சனி, 31 டிசம்பர், 2016

நியூயார்க்கில் நான் . . ! - 3

ஆம். என் வாயிலிருந்து தான் அந்த கேள்வி. "யாரு அந்த யோகேஷ்" குட்டி பையனோட விளையாடிண்டு இருந்ததுல , மறந்து போச்சு. யோகேஷ் என்கிற யோகி யாக்கப்பட்ட அந்த முகம் தெரியாத இளைஞன் தான் வரன் என்று. அப்புறம், அம்மாவும் மாமியும் நினைவு படுத்தினார்கள் . 
மறுபடியும் என்னிடமே வந்தது மற்றொரு கேள்வி. "என்ன எதிர்பார்கிறாய்". எனக்கு அதுக்கு மேல் இருப்பு இல்லை, " ஆத்துக்காரர் வேலைக்கு ஆள் எடுக்கலை நான். நிம்மதியா வாழனும். ரெண்டு பேரோட அப்பா அம்மாவையும் ஒரு மாதிரி தான் பார்ப்பேன். எங்க அப்பா அம்மா ஒசத்தி, எனக்கு வரப்போறவரோட அப்பா அம்மா தாழ்த்தி அதெல்லாம் இல்லை. எனக்கு கூட்டு குடும்பத்தில், ஜாலியா சந்தோஷமா ஒண்ணா இருக்கணும். அவ்வ்ளோதாங்க , என்ன பொருத்த வரைக்கும் கல்யாணம்னா " பளிச்.. பேசி முடிச்சாச்சு. அப்பாவின் பயம் கண் வழியே வழிந்தோடியது . "இவ வாய் இருக்கே " அம்மாவின் குரல் மாமியின் காதில் மெதுவாய் விழுந்தது . "மாப்பிளை வீட்டார்" கொஞ்ச நேரம் அளவளாவி விட்டு கிளம்பிவிட்டனர். ( நான் பயம் ஏதும் இல்லாமல் வெளியே சென்று டாடா காமிச்சு வழியெல்லாம் அனுப்பிவெச்சேன்.) ஏனோ , அந்த குடும்பமே பார்க்க அழகாய் இருந்தது. தங்கை மகனிற்காக , தன மாப்பிளை சொல் கேட்டு, பெண் பார்க்க வந்த அண்ணன் , மச்சினர் சொன்னால் சரியாய் இருக்கும் என்ற நம்பிக்கையில் தங்கையின் கணவர், தனது தோழனாய் இருக்கும், கணவனின் தம்பிக்காக வந்த அண்ணியார் . அழகாய் தெரிந்தது, எனக்கு. (இந்த உறவுமுறைகள் எனக்கு தாமதமாய் புரிந்தது. அன்றென்னவோ, ஒருவருக்காக இன்னொருவர் வருகிறார்கள். எவ்வளவு அன்னோன்னியம் என்று தான் தோன்றியது.)
நான் என்ன சொல்ல போறேன் என்று மடியில் நெருப்பை காட்டியவாறு நின்ற அம்மாவின் முன், அப்பாவை கட்டிக்கொண்டு, 
"எனக்கு இந்த குடும்பம் பிடித்திருக்கு. பையனுக்கு சரினா எனக்கு ஒகே . " அப்படின்னு முடிச்சேன். இழுத்து பிடித்து வைத்திருந்த மூச்சு காற்றை அம்மாவும் அப்பாவும், "அப்பாடா" என்று விட்டார்கள் . 
" எல்லாம் சரி, இதுல யாரு யாரெல்லாம்? பையனும் வந்திருந்தானா என்ன?" இப்படி எல்லாம் கேள்வி கேட்டது நானே தான் . 
இப்பொழுது தான் அம்மா, எல்லா உறவு முறையையும், பையனின் புகைப்படத்தையும் (ஒரு வழியாக - ஒண்ணே ஒண்ணு தான்) மறக்காமல், பையனின் பெயரையும் கூறினாள் ! 
எதையோ வென்று விட்ட களைப்பில் அம்மா அப்பா.. நமக்கு இன்னும் வேலை ஆகவில்லையே. ஆம், பெண் பிள்ளையாய் ஒழுங்காய் நடந்துகொண்டால் இனிப்பு வாங்கித்தருவதாய் செய்த சத்தியத்தை அம்மா மறந்து விட்டாள். விடுவேனா நான் ? " அம்மா சாக்கி..." தொடங்கினேன் . என் அடவாதத்தை துளிகூட சட்டை செய்யாமலே யாரோடோ பேசிக்கொண்டு இருந்தாள் . பின்பு, "மாப்பிளை வீட்டார்" பற்றிய தகவல்களை சொன்னாள் . எனக்கு அப்போது, நாடகம் முடிந்ததும் மேடை இறங்கியவுடன் , இன்னாரை வந்தவர் இவர் என்று வாசிப்பார்களே அது போன்று இருந்தது. ( என்னங்க பண்றது . அம்மா, இலக்கியவாதி . பள்ளிக்காலத்தில், எல்லா மேடை நாடகங்களையும் இவர் தான் இயற்றுவார் ).நானும் , அப்பாவின் நண்பர் யார் என்று அடையாளம் கண்டு கொண்டேன், அம்மாவின் நீண்ட காலக்ஷேப உரையின் முடிவில்.
அன்றைய தினம் மாலை , "பையன் " வீடியோ சாட்டில் வருவதாய் பேச்சு. நிறைய வசவுகள் . நிறைய புத்திமதிகள் . ( அட, நான் தான் முன்பே சொன்னேனே , என் குறும்பும் சேட்டையும் பற்றி) அடேயப்பா. 
"யாய் , மாப்பிளை பையா , உனக்கு இந்த மாதிரி எல்லாம் உண்டோ ?" அப்படின்னு டெலிபதி முயன்றுகொண்டு இருந்தேன். 

