வியாழன், 27 அக்டோபர், 2016

காதலும் காலமும் - கட்டுரையாய் ஒரு காவியம்

இக்கால தலைமுறையினருக்கு ஓடவே நேரம் போதுவதில்லை . இதில் "குடும்ப பொறுப்பை சுமந்து கொண்டு எங்கே ஓடுவது ? எங்கே ஜெயிப்பது ? " என்ற எண்ணம் அதீதமானதாய் திகழ்கிறது . மெத்த படித்தவர்கள் என்பதால் தனிமனித உரிமையும் தன்னை சார்ந்திருக்கும் சுதந்திரத்தையும் அதிகமாகவே எதிர்பார்க்கிறார்கள் . கை  நிறைய சம்பளம், தனது தேர்வில் வேலை, தங்க விடுதி, உண்ண கெல்லாக்ஸ் , உடுத்த மாடர்ன் துணிகள், வார இறுதியில் பிச்சா கடைகள், புது ப்ரொஜெக்ட் , ப்ரோமோஷன் இது தான் வாழ்க்கை என்று எண்ணுகிறார்கள். திருமணம், அன்பு, நேசம், குடும்பம் இப்படி பற்பல ஆத்மார்த்தமான விஷயங்கள் உள்ளதை நினைத்து கூட பார்க்காத அளவுக்கு இவர்கள் திரிய யார் காரணம் ?  வேலை தந்த சுதந்திரமா? மேற்கத்திய கலாச்சாரமா ? பெற்றோரும் உற்றாருமா? பெருகிவரும் மீடியா மோகமா?
வேலை பளு,
சம்பாத்தியம்,
குடும்ப சூழல் ,
இப்படி பலகாரணங்கள் ,
அவர்கள் என்னை க்ரெஷிலும்
நான் அவர்களை
முதியோர் இல்லத்திலும் விட!
ஆம் . அன்று பிள்ளைகளுக்காக சம்பாதிக்கவேண்டும் என்ற எண்ணம் ஓங்கி நிற்க, பிள்ளைகளோடு நேரம் செலவழிக்க மறந்த பெற்றோர்களை இன்று மறந்தே விட்டனர் பிள்ளைகள். "என் பிள்ளைக்கு உழைத்தேனே " என்றால் , "ஆம் இப்பொழுது நானும் உன் பிள்ளைக்காக தான் உழைக்கிறேன் " என்கிறார்கள் .
"நல்லதோர் குடும்பம் பல்கலை கழகம் " என்று தொடங்கிய அந்த கால பாடல் வரிகள், எங்கோ எதிரொலிக்கும் நம் மனதில்.
"காதல் பாட்டு பாட காலம் இன்னும் இல்லை,
தாலாட்டு பாட தாயாகவில்லை " 
என்று காதல் இன்றி தாய்மை இல்லை என்று வலியுறுத்தும் பாடல் ,
"காதலித்தால் பாவம் என்றால் கண்களும் பாவமன்றோ ,
கண்களே பாவம் என்றால் பெண்மையே பாவமன்றோ ,
பெண்மையே பாவம் என்றால் , மன்னவனின் தாய் யாரோ ?"
கண்கள் வழி காதல் சொன்ன பெண்மையை , பெண்மையையும் தாய்மையும் பெருமைப்படுத்தின பாடல்கள்...

"மெதுவா மெதுவா தொடலாமா?
தாலி கட்டாமல் காய் மேலே படலாமா ?"

