சனி, 31 டிசம்பர், 2016

நியூயார்க்கில் நான் . . ! - 3

ஆம். என் வாயிலிருந்து தான் அந்த கேள்வி. "யாரு அந்த யோகேஷ்" குட்டி பையனோட விளையாடிண்டு இருந்ததுல , மறந்து போச்சு. யோகேஷ் என்கிற யோகி யாக்கப்பட்ட அந்த முகம் தெரியாத இளைஞன் தான் வரன் என்று. அப்புறம், அம்மாவும் மாமியும் நினைவு படுத்தினார்கள் . 
மறுபடியும் என்னிடமே வந்தது மற்றொரு கேள்வி. "என்ன எதிர்பார்கிறாய்". எனக்கு அதுக்கு மேல் இருப்பு இல்லை, " ஆத்துக்காரர் வேலைக்கு ஆள் எடுக்கலை நான். நிம்மதியா வாழனும். ரெண்டு பேரோட அப்பா அம்மாவையும் ஒரு மாதிரி தான் பார்ப்பேன். எங்க அப்பா அம்மா ஒசத்தி, எனக்கு வரப்போறவரோட அப்பா அம்மா தாழ்த்தி அதெல்லாம் இல்லை. எனக்கு கூட்டு குடும்பத்தில், ஜாலியா சந்தோஷமா ஒண்ணா இருக்கணும். அவ்வ்ளோதாங்க , என்ன பொருத்த வரைக்கும் கல்யாணம்னா " பளிச்.. பேசி முடிச்சாச்சு. அப்பாவின் பயம் கண் வழியே வழிந்தோடியது . "இவ வாய் இருக்கே " அம்மாவின் குரல் மாமியின் காதில் மெதுவாய் விழுந்தது . "மாப்பிளை வீட்டார்" கொஞ்ச நேரம் அளவளாவி விட்டு கிளம்பிவிட்டனர். ( நான் பயம் ஏதும் இல்லாமல் வெளியே சென்று டாடா காமிச்சு வழியெல்லாம் அனுப்பிவெச்சேன்.) ஏனோ , அந்த குடும்பமே பார்க்க அழகாய் இருந்தது. தங்கை மகனிற்காக , தன மாப்பிளை சொல் கேட்டு, பெண் பார்க்க வந்த அண்ணன் , மச்சினர் சொன்னால் சரியாய் இருக்கும் என்ற நம்பிக்கையில் தங்கையின் கணவர், தனது தோழனாய் இருக்கும், கணவனின் தம்பிக்காக வந்த அண்ணியார் . அழகாய் தெரிந்தது, எனக்கு. (இந்த உறவுமுறைகள் எனக்கு தாமதமாய் புரிந்தது. அன்றென்னவோ, ஒருவருக்காக இன்னொருவர் வருகிறார்கள். எவ்வளவு அன்னோன்னியம் என்று தான் தோன்றியது.)
நான் என்ன சொல்ல போறேன் என்று மடியில் நெருப்பை காட்டியவாறு நின்ற அம்மாவின் முன், அப்பாவை கட்டிக்கொண்டு, 
"எனக்கு இந்த குடும்பம் பிடித்திருக்கு. பையனுக்கு சரினா எனக்கு ஒகே . " அப்படின்னு முடிச்சேன். இழுத்து பிடித்து வைத்திருந்த மூச்சு காற்றை அம்மாவும் அப்பாவும், "அப்பாடா" என்று விட்டார்கள் . 
" எல்லாம் சரி, இதுல யாரு யாரெல்லாம்? பையனும் வந்திருந்தானா என்ன?" இப்படி எல்லாம் கேள்வி கேட்டது நானே தான் . 
இப்பொழுது தான் அம்மா, எல்லா உறவு முறையையும், பையனின் புகைப்படத்தையும் (ஒரு வழியாக - ஒண்ணே ஒண்ணு தான்) மறக்காமல், பையனின் பெயரையும் கூறினாள் ! 
எதையோ வென்று விட்ட களைப்பில் அம்மா அப்பா.. நமக்கு இன்னும் வேலை ஆகவில்லையே. ஆம், பெண் பிள்ளையாய் ஒழுங்காய் நடந்துகொண்டால் இனிப்பு வாங்கித்தருவதாய் செய்த சத்தியத்தை அம்மா மறந்து விட்டாள். விடுவேனா நான் ? " அம்மா சாக்கி..." தொடங்கினேன் . என் அடவாதத்தை துளிகூட சட்டை செய்யாமலே யாரோடோ பேசிக்கொண்டு இருந்தாள் . பின்பு, "மாப்பிளை வீட்டார்" பற்றிய தகவல்களை சொன்னாள் . எனக்கு அப்போது, நாடகம் முடிந்ததும் மேடை இறங்கியவுடன் , இன்னாரை வந்தவர் இவர் என்று வாசிப்பார்களே அது போன்று இருந்தது. ( என்னங்க பண்றது . அம்மா, இலக்கியவாதி . பள்ளிக்காலத்தில், எல்லா மேடை நாடகங்களையும் இவர் தான் இயற்றுவார் ).நானும் , அப்பாவின் நண்பர் யார் என்று அடையாளம் கண்டு கொண்டேன், அம்மாவின் நீண்ட காலக்ஷேப உரையின் முடிவில்.
அன்றைய தினம் மாலை , "பையன் " வீடியோ சாட்டில் வருவதாய் பேச்சு. நிறைய வசவுகள் . நிறைய புத்திமதிகள் . ( அட, நான் தான் முன்பே சொன்னேனே , என் குறும்பும் சேட்டையும் பற்றி) அடேயப்பா. 
"யாய் , மாப்பிளை பையா , உனக்கு இந்த மாதிரி எல்லாம் உண்டோ ?" அப்படின்னு டெலிபதி முயன்றுகொண்டு இருந்தேன். 

வீடியோ சாட் தொடங்கியதும் , mute போட்டுவிட்டு நான் அலறினேன் . " அம்மா , அப்பா , மாமீ  . . .! "

தொடர்ந்து எழுதுவேன் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக