
காடுகள் எங்கே?

நட்பே நீ ஓங்குக !

எதிர்பார்த்து சந்திக்கவில்லை,
சந்தித்ததும் சிந்திக்கவில்லை!
இருப்பினும் சந்தித்து விட்டோம் 
நட்பின் இலக்கணம் எழுத!

தலை நரைத்த பின்பும்
தலை முறை கடந்த பின்பும்
நாம் நினைத்து பார்ப்போம்
பழகிய நாட்களை!

பின்பு என்றோ ஒருநாள் சந்தித்தால்,
நன்றாகவே பழகினோம் என்று
மனம் அறிந்து பொய் உரைப்போம்,
நாம் கொண்ட சண்டைகளை
மனதில்நினைத்து கொண்டு !

இனிமையான பந்தம் என்று
அடிகடி உணருவோம்
நம் நட்பின் பெருமையை !

நட்பே நீ ஓங்குக !

பூக்களோட புராணம்

தோட்டத்துல போய்
பட்டாம்பூச்சி புடிக்கறப்போ 
எங்க ஆத்தா கூப்பிட்டு  வெக்கும் 
சோறு திண்ண !
ஒழுங்கு காமிச்சு 
ஒளிஞ்சுக்குவோம்
 வயக்காட்டுகுள்ளரா !
வீடுங்க நெரப்பி போக,
எம்புள்ளைக்கு 
பட்டாம்பூச்சின்னா 
பேந்த பேந்த முழிக்க தெரியுது!
மல்லிபூ பந்தல்னா ,
பெக்க பெக்க ன்னு பாக்க தெரியுது !
அதான், எம் பேரப்புள்ளைங்கனாச்சு 
தெரிஞ்சுகட்டுன்னு ,
பூக்காரி கூடை பூ கிட்ட கேட்டு தெரிஞ்சுகிறேன் 
பூக்களோட புராணத்த! 


தொலைந்த நிலவு

என்னை நித்திரையில் ஆழ்த்திவிட்டு
எங்கு சென்றாளோ அவள்
முகிலவன் சித்திய
 மழை சாரலில் கரைந்து விட்டாளோ ?
கதிரவன் பரப்பிய
தீச்சுடரில் உருகிவிட்டாளோ ?
எந்தன் பனி நிலவே,
உன்னை தேடும் விழிகளுக்கு
 பதில் இல்லையடி 
என் சிதறிய சிந்தையிலே !

சின்ன சின்ன ஆசைகள்

அழகிய அதிகாலையில்,
பசுன்தளிர் வெளியில்
பரந்த பாரினில்
கை கோர்த்து
குளிர் காற்றை சுவாசிப்பது,
பஞ்சணையில் தோள் புதைந்து
என் மனதை தொலைப்பது,
மஞ்சள்மாலை பொழுதில்
மானாய் துள்ளி எழுந்து
 தின் பண்டம் தேடுவது ,
தோழமைகளின் பதிலை எதிர்பாத்து
பேசாமல் (கை ) பேசியை பார்ப்பது ,
இதமான இரவில்,
நிலவொளியில் நணைவது ,
இதெல்லாம் சாத்தியமாவது எப்போது?

என்செய்வேன் நான் ?

சிறை பிடித்தாயே
சிந்தனை மொத்தமுமாய் .
விடுவிக்க விரும்பினாலும்
விலக்க  விருப்பம் இல்லை எனக்கு!
உறங்கிய பின்னும்
உறங்கா நினைவுகள் 
காணும் கனவுகள்
திரையிடுவதும் நீ,
திரையிலும் நீ !

சேற்றில் நிலா நிழல் !

எங்கோ கேட்டேன்,
நினைவாலே அணைக்கிறேனே "
அதனால் தானோ
விண்ணுயிராய் இருந்து
மண்ணுயிராய் விழுந்து
வெள்ளமாய் தேங்கியது
மழைத்துளி?
பொன் நிலவின் தேகம் அணைக்க?


திங்கள், 1 அக்டோபர், 2012

நியோ டார்வினிஸம் (Neo - darwinism)

டார்வினிஸம் பொய்த்து விட்டது .
மிருகத்திலிருந்து 
மனிதன் தோன்றவில்லை!
மனிதர்கள் தான்
மிருகமாய் உரு கொண்டிருக்கிறான்!

காத்திருத்தல் சுகம்


என் கைத்தடி கொஞ்சம் தடுமாறினாலும்
என் வழி படி தடம் மாறுவதில்லை,
உனக்காக என்றும் காத்திருப்பேன்
என் உள்ளம் கவர்ந்த நாயகியே. . .!

கருவாகி உயிராகி !

முழுமதி என நீ நடந்து வருகையில்.
அந்தோ! பூவிற்கும் வேர்கிறதே !
கருவில் உயிர் சுமக்கும் பெண்!

புதன், 12 செப்டம்பர், 2012

மனதில் உறுதி வேண்டும் . . . . .!

பிறந்த குழந்தைக்கு
பெயர் வைக்கிறோமா?
 இரண்டாம் பட்சமானது இப்போது!
பிறக்கும் புத்தாண்டுக்கு,
 உண்டு ஒரு பேரு !
சுகாதாரம் பேணி காக்கும் ஆண்டு,
கல்வி போதித்தல் ஆண்டு,
அறிவியல் ஆண்டு,
அவர் ஆண்டு,
இவர் ஆண்டு !
ஆண்டுக்கு ஒரு உறுதி மொழி !
வறுமை போக்கும் ஆண்டாம் - அதில்
 பட்டினியாய் செத்தவர்கள் ஏராளம் !
அறிவியல் ஆண்டாம்  - அதில்
பள்ளிகனுப்பாது தொழில் சாலைக்கு
அனுப்பினர்  பச்சிளம் குழந்தைகளை !
மனதில் உறுதி வேண்டும்
என்றான் பட்டு கவி பாரதி!

உறுதி  மொழியின் உறுதி
குருதியிலும் உறையவில்லை,
 உரைக்கவில்லை!
எங்கு செல்கிறோம் நாம்?
எங்கு செல்வோம் நாம்?



கனவுலகின் கூத்தாடி !

கட்டு மாடி கட்டிடம்,
வெள்ளை கோட் சூட் ,
பென்ஸ் கார்,
சுழல் நாற்காலி . . . .
கண்கள் முழுதும் கனவுகள் தாங்கி
தோள்களில் புத்தக பை ஏந்தி,
பள்ளியிலிருந்து   திரும்பினேன் நான்!


ஆழி பேரலை,
சுனாமியாய் ,
சுண்டல் விற்றிருந்த
என் தந்தையை  விழுங்க ,
குழந்தை தொழிலாளியாய்
இன்று கல் சுமக்கிறேன்
ஓர் கட்டிடம் எழுப்ப  . . . !


 

புதிய பிரம்மா !

உறவுகளால் உணர்விழந்து,
நெசத்தால் நெஞ்சம் நோக ,
பாசத்தால் பழிகள் பழக,
வற்றியது என் நெஞ்சின் ஈரம் !
விழி உடைத்து
அரங்கேறியது கண்ணீரின் சரம்!
இனியும் ஏதும் எஞ்சவில்லை ,
புதிதாய் பறி கொடுப்பதற்கு!
அனைத்தும் சலித்திட ,
கட்டவிழ்ந்தேன் நானும்,
புதிதோர் உலகம் படைக்க!
நான் தான்,
புதிய பிரம்மா !

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

சமுதாய சிற்பிக்கு ஓர் மடல் !

வித்தென விழுந்த என்னை
விருட்சிகமாய் மேலெழுப்பி
கிளை பரப்ப செய்தீர்!

தந்தைக்கு இணையாய் கண்டிப்பும்
தாய்க்கு இணையாய் பாச பிணைப்பும்,
தோழமைக்கு இணையாய்
 பரிவும் உரிமையும்,
கற்பித்த கல்விதனிலே புகுத்தி தந்தீர்!

தினம் தினம் கலை சிற்பியாய்
எம்மை - நாளைய இந்தியாவை ,
அழகாய் செதுக்குகிரீர்,
துளியும் சலிக்காமல்!

குயவனின் களி மண் பானையாகிறது
உந்தன் கைகளிலே யாம் மனிதனாகிறோம்!
உந்தன் பேச்சுக்களால் பட்டை தீட்ட பட்டு
இன்று வைரங்களாய் மின்னுகிறோம்!

மெல்ல மெல்ல 
நாட்கள் நகர,
நாங்களும் வளர,
உலகின் உச்சியில் 
எம்மை நிறுத்தி காணுகையில்,
உமது கண்கள் பொங்குதே 
மகிழ்ச்சியின் பால்!

எமை ஏற்றி விட்ட ஏணி என 
துளியும் இல்லை கர்வம்!
உலகை எமக்கு காண்பித்த நீரோ,
இன்றும் அதே வகுப்பறையில்,
எம்மை போன்ற மாணாகளுடன், . . . 
சமுதாயத்தை செதுக்கும் சிற்பியாய்,
அறபணியில் நின்னை அர்பணித்த நிறைவுடன் . . . !

உம்மை வாழ்த்த வயதில்லை,
வணங்குகிறோம் சிரம் தாழ்த்தி !

எமதினிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் !

இவள்,
உந்தன் வாழ்கை பறவையின்
சிறகில் ஓர் இறகு !


வெள்ளி, 13 ஜூலை, 2012

என் காதலின் ஓவியம்!

வருடங்கள் உதிர்ந்தாலும்,
வாழ்வது பிறர்க்கு என,
வாழையாய் தான் வாழுகிறாள் !
காளை உழைத்தாலும்
முதிர்ந்த காளையை
களைப்பற்ற ,
கன்றென வந்த இவள் ,
ஆத்மாவாய் வந்த இவள்,
என் அன்பு கவிதை,
அழியாத காவியம் ,
என் காதலின் ஓவியம்!


தொடரட்டும் அவர்களோடு . . .

உறவுகளுக்காக ஏங்கினாலும்
என் கண்களில் கண்ணீர்  தங்கினாலும்
இதயம் பல வலிகளை  தாங்கினாலும்
வெளி காட்ட வழி இல்லை,
சாய்ந்து கொள்ள தோள்  இல்லை !
கனா காணாத கண்களும் இல்லை,
கனவிற்கு வேண்டி,
உறக்கம் தொலைக்கவும் மனம் இல்லை !
இன்பமான நினைவுகளை, கண்கள் காண,
உறக்கத்தை தேடுகிறேன்,
என் விழிகளே,
வலி ஏதும் இன்றி உறங்கிடுங்கள் !
எனக்கு பிரியமானவர்களுடன்
தொடரட்டும் என் பயணம் . . . .!


வெள்ளி, 20 ஏப்ரல், 2012

இருந்தென்ன பயன் . . ?

சிட்டு குருவியாய்
சிறகடிக்க ஆசை,
சிறகுகள் முளைக்கையிலே
அதை சிதைத்து விட
சிட்டு குருவியாய் இருந்தென்ன பயன்?