வீடியோ சாட் தொடங்கியதும் , mute போட்டுவிட்டு நான் அலறினேன் . " அம்மா , அப்பா , மாமீ  . . .! "

தொடர்ந்து எழுதுவேன் ...

சனி, 24 டிசம்பர், 2016

நியூயார்க்கில் நான் . . ! - 2

சரி , கடைளில் தான் இப்படி என்றால், பேருந்துகளிலும் இதே கதை தான்,, பேருந்தில் இருந்து இறங்கி பின் ஓட்டுனருக்கு  டாடா சொல்வதும் இயல்பான ஒன்று தான் ! இப்படியாக வெளியுலகத்தை விசித்திரமாய் நான் பார்க்க, என்னை பெற்றவர்கள் என்னை விசித்திரமாய் பார்க்க தொடங்கினார்கள். 
அட ஆமாம். முதலில் என்னை பற்றி சொல்ல வேண்டும் இல்லையா? நான் சரியான குறும்புக்காரி. அறந்த வால் அப்படின்னும், குட்டி பிசாசு அப்படின்னும் பட்ட பேரு / செல்ல பேரு எல்லாம் உண்டு. அப்படி பட்ட எனக்கு ஒரு அமைதியான சமத்தானா ஆத்துக்காரர். ( இந்தா, நாங்க எல்லாம் நேர்மையானவங்க . பரிசம் போடும் போதே, எனக்கு அமைதினா என்னான்னே தெரியாது அப்படின்னு எச்சரிக்கை தந்துபுட்டோம்!) .
எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க என் அப்பா அம்மா பட்ட பாடு! நான் எழுதறதெல்லாம் வெறும் ட்ரெய்லர் தான். பயோடெக்னாலஜி - உயிரி தொழில்நுட்ப அறிவியல் அப்படிங்கிற பட்டப்படிப்பை 6 வருஷம் படிச்சு முடிச்சு, படிக்கும்போதெல்லாம், ஆறு மணி பேருந்துக்கு அஞ்சரைக்கு அம்மாக்கிட்ட ஏத்து வாங்கிண்டே எழுந்து, அப்பாகிட்ட பேச்சு வாங்கிண்டே வண்டியிலே கூட்டிண்டு போக சொல்லி, ராத்திரி ஏழு மணி வரைக்கும் ஆராய்ச்சியில் மூழ்கி, பேராசிரியர்களிடம் "பெண் பிள்ளை அம்மா நீ. நேரம் காலமா வீடு போய் சேரு " அப்படின்னு புத்தி சொல் கேட்டுகிட்டு, எங்க அம்மா ஆயுசை அறையாயுசாய் குறைச்சு , பாத ராத்திரி பத்து மணிக்கு வீட்டுக்கு வந்து, சாப்பிட்டு, கேம்ஸ் விளையாடிட்டு, போர்வையை இழுத்து போர்த்திக்கிட்டு உருண்டேன்னா அடுத்த நாள் காலையில அதே கதை. இது தினசரி நடவடிக்கை. பரிக்ஷை சமயத்தில், ஒரு நாள் முன்னாடி, கல்லூரி நூலகத்தை ரெய்டு விட்டு, அடுத்த நாள் பாட புஸ்த்தகத்தை பொறுக்கி எடுத்து, வீடு வந்து , எனக்கு பிடித்த பாடங்களை மட்டும், "ஆழமாய்" படித்து, பகலில் போய் பரிக்ஷை எழுதிவிட்டு, நன்பகல் வீடு வந்து, சமைத்து வைத்ததை ( நான் இல்லைங்கோ , என் அம்மாவோ, தம்பியோ சமைச்சு வெச்சு இருப்பாங்க) நல்லா மொசுக்கிவிட்டு தூக்கம். அன்றிரவு வீட்டில் அனைவரும் தூங்க போகும் போது என்னை எழுப்பி விடுவார்கள். அவர்கள் தூங்கியபின்பு நான் படிக்க ஆரமித்தால் விடியும் பொழுது அவர்களை எழுப்பி விட்டு, நான் உறங்க போவேன். கல்லூரி காலம் இப்படியாக, வேலைக்கு போன காலம், கொஞ்சமே கொஞ்சம் மாறுதலோடு . ஆறு மணி பேருந்துக்கு எழும்பாமல், 8.10 ரயிலிற்கு 7.45க்கு எழுந்துப்பேன் . முன்னிரவு வைத்த உப்புமா / காய் / கஞ்சி எதோ ஒன்னு சாப்பிட கையில் எடுத்துக்கொண்டு, குடு குடு ன்னு ஓடறது தான் பொழப்பு! தனியாக தங்கி இருந்ததால், என் அறையை நானே சுத்தம் செய்து கொள்ளவேண்டும். வாரம் ஒருமுறை அந்த இன்னல். (நல்லவேளை, வீட்டோடு ஒரு பாட்டி இருந்தார்கள். எனக்கு உதவிக்கு!)
இப்படியாகப்பட்ட எனக்கு, இந்த பொண்ணு பார்க்கும் படலம், பாட்டு படறது," வாங்க பழகலாம்" ன்னு வழிஞ்சுட்டு அப்பறம் , "பொண்ணு ரொம்ப போல்டு டைப். வெளிப்படையா பேசறா. எனக்கு பிடிக்கலை" அப்படின்னு பிட்டு போட்டு எஸ்கேப் ஆகிறது எல்லாம் சுத்தமா ஆகாத காரியம். அதனால, என் தலைல கல்யாண "சுமை" ( அப்போ அப்புடி நெனச்சுப்புட்டேனுங்கோ) ஏத்தி வைக்க இருந்த அப்பா அம்மா கிட்ட, " நல்ல குடும்பம் - கூட்டு குடும்பம் னா டபுள் ஓகே. மத்தபடி உங்களுக்கு ஓகே னா , எனக்கு ஓகே. இந்த மீட்டிங்,டேட்டிங், அவுட்டிங், இதெல்லாம் நான் பண்ண மாட்டேன். பொண்ணு பாக்க வந்து இன்டர்வ்யூ பண்ணினா, நான் ஒத்துக்கொள்ள மாட்டேன் " அப்படின்னு பற்பல விதிமுறைகளை விளக்கி , வரன் தேட சம்மதம் கொடுத்தேன்.
அறிந்தவர்கள், அங்காளி பங்காளி அப்படி இப்படின்னு , ஒரு வரன் வந்திருக்கு அப்பா அம்மாக்கு. கூட்டு குடும்பம் - டிக். நல்ல மனிதர்கள் - டிக் . அப்படி அவர்களே டிக் போட்டுகொண்டு, ஒரு சந்திப்பு தினத்தை முடிவு செய்திருக்கிறார்கள். ஞாயிறு காலை, "மாப்பிள்ளை வீட்டார்" வருவதாக, சனிக்கிழமை அம்மா தகவல் தருகிறார்கள். வந்ததே கோபம் . நான் போராளி ஆகிவிட்டேன். எத்துணை சொல்லியும், பெண் பார்க்கும் படலாமா?
குடும்ப நண்பர், அண்டை வீட்டாரின் சொந்தம் என்றெல்லாம் அப்பா சமாதானப்படுத்த தொடங்கினார். "நான் பொம்மை போல் புடவை கட்டி முன்னாடி நிற்க மாட்டேன்" ( எனக்கு சும்மா புடவை கட்டிக்கொள்வது என்றாலே வெகு பிரியம். அனால், அந்த படலத்தை எதிர்க்கும் பொழுது, புடவையா என்று வீம்பு!). நண்பரின் தகவல் படி, ஒரு சிறு குழந்தையும் உடன் வருவதாய் தகவல். அம்மாவும் மாமியும் அந்த பிள்ளைக்கு "பொம்மையும் சாக்கலேட்டும் " வாங்கி வைத்தனர் . " எனக்கு சாக்கி ?" என்றபடி நான் கேட்க, "புடவை கட்டி கொஞ்சம் அமைதியாய் இருக்க முயற்சி பண்ணினால் உண்டு " என்ற பதில் வந்தது. சரி, "சாக்கி " கிடைக்குமே, என்று கொஞ்சமே கொஞ்சம் குறும்புத்தனத்தை ஒளித்து வைக்க முயற்சி பண்ணி கொண்டிருந்தேன்.
"மாப்பிளை வீட்டார்" வந்தனர், கூடவே , அந்த குழந்தையும். ரஸகுல்லா மாதிரி ஒரு குழந்தை. அவனையே நான் பிச்சு பிச்சு சாப்பிட எண்ணி கொண்டு இருந்தேன். அவன் கையில், "dairy Milk Silk " வேறு. ஜாலியாக , போய் ஊஞ்சலில் அவர்கள் முன் உக்காந்து கொண்டு ஊஞ்சல் ஆடிய வண்ணம், குட்டி பையனை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தேன்.
படிப்பு,பட்டமளிப்பு, வேலை இப்படி பல தருணங்களில் எனக்காக பயப்படாத அப்பா அம்மா, அன்று அரண்டு கொண்டு இருந்தார்கள். குட்டி பையனை கவனித்து கொண்டு இருந்த எனக்கு, பெரியவர்கள் பேசிக்கொண்டு இருந்தது கருத்தில் பதியவில்லை.
"நீ என்னம்மா படித்து இருக்கிறாய்?" மாப்பிளை வீட்டாரின் கேள்வி . அது கூட நான் கவனிக்கவில்லை . அப்பா பதில் சொன்னார் போலும்.
மீண்டும், " யோகேஷ் படிச்சாப்பல அதே படிப்பா?" இம்முறை மாமி என்னை உசுப்பி விட , நான் சுதாரித்தேன். என்ன பேசுகிறார்கள் இவர்கள்? நான் முழிக்க, கூடவே ஒரு கேள்வி . "யார் யோகேஷ்?" என்றேன் ....

தொடர்ந்து எழுதுவேன் . . .

வெள்ளி, 16 டிசம்பர், 2016

பெயரிடாவரிகள்

நிலவொளி நோக்கிய பயணித்து ,
நட்சத்திரங்களை மெதுவாய் சேகரித்து,
விண்மீன் திரள் சுற்றி உலாவி ,
மெதுமெதுவாய் வீடு வந்தால் ,
மீண்டும் கொள்ளையடிக்கிறாய்
என் மூச்சு காற்றை ,
உன் ஒற்றை கேள்விக்கனல் கொண்டு . . !
பௌர்ணமி கவிதைகள்

நீரோடு நிலவு
தெளிந்து தெரிவதைப்போல்
உன்னோடு நான் ,
நிழலாய் மட்டும் . .
நீர் நிலவு ! 

கேட்பதேன் . . ?

தனித்து விடப்பட்ட மென்காற்றாய் ,
கேள்விகள் பார்க்காத கானல்நீராய் ,
அடித்து செல்லப்பட்ட விதைகளாய் ,
இயற்கையின் ஒவ்வோர் பரிமானமும் ,
சேராத காதல் கதை கற்பிக்க,
மனிதம் , சேரும்  காதல் கேட்பதேன் ?

பௌர்ணமி கவிதைகள்

கடன் வாங்கிய காரணத்தினால்,
ஆதவனிடமிருந்து மறைந்து ,
கதியற்று ஒற்றையாய் ,
தேய்ந்து தோய தொடங்கினாளோ 
பௌர்ணமி நிலவாய் . . !
பெண் நிலவாயின் ,
தனிமை புதிதல்லவே ! 

செவ்வாய், 13 டிசம்பர், 2016

பௌர்னமி கவிதைகள்

பூமி தாய் மடியில் இளைப்பாறிய நிலாப்பெண் 
ஆதவனிற்கென தாய் மடி விட்டுக்கொடுத்து
 வான் வந்தாளோ 
கதியற்ற ஒற்றை நிலவாய்...
பெண் பௌர்ணமி. . !

சனி, 3 டிசம்பர், 2016

நியூ யார்க்கில் நான் . . . #1

நியூ யார்க் நகரம் உறங்கும் நேரம் . . . 
  
எனக்கு பிடித்த பாடல் வரிகள் . . . ஆனால், சமீபமாய் தான் இந்த பாடல் வரிகள் எத்துணை கற்பனை வாய்ந்தது என்று உணர்ந்து கொண்டேன் . . . 
சமீபத்தில், தகப்பன் தாயின் பிள்ளை என்ற பதவியுடன் கணவனின் (ஓர் சமத்து அப்பாவி பையன் பாமனைவி என்ற  "பதவி உயர்வு ( பதவி இறக்கமா என்று போக போக தான் தெரியும் ! ) பெற்று , தாயகத்தில் இருந்து இடம் மாற்று பெற்று , மேற்கத்திய தூ(ஊஊஊ...) தேசமான ஐக்கிய அமெரிக்கா நாட்டிற்கு வந்தாகிவிட்டது ! பரந்த தார் சாலைகள் , தூய்மையான ஆறு, பசுமையான மரங்கள் ( ஒரே மாதிரி  தான் இருக்கின்றன . . நம் நாட்டை போல் பல்லுயிர் தாவரங்கள் எல்லாம் தென்படவில்லை ! ), மரத்தால் ஆன வீடுகள், பாரிஸ் சாந்து கொண்ட கூரைகள், கண்ணாடி சாளரங்கள் , இடது பக்கம் ஓட்டுநர் கொண்ட உந்திகள் / வண்டிகள் . . . இப்படி அனைத்தும் ஒரு கண்ணாடி பிம்பம் போல் தெரிந்தது ! நீண்ட வெளிச்சம் கொண்ட பகல் பொழுதுகள் , குறுகிய இருட்டின மணித்துளிகள், நிலவை தேடி நடந்த வெளிச்சங்க்கொண்ட இரவு பொழுதுகள் , இப்படியாக ஆச்சர்ய பட்டு , குழம்பி , என் ஆத்துகாரரை கேள்வி கனல்கள் கொண்டு துளைத்து, பெற்றோரிடமும் புத்தி சொற்கள் கேட்டு கேட்டுகழிந்தன முதல் ஓரிரு வாரங்கள் !
வீட்டை எனக்கு ஏற்றாற்போல் மாற்றி அமைத்து, எனக்கான ஒரு உலகத்தை தயார் படுத்தி, கணவனையும் மிகையாய் படுத்தி (பாவம்,  அதிகமாய் இடது கை பழக்கம் கொண்ட  என்னோடு அனுசரித்து போவது மிகவும் சிரமமாய் இருந்திருக்கும் அவருக்கு) ஒரு வழியாய், அமெரிக்க வாழ்வில் ஐக்கியமாக தொடங்கியுள்ளது, ஒரு பெரும் சாதனை தான்
கணவனுடன் நியூ யார்க் நகரம் சுத்தி பார்க்க கிளம்பினோம், ஒரு வார இறுதியில் ! வார இறுதி என்றாலே, "காலை" 11 / 12.00 மணி வாக்கில் தான் கண் விழிப்பது. அதன் பின், சமைத்து சாப்பிட்டு, ஒரு மணி நேர பஸ் பயணம் , பின்பு 15 - 20 நிமிட மெட்ரோ ரயில் பயணம். சுமார் 4 மணி அளவில் டைம்ஸ் சுஃவைர் (times square ) அடைந்தோம் . . 
நகரமா அது  .  எத்தனை மக்கள் , எத்தனை வகையான பொழுது போக்கு, வேடிக்கை கேளிக்கை .. அப்பப்பா ! சாலை முழுதும் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது . . . பற்பல ஹாலிவுட் குணச்சித்திரங்கள் வேடமிட்ட மனிதர்கள் - அவர்கோளடு விளையாட எத்தனிக்கும் குழந்தைகள், முழு நிர்வாணமாய் பெண்கள் - அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள எத்தனிக்கும் ஆண்கள் , அரை நிர்வாணக்கோலத்தில் இசை கருவிகளோடு ஆண்கள் - அவர்களை பார்த்து கிளவுற்று செல்ப்பி எடுக்கும் பெண்கள் கூட்டம் , பாட்டு பாடி அனைவரையும் மகிழ்விக்கும் தெரு கூத்து கும்பல் , இப்படி எத்துணை எத்துணை விஷயங்கள் , அந்த ரோடுகளில் . . 
மூன்று நான்கு மணி நேரம் , செலவடைந்ததே தெரியாமல் , நானும் கணவரும் வேடிக்கை பார்த்துக்கொண்டே நடந்தோம் . மாலை இரவாகியது . அப்பொழுதும் கூட்டம் குறைந்த பாடில்லை.. இரவு நள்ளிரவானது .. மக்கள் அதே போல் தான் இருந்து கொண்டே இருந்தார்கள் ! நமது நாட்டில் மதுரையை தூங்கா நகரம் என்பார்களே , அதே போல், இங்கு இந்த நியூ யார்க் நகரம், உறங்கவே இல்லை.. எங்கும் எப்பொழுதும் மின் விளக்குகள் ஜொலித்த வண்ணம் இருந்தன . . . சாலையில் மனிதர்கள் கூட்டம் அலைமோதியபடி இருந்தது . . .
இப்படி ஒரு நகரத்தை வைத்து எப்படி தான் அந்த பாடலை எழுதினாரோ அந்த கவிஞர் . . 
"நியூ யார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை படர்ந்தது . . . " 
பார்ப்பவர்கள் எல்லோரும் சிரிக்கிறார்கள், எந்த கடைக்கு போனாலும் "Good morning! How are you doing?" "Good day, Bye" என்றெல்லாம் என்னவோ ஆண்டாண்டு காலம் பழகினார் போல் பேசுகிறார்கள் . . 


தொடர்ந்து எழுதுவேன் . . .