திங்கள், 24 ஜூன், 2013

நிழலின் நிஜமே

என் நிழலின் நிஜமே
உன் கண்ண கதுப்புகளிலும்
என் பிம்பம் தானடி!
உன்னை காண்கையில்,
என்னை கண்டு கொள்கிறேன்!
பளிங்காய் உன் முகத்தில்,
நானே  பிரதிபலிக்கிறேன்!
இயற்பியலும் முப்பெட்டகமும்
தோற்றதடி உன் முன்னே!

வெட்கம்

செவ்வாய்தனில் 
புன்னகை பூக்க,
திங்கள் முகம் அதை,
திவ்யமாய் தீண்டிட,
ஞாயிறாம் இவன் முகத்தில் 
வெட்க பூ பூக்கிறதே !!!

செவ்வாய், 18 ஜூன், 2013

தேடல்

உன்னை தொலைக்கும் தருணத்தில்,
ஓராயிரம் உறவுகள் உடன் இருந்தும்,
நான் தேடுவது ,
தனிமை தாயின் மடி தான்!


ஹைக்கூ

இப்பொழுதெல்லாம்
அடிக்கடி வெளிவருகிறது
உன் நினைவுகள் - கண்ணீராய் !

வாழ்கை!

தயங்காமல் சொல்கிறாய்
வழி இல்லா  இடத்திற்கு போக!
இனியவனே,
வலியோடு,
நிற்கிறேன்!


விடியலுக்காக வாடுகிறேன்

அமைதியான என்னுள்
ஆர்பரிக்கும் அதிர்வுகள்
அணுக்கள் அசையும்
அதிசியங்கள் !

கலவரமாய் வந்ததே 
உன் வார்த்தைகள்,
கவலையும் தந்ததே ,
பூகம்பத்தை போலே!

தவிப்பாய் இருந்தேன்,
துணையாய் வந்தாய்,
ஆனால்
துடிப்பையே துண்டித்தாய்!

கண்ணுக்குள் வந்த காதல்,
கனவை தந்தது;
கனவாய் இருந்ததை,
களவாடி சென்றது!

கண்விழித்து காண்கையிலே,
கனவும் இல்லை,
காதலும் இல்லை,
காவியமாய் நீயும் இல்லை !

விடியலை நோக்கி
பயணிக்கிறது கண்கள்,
என் கண்ணே,
நீ தந்த கண்ணீரை சுமந்தபடியே . . . . !

திங்கள், 10 ஜூன், 2013

நம்பிக்கை

ஆசையாசையாய் நட்டேன் ,
என் தோட்டத்தில் செடி ஒன்றை,
உயரும் நெடு மரமாய்,
பூத்து குலுங்கும்
குல்மொஹர் மலர்களை
காண ஆசைப்பட்டு!
திரும்பா வசந்தமோ?
என் வீட்டில் மட்டும்
குயிலின் கூக்குரல் இல்லை!
இருந்தும் காத்து கிடக்கின்றோம்,
நானும் என் தோட்டத்தின் நீர் பானையும் !

பசும்பொன் நினைவுகள்


கட்டன் தரையோ,
குஷன் சோபாவோ 
இரவு,
எங்கு உறங்கினாலும்,
பகலில் நான் விழிப்பது
பஞ்சு மெத்தையில் தான் ! 

வெள்ளி, 7 ஜூன், 2013

காதல் !

அன்பை குறிக்கும் பொதுச்சொல் 
தோல்வியில் எப்படி பதில் சொல் !
காதல் 

வியாழன், 6 ஜூன், 2013

இரும்பிலே ஓர் இதயம் . . .

பெண்ணே,
என்னை மறந்து
உன் ஜோடியுடன்
ஜோதியாய் மின்னுகிறாய்.
தயவு பண்ணி
இரவல் தா
உன் இரும்பு இதயத்தை,
உன்னை மறந்த பின் திருப்பிவிடுகிறேன் !


சிட்டி தாக்கம்

விளையாடு பாப்பா நீ
ஓடி விளாடு பாப்பா!
நாளை
நீ நிற்க கூட
இடம் இருக்காது
இப்புவிதனிலே !
ஆதலினால்
என் தங்கமே,
இன்றே நடை பழகு !

" சிட்டி வில்லே "

நிஜத்திலே
மரங்கள் வெட்டி,
நரகங்களாய் நகரங்களை
தோற்றுவித்த மூட மனிதர்களே,
கணினியிலுமா வேணும் 
சிட்டி வில்லே ? ? ? ?

சிறகாய் ஓர் இறகு !

கூடு கட்டாமல்,
இளைபாற்றாமல்,
இறை கொத்தாமல்,
கருப்பும் வெள்ளையுமாய்
சிறகுகள் கொண்ட,
கால பறவையே ,
நீ விசித்திரம் தான் ! ! !



முன்னும் பின்னும் . . .

முன்நோக்கி  பயணம்
பின்னோக்கி நினைவுகள்
இரயில் நிலையத்தில்!

புதன், 5 ஜூன், 2013

தேடுகிறேன்

மௌனம் உடுத்திய உதடுகள்
என் வார்த்தைகளை ஊமை ஆக்கின,
கரு விழிகள் உலர்ந்து நின்றன !
வறட்சி குறைய
கசிந்த ஈரங்கள் ,
உதிர்ந்த வார்த்தைகள்,
அதிரங்கள்  வழி,
ஆழ் மனதை 
அதீதமாய் சேத படுத்திவிட்டன!
பிரபஞ்சம் நீங்கி சென்ற பின்னாவது 
சேதிகள் கேட்குமோ 
என் செவிதனில்?


இரவின் மடியில்

சத்தம் இல்லாது 
சங்கடத்தில் பிறந்தது,
சாட்சியாகமலே காய்ந்தது!
நிறமற்ற என் கண்ணீர்!