திங்கள், 15 ஆகஸ்ட், 2016

என்னோடு தேட வாருங்கள் !

ஞாயிறு கிழமை வேலைக்கு போவோர்க்கு ஒரு வரம். அதிலும் என்னை போன்ற மகா சோம்பேறிகளுக்கு சொல்லவே வேண்டாம்.. சனி கிழமை பகல் முழுதும் வீட்டை ஒழித்து சுத்தம் செய்வது துணி துவைப்பது இப்படி பல இன்னல்களை சந்தித்து,இரவின் மடியில் விடியும் வரை கவிதைகள் எழுதி, ஒரீரு படங்கள் பார்த்து,ஞாயிறு வரும் வேளையில் உறங்க செல்லும் என்னிடம் அன்று கடிகாரமும் விடுமுறை கேட்க்கும். 

இப்படிப்பட்ட இந்த வார இறுதியில், வழக்கம் போல் இணையதளத்தில் பகத் சிங்க், சுக் தேவ், பாரதியார் , நேதாஜி பற்றிய விடயங்கள் தேடி படித்து கொண்டிருந்த என்னுள்,ஏனோ சமீபமாய் உயிர் துறந்த நிரஞ்சன் எனும் ராணுவ அதிகாரியின் நினைவுகள் அதீதமாய் இருந்தது. 

எனது குடியரசு தின கவிதையை படித்த என் ராணுவ அதிகாரி நண்பர்,இன்று என்னோடு சாட்டில் வந்திருந்தார். என் எண்ண குமுறல்களை அவரிடம் கொட்ட அவரோ, எனக்கும் மேல் பொங்கி இருக்கிறார். "உந்தன் கவிதைகளின் வரிகளில் ஒளிந்திருக்கும் வரிகள் புரிகிறது." என்று தொடங்கியது அந்த உரையாடல். அதன் சாராம்சம் தான் நான் இங்கு குமுறுகிறேன்.

மேன்மையான எண்ணங்களால் வடிக்கபட்ட அந்த வரிகள் நெகிழ்தியதாம் ராணுவ மனிதனை. எங்களை நினைவில் கொள்ளாவிடிலும் நாங்கள் எங்கள் கடமையை செய்வோம் என்று மார் தட்டியது ராணுவ கரங்கள். ஆம், என்றாவது ஒரு நாள், நாம் நினைக்கிறோம் அவர்களை. குடியரசு தினத்தன்றோ அல்லது சுதந்திர தினத்தன்றோ. இல்லையென்றால் , அசோகா, ரங்க் தே பசந்தி இப்படி சில படங்களை பார்த்து! அவர்கள் ,  அத்துணை நாட்களும் தான் கடமை செய்கிறார்கள். ஊடகங்களுக்கு எதிராய் எனது வார்த்தைகள் இல்லை. ஆனால், எங்கோ ஒரு வலி . மேஜர் முகுந்த் வரதராஜன் , மேஜர் ஆச்சார்யா இப்படி எத்துனை இளம் வீரர்கள் , தனது மூன்று நான்கு வயது பெண் பிள்ளைகளை இந்த மண்ணில் விட்டு சென்றுள்ளனர். அவர்களின் பிள்ளைகளையும் மணைவி யும் , நாம் மரியாதையாய் நடத்த வேண்டும் அல்லவோ? 

சில சமயங்களில் அரசும் அவர்களை புறக்கணிப்பது தான் பெரும் கொடுமை.ஜந்தர் மந்தரில் தர்ணா செய்யும் அளவிற்கு ஒய்வு பெற்ற துணை இராணுவப் படை வீரர்களை தள்ளியுள்ளது இந்திய அரசு. நம் பிள்ளைகளே நமது சொற்களை எதிர்த்து பேசும் இந்த காலத்தில், நீயும் நானும் யாரென்றே அறியாது, நமக்காக, தங்கு இடப்பட்ட உத்தரவுகளை நிறைவேற்றும் இந்த ஜவான்களை நாம் ஒரு போதும் எண்ணுவதில்லையே ஏன் ? ஒவ்வொரு வருடமும்,அரசு கௌரவிக்கும் விருதகளை பெற சில வீரர்களே உயிரோடு உள்ளனர். பலர், மேல் உலகிலிருந்து, தனதுகுடும்பத்தாரில் ஒருவர் பெறுவதை கண்டு களிக்கின்றனர் . 

