செவ்வாய், 28 ஜூலை, 2015

எங்கள் நாட்டில் இலையுதிர் காலம் . . .

எங்கள் நாட்டில் இலையுதிர் காலம்
இப்பொழுது 
எங்கள் நாட்டில் உதிர்காலம் !
"அறிவியசியல்" விருக்ஷத்தின்
கிளையுதிர்காலம்!
மெல்லிசை  விருக்ஷத்தின்
கிளையுதிர்காலம்!
எங்கள் குடும்ப விருக்ஷத்தின்
கிளையுதிர்காலம்!
எப்படி போகுமோ இனி எங்கள் எதிர் காலம் !

கடவுளுக்கு தன்னம்பிக்கை வேண்டுமோ?
கடவுளுக்கு விஞ்ஞான தாகமோ ?
கடவுளுக்கு விவசாய மோகமோ ?
விண் தொட வேண்டுமென
நின் கனவை நெனவாகிய கர்வமோ?

வழி நடத்த வேண்டிய நீர்,
விழிகளை ஈரமாக்கி,
வழியிலேயே விட்டு சென்றது ஏனோ. ?
எங்களை கனவு காண சொன்னீர் ,
ஏங்கி நிற்கிறோம்
இது கனவாக
ஒரு கெட்ட கனவாக
இருக்க கூடாதா என்று !!!
தமிழனை தலை நிமிர செய்தாய்,
இளைஞனை கனவு காண செய்தாய்
குழந்தையை கொஞ்சி மகிழ்ந்தாய்
ஒளி இழந்த கண்களோடு,
எங்கு காண, கனவை...?

அதோ,
இந்திய தாயும்
தமிழ் தாயும்
இயற்பியல் தாயும்
ஒரு சேர அழுகிறார்கள்
எங்களோடு . . .

இந்த ஆண்டில் என்னை உலுக்கிய மூன்றாவது மரணம் :: வலிமை இன்றி வெறுமையாய் என் பேனா . . !

வியாழன், 16 ஜூலை, 2015

மன்னவா . . !

இசை தாயின் புத்திர சோகத்தை
துடைக்க வழி தெரியாமல் அவள்
கண்ணீரினிலே மூழ்கி போகிறோம் நாங்கள்.

எக்காலத்திலும் இறவா இசை தந்த வேந்தே,
உமது இசை எம்முடன் இருக்கையிலே
நீவிர் எம்மை விட்டு நீந்தி சென்றதெனோ?

காவியரசரையும் கானவேந்தனையும்,
மக்கள் தலைவரையும், நடிப்பின் திலகத்தையும்
கண்டு கச்சேரி காண்பிக்க சென்றாயோ ?

விண்ணுலகின் தலைவனான கடவுளே,
நீ, இவரை இசைத்தாய்க்கு
பரிசலிக்காமல் கடனாய் தந்தாயோ?

எங்கள் குடும்பத்தின்
இசை செல்(ல)வத்தை திருப்பிவிட்டோம்,
கண்ணீரை வட்டியாய் கொடுத்து!

இசை அனாதை ஆகின்றது,
இசைக்குடும்பம் அனாதை ஆகின்றது,
சங்கீதத்தோடு இங்கீதம் தெரிந்த
 மன்னவனின் மறைவினிலே,
இசை அனாதையாகின்றது !

மன்னாவனோடு முடிந்தது
ஓர் ஜாம்பவன சகாப்தம் . . .
மெல்லிசை மன்னாவனோடு  - முடிந்தது
ஒரு ஜாம்பவன சகாப்தம்....

விரல் நுனியில் இசை படைத்த வேந்தன்,
இனி தென்றல் காற்றாய்
நமது செவி தீண்டுவார்...

உள்ளத்தில் நல்ல உள்ளம்,
கண்ணீர் மத்தியில் ஊமையாய்
 உறங்கிக்கொண்டிருக்கிறது....

மன்னவனே, (இனி) அழலாமா
கண்ணீரை விடலாமா,
மன்னவா . . !

- அதராஞ்சலி - ஹ்ருதயாஞ்சலி - கவிதாஞ்சலி - கானாஞ்சலி -
இசை மன்னன் , தெய்வத்திரு . விஸ்வநாதன் பூத உடல் மறைவிற்கு . . . !