புதன், 17 செப்டம்பர், 2025

அமைதியே காதலாகி..

 நள்ளிரவில்
குளிர் நிலவின் கீழ்
அலைபாயும் என் ஆன்மாவை
தடுக்கும்
தீக்கனி தொடுதல்களே
உன் நினைவுகள்...

உள்ளங்கையில் நெல்லிக்கனிபோல் 
துடிக்கிறது ...
இரண்டாம் இதயமாய்,
மெதுவாய் ,
என்னுடையதாய் ...
இருளில் மறையும் தீச்சுடராய் ,
அமைதியே காதலாகி,
கசிந்துருகிறது!

நீ எங்கோ

 காற்றிடம் கிசுகிசுக்கிறேன்,
மேகத்தின் திறைக்கிழித்து 
உனை அடைய..! 

உன் ஆன்மாவின் சுவாசம்
என் நுரையீரல் மடிப்பை
நீவுகின்றது.. 

ஒவ்வொரு இரவும்
நட்சத்திரங்கள் உனக்காக
பதிலளிக்கின்றன..

நான்
நிழல்களில்
நடக்கிறேன்,

நீ எங்கோ ..

காலம் அன்பின் முன்
தலைவணங்கும் இடத்தில்,
ஒளியாய் நிற்கின்றாய்... ❤❤


வியாழன், 4 செப்டம்பர், 2025

ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்

முதல் எழுத்தை கற்ற நாள் 

கையில் பேனா கொடுத்தீர்,

மனதில் ஒளியேற்றினீர்...


பிழைகள், 

பேத்தல்கள்,

தடுமாற்றங்கள்,

அனைத்தையும் பொறுத்து

சொற்களால் செதுக்கினீர் 

எம்மை ஒரு நல்மனிதனாக...


தாயக அணைத்தீர்,

தந்தையாக வழி நடத்தினீர் ,

தோழன் போல தோள்நின்றீர்,

உலகம் என் முன் திறந்த போது,

நத்தைச் சிப்பியில் அடைக்கப்பட்டிருந்த

அடர் கனவுகளை, 

உடைந்த என் கனவுகளை ,

திரும்ப ஒட்டி 

நிஜமாக்கி நகர்ந்தீர்...


ஒவ்வொரு பாடத்திலும்

வார்த்தைகளோடு,

சிந்தனைக்கு சுடர் புகட்டி,

மனசாட்சியையும் விதைத்தீர்.

அறிவை மட்டும் அல்ல,

உணர்ச்சியையும் கற்றுக்கொடுத்தீர்..!


காலம் கடந்து

நான் முன்னேறுகையில்,

நிழலாய் நின்று உணர்த்திணீர்,

பண்பினை...

என் வெற்றியின் ஒவ்வொரு பக்கத்திலும்

உந்தன் கையொப்பமே...


ஆசிரியர் தினம் ஒரு நாளே,

ஆனால் உந்தன் ஆசிகள், 

எமக்கு 

எந்நாளுமே!!

நான் வணங்குவது

உந்தன் அறிவை மட்டுமல்ல,

உந்தன் அன்பையும்,

அர்ப்பணிப்பையும் சேர்த்து  தான்...

அன்பு வணக்கங்கள்...

ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் !!!

நன்றியுடன்,


ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

உன் நினைவில் . . .

மூன்று ஆண்டுகள் உருண்டோடிய 
உன்னை பிரிந்து நாங்கள் வாழ தொடங்கி. 
எங்கிருக்கிறாய் நீ?
எப்படி இருக்கிறாய் நீ? 
எப்போழுது வருவாய் நீ? 
பற்பல கேள்விகள் எங்களுக்குள் . 
இருளா நீ , 
ஒளியானயா நீ?
கதிரா நீ , 
மழையானாயா நீ?
அழுகுரலா நீ ,
சரணகோஷமானயா நீ?
உன்னை தீ விழுங்க, 
நாங்கள் கதறிய நினைவலைகள்,
நெஞ்சினில் நீங்காது நிற்க, 
எங்கள் நினைவுப்பெட்டகத்திலிருந்து 
உன் மாசற்ற சிரிப்பின் நிகழ்வுகள்,
இன்னும் எங்கள் உள்ளத்தில். 
ஆண்டொன்று போனால் 
வயதொன்று கூடும் என்றும் 
உன்னை விரைவில் காண்போம் 
என்ற எண்ணத்தில் வாழும் நாங்கள் . . .

நினைவாஞ்சலி - ஏப்ரல் 16, டாக்டர் ராஜ் கைலாஷ் மோகன்.

திங்கள், 4 செப்டம்பர், 2017

இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள் ! ! !

முதல் நாள் பள்ளி,
அழுகையினூடே 
பையை அணைத்தேன் ,
நீரோ எம்மை அணைத்தீர்,
தாயுமானவராய் !

குறும்பு வயதின் உச்சமாய்  
ஓராயிரம் தண்டனைகள்,
வாயோயாது வைவீர்கள்
வலிக்கும் என அறிந்தும் திருத்த,
தந்தைக்கு நிகரானீர் !

என் நத்தை கூட்டிலிருந்து 
விடுவித்து வெளியுலகை காட்டினீர்.
தவறி விழுந்தால் 
தோளோடு அணைத்தீர்,
தோழனாய் திகழ்ந்தீர் !

தாய் தந்தது உயிர்
தந்தை தந்தது அன்பு
எனில் எமக்கு
நீர் தந்ததோ
உணர்ச்சி !

எதிர்பாரா சந்திப்பில் ,
நாங்கள் முன்னேறி
நல்ல குடிமகன்களாய் இருக்கையில்
எத்துணை மகிழ்ச்சி
எத்துணை குதூகலம் !

உங்களை வாழ்த்த வயதில்லை
உங்கள் அன்பிற்கு
தலை வணங்குகிறோம்
இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள் ! ! !


வெள்ளி, 28 ஜூலை, 2017

பௌர்ணமி கவிதைகள்

நிலவை போல் நம் உறவு,
தேய்ந்தும் தோன்றியும், 
முழு இருட்டும் 
கடன்வாங்கிய வெளிச்சமுமாய்! 
குடும்பம் எனும் வானில்,
கண்கட்டி விளையாடும்
கடனாளி நிலவாய் . . !