சென்னையை சேர்ந்த அமரர் முகுந்தனின் வீர மரணம் என்னை உலுக்கியது. அவரின் பெற்றோரின் மன ரணத்தை கண்கூடாய் பார்க்கிறேன் தினமும். முகுந்த் அண்ணாவின் மனைவி, எத்துணை கம்பீரமாய் மேடை ஏறி, தன கணவனின் சேவைக்காக விருதை பெற்றாள் தெரியுமா ? பார்த்த என் இதயம் துடித்தது. சிறு வயதில், எனக்கு ஒரு ஒன்பது வயது இருக்கவேண்டும், என் நினைவில் நின்ற முகமாய் சாருலதா எனும் பெண்மணி தனது சிசுவை வயிற்றில் சுமந்த படி வீரமரணம் அடைந்த கனவனுக்கு , விடை கொடுத்ததாளே, அதில் நிறைந்த கம்பீரத்தை நான் எங்கும் கண்டதில்லை. அந்த  ஞாபகம் அழியாது நிற்கின்றது என் நெஞ்சில். பின்பொருநாள் அந்த சிசு அபராஜித்தா எனும்கம்பீர பெண்ணாய் NCC பாலகியாய் மிளிர்கிறாள். 

எத்துணை போர்கள் ? எத்துணை நாட்கள்? யார் தான் இந்த ராணுவத்தினர்? யாருக்காக செய்கிறார்கள் தியாகத்தை? 
அவர்கள் இந்த விருதுகளுக்காகவோ, என் போன்றோரின் எழுத்துக்களில் நுழைவதற்காகவோ உயிரை விடவில்லையே. அவர்களுக்கும் தெரியும், தான் மரித்த பின்பு, தன்னை மறப்போர் பலர் என்று. என் இந்த கேள்வியை நான் அந்த ராணுவ அதிகாரியிடம் கேட்க, அவரோ, புன்னகையோடு பதில் சொல்கிறார், " எங்களுக்கு ராணுவம் தான் வாழ்கை, கனவு. நீங்கள் எங்களை மறந்தாலும், நாங்கள் எங்கள் கடமையை மறவோம்.என்று எங்களை காக்க அழைத்தாலும்,பச்சை நிற உடை உடுத்தி, கிளம்பிவிடுவோம் கம்பீரமாக, போய் வருகிறோம் என்று சொல்லாமலே . . ! " 

என் கண்களில் கண்ணீரும், நெஞ்சில் சற்று வலியோடு, மக்கள் மீது சிறு வெறுப்பும் சேர்ந்துகொண்டது . .  விலை போகாத ஊடகங்களும் , நன்றி மறவாத நாட்டினரும் எங்கு மறைந்து மாய்ந்து போனார்களோ தெரியவில்லை. என்று தணியும் இந்த தாகம் என்னுள் , தெரியவில்லை . . .

அஸ்ரீயா முகுந்த், அபராஜிதா ஆச்சார்யா, விஸ்வமாயா நிரஞ்சன், இன்னும் எழுத்தில் அடங்காத பல வீரர்களின் பிள்ளைகளுக்காக . . .  

இந்து முகுந்தன், சாருலதா ஆச்சார்யா என தன உயிரை தொலைத்து பிள்ளைகளுக்கென உயிர் தாங்கி எங்கோ ஓர் மூலையில் வாழும் பெண்களுக்கும் . . . 

நான் கிறுக்கிய இந்த சொற்கள் சமர்ப்பணம் . . .

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

என் காதல்

தோற்கும் பொழுதும்
நியாயம் தேடி
நியப்படுத்தும் விஷயம் அல்ல
என் காதல் , . !
நியாயமான விஷயம்,
மாலை கோர்க்க முடிந்த உன்னோடு
கை கோர்க்க அவதி படும் என்னை
கண்டால் என் மீதே கழிவிரக்கம் . . !

உன் துணை . . !

புரண்டு அழ ஒரு துகள் மண்ணும் இல்லை ,
பறந்து பாட விண் தேட வானம் இல்லை ,
நீ தந்த வலிகளை 
நான் கவிதைகளாக்கிவிட்டேன் .
என் தனிமையில் எனக்கு துணையாய் 
என் கவிதைகள் உண்டு ,
உன் தனிமையில் உனக்கு 
என்னை தவிர வேறு யாருமில்லை,
அதற்காகவேண்டியாவது ,
நான் உன் உடன் இருக்கிறேனே . . !