வெள்ளி, 15 ஏப்ரல், 2016

என் பிள்ளைக்கு அவன் பிள்ளையாய் . . !

சில முறை காற்றோடு தேடுவேன்
சில முறை இருளில் அலறுவேன்
ஒரேயொரு கோர விபத்து ,
புரட்டிபோட்டது அத்துனையும்
திருப்பி போட்டது !

ஆயிரமாயிரம் மனிதர்களின்
நிறத்தை நிஜமாக்கியது,
கண்கள் மட்டும் வறண்ட
குளமாகியது !

ஆண்டொன்று ஓடியது இன்றோடு
கடவுளின் மேல் கொண்ட கோபம்,
பிரார்த்திக்க வழி இல்லை
யாசிக்கிறேன் எமனிடம்
விபத்திற்கோர் விபத்து நேராதோ ?

சாலையில் வண்டிகளின் சத்தம் கேட்டால்
பறக்கும் என் கற்பனை குதிரை!
படியேறி நீ வந்து ,
லூசாடி நீ என்று கேட்பதாய் தோன்றும்.
தோன்றலில் தோற்று போய்
கண்ணீரின் வெப்பமே எஞ்சும் !

நீ இல்லா நாட்களில்
அழுக மறந்து கொண்டேன்,
ஒளிய கற்றுக்கொண்டேன் ,
உள்ளதையும் மறைக்கப்
பழகிக்கொண்டேன் !

நிரந்தர பிரிவில்ல நீ தந்தது,
எங்களுக்கு  நினைவிருக்கும் வரை,
நெஞ்சில் நீ தான் துடிப்பாய்.
இருளிலும் நிழலாய் இருப்பாய் . . !

எதுவும் மறக்கவில்லை,
பிஞ்சு இதழாய் உன் கால்கள்,
கவரும் உன் சிரிப்பு,
உன் கடவுள் வேடங்கள்,
உன்னோடு சண்டையிட்ட தருணங்கள்,
உன்னோடு சாப்பிட்ட உணவுகள்,
நீ கற்று தந்த சமையல்,
நீ காண்பித்த பாதை,
உன்னோடான கடைசி பேச்சு,
குளிர்பெட்டியில் கண் மூடிஇருந்த நீ,
இரும்பு கைவண்டிமேல் ,
வெண்ணிற துணி கட்டிய
உன் உடல் ,
என் கைகளில் கடைசியாய் நின்ற
உன் கால்கள் ,
விறைத்திருக்கும் உன் மார்பில்,
அப்பாயிட்ட தீ,
தேற்ற வழியற்று
மயங்கிய அம்மா,
எரியும் நெருப்பிற்கு
உன்னையே இரையாக்கிய நான்,
ஏதும் மறக்கவில்லை . . .

எதை தேடி அவசரமாய் சென்றாய் ?
யாரை காண விரைந்தோடினாய் ?
விடையில்லா பல வினாக்களும் ,
விலையில்லா நமது பாசமும்,
பல விசனங்களோடு நானும்
அனாதையாய் இன்று . . !

தமயனாய்,
தாயாய்,
தோழனாய் ,
தந்தையாய் ,
சர்வமுமாய் இருந்த
என் பிள்ளையே ,
இனி எப்பிறவியில் காண்பேன் ?

என் பிள்ளைக்கு அவன் பிள்ளையாய் நான் எழுதுவது . . . ஏப்ரல் 16 தெய்வத்திரு DR ராஜ் கைலாஷ் மோகனின் நினைவு நாள் . . !