கண்ணியம் காத்த காதலும்,
வாலிபங்கள் ஓடும் வயதாக கூடும்
ஆனாலும் அன்பு மாறாதது .
மாலையிடும் சொந்தம்
முடி போட்ட பந்தம்
பிரிவென்ற சொல்லே அறியாதது  
 என்று நல்ல மணையாளை கம்பீரமாய் சித்தரிக்கும் வரிகளும் ,
நரை கூடும் நாட்களிலே
என்னை கொஞ்சம் தோன்றுமா
அடி போடி காதலிலே
நரை கூட தோன்றுமா
எத்துணை அழகாய் வயதிற்கும் காதலிற்கும் மாற்றம் ஏற்படாது கூறியிருக்கிறார்கள் !
இப்படி வளர்ந்த காதலும், கூடிய உறவுகளும், திருமண பந்தங்களும், பிரிவென்ற சொல்லையே அறியாததுகள். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தும், தட்டிக்கொடுத்தும் அழகாய் காத்தனர் குடும்பத்தின் கூட்டை. சுயத்தை இழந்தும் இழக்காமலும் சந்தோஷத்தை தக்கவைத்து கொண்டு தேவதையாய் உலாவந்த மணைவி , தனக்கென இருக்கும் பெண்ணை வெறும் போகப்பொருளாக பார்க்காது, தன்னில் பாதியாய் காதலித்த கணவன் , பெற்றவர்களின் அன்னோன்னியத்தில் பெருமை பட்ட பிள்ளைகள் , இந்த சமூகத்தில் எங்கோ இருந்துகொண்டே தான் இருக்கிறார்கள், நிறைய குறைந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.

திருமணம் காதல் என்ற வார்த்தைகள் எல்லாம் , அகராதியிலிருந்து தூக்கப்பட்டவையாகிவிட்டன .
சிறுக்கி சிரிச்சு வந்தா சீனாதானா டோய் ..
ஓடிப்போய் கலியானந்தான் கட்டிக்கலாமா? புள்ளகுட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா?
செய் ஏதாவது செய், சூடானதை செய் ? 
இப்படி வளர்ந்துவிட்டன உறவுகள்.  வாழ்வின் எத்துணையோ பொறுப்புக்களை ஏற்கும் இன்றைய இளைய சமூகம், ஏன் திருமணத்தை கண்டால் மட்டும் அஞ்சி ஓடுகின்றது ? எங்கோ இருக்கும் சிக்கலை அவிழ்க்காவிடில் கலாச்சாரமும் காதல் உணர்வும், திருமணத்தின் புனிதமும், மேற்கத்திய மோகமெனும் புயலால் தாக்கப்பட்டு தகர்க்கப்பட்டு விடும், இத்தனையும் தாண்டி, பணம் பணம் என்று ஓடும் இக்கால மனிதர்கள், கூட்டு குடும்பம் என்றொரு அழகிய சொர்க்கத்தை உணர்ந்ததாயில்லை.
பல்லாங்குழி , கல்லாங்காய் , தாயம், நிலாச்சோறு , பாட்டி கதைகள் , தாத்தாவின் குறும்புகள், இதை எல்லாம் மறந்தும் விட்டனர், ஆண்ட்ராய்ட்டு வாட்சாப் இப்படி பல நூதன கருவிகளிடம் அடிமையாய் இருக்கின்றார்கள்.

நீண்ட பெருமூச்சுடன் அன்றைய நாளிதழிற்கான கட்டுரையை முடித்த ரக்ஷன்யா , ஆச்சரியமாய் பார்த்தாள் . குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தான் அருணன்.. சிரித்துகொண்டே அவனைஅழைத்தாள் ரக்ஷன்யா .
"ஏங்க"
"என்னடி ?" அதட்டலாய் வந்தது அவனின் குரல்.
"படுக்கலாம் வாங்க மணி ஆச்சு. நாளைக்கு வேலையெல்லாம் இருக்கே!" பொறுமையாய் பதிலளித்தாள் அவள்.
"உனக்கு தூக்கம் வந்த நீ தூங்கு. எழுதி முடிச்சுட்டியா? நான்  இங்கயே இருக்கேன்..." மீண்டும் ஒரு இரைச்சல் அவனிடமிருந்து.
மெலிதாய் ஒரு புன்னகை அவள் இதழ்களை தழுவியது. பத்திரிகைக்கு தரவேண்டிய காகிதங்களை சரி பார்த்து எடுத்து வைத்து விட்டு, மெதுவாய் தத்தி நடை பழகி அவனருகே சென்றாள் ..
"மச் போடி போய் துங்கு.. எனக்கு உள்ள புழுக்கமா  இருக்கு.." எரிச்சலும் கடுப்புமாய் தெறித்தன அவன் வார்த்தைகள்.
"அட! ac ரூம் ல புழுங்குதா? பனில வெளிய நிப்பிங்க ?" நக்கலாய் பதிலளித்தவாறே ரக்ஷன்யா மெதுவாய், தன் கைகளை மாலையாக்கி கழுத்தில் இட்டாள் ! அவளின் அருகாமையில் கள்வெறி கொண்டான்.. பல்லை கடித்தபடியே, வார்த்தைகளை துப்பினான்...
"நிம்மதியா நடக்க கூட விடமாட்டியா?"
சிரிப்புடனே, மெதுவாய் எம்பி, முத்தமிட்டாள் அவன் இதழ்களில்..
"ரக்ஷா.. " தாபம் தாங்காது, அணைத்து கொண்டான் அவளை...
மேடிட்ட வயிறுடன், தாய்மை பொங்க நின்ற அவளை பார்கையில், பாசம் கனிவோடு காதலும் சுரந்தது... பாவம்,அவனும் ஆண் மகன் தானே!
"இல்லை, டாக்டர் அது வந்து... " உளறி கொட்டினான்...
"ம்ம் டாக்டர் வந்து? எங்க வந்தார் ?" கண் சிமிட்டி அவள் கேட்க, இன்னும் கிறங்கி தொலைத்தான் அருணண் ...
"ஏண்டி வதைக்கற ?"அவன் குமுறியதில், சிரிப்பு தான் வந்தது ரக்ஷன்யாவிற்க்கு ..
"சரி உள்ளே வாங்க... "அமைதியாய் அழைத்தாள் ...
கண்கள் மின்ன, "என்னடி சொல்றே?" வினவினான் அந்த கணவன்...
"உங்களை  தான் சொல்றேன். உள்ள வாங்க அழைத்தாள் அந்த மனைவி....

கட்டுரைகளோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் , நிஜ வாழ்விலும் திருமண பந்தத்தை மதித்த ரக்ஷன்யாவை பாராட்டாமல் இருக்கமுடியவில்லை ..

காவியங்கள் கருத்தரிக்கிறது . !

குழப்பங்களின் ஊடே,
அவன் நேசிக்க தொடங்கினான்.
துர்கதிகள் கண்ட அவளின் ஆன்மா,
நிதானிக்க தொடங்கியது.
நேசங் கொண்டு அவன் 
அவளை நீவ,
அங்கு இறக்கைகள் முளைக்க தொடங்கின.
இருட்டில் இருந்து
நிழலாய் மாற தொடங்கிய அவள்,
வெளிச்ச பரப்பில் தேவதையானாள்.
தினம் பருகும் காபி கோப்பையின் கீழே,
தன் ஒவ்வொரு இறகுகளை 
தூது விட்டு காத்திருந்தாள்.
அங்கோர் அழகிய பந்தம்.
அவன் மனதில் 
இவள் நினைவுகள் தேங்கி நிற்க,
இவள் மதியில் 
அவன் தாக்கங்கள் கவிதையாய் கொப்பளிக்க,
அழகான காவியங்கள்,
நிறைவாய் கருத்தரிக்கிறது...

வியாழன், 20 அக்டோபர், 2016

பௌர்ணமி கவிதைகள்

காதல் நிரம்பிய உலகை
கேட்கவில்லை...
இரவின் மடியில்,
நிலவை பகிர்வோம் !
நீ பௌர்ணமி !

திங்கள், 3 அக்டோபர், 2016

வரங்களே சாபங்களானால்

உடலால் மறைந்தாலும்
என் உயிரினுள் உறைந்திரு .
உன் உணர்வினை
தெளித்து வரைந்த
கவிதையினுள் பதுங்கிக்கொள் .
இனி,
சகோதரனை பற்றி
மட்டுமே எழுத
வரம் பெற்றுயிருக்கிறது
என் பேனா,
சபிக்கப்பட்ட
என் கைகளில் இருந்து .
நீ என் வரம்,
நான் உன் சாபம் . . .