புதன், 18 ஜனவரி, 2017

நியூயார்க்கில் நான் . . ! - 4

அழைப்பு இணைக்கப்பட்டதும் கத்தியது நான் தான். பதறிப் போய் அம்மாவும் மாமியும் உள்ளே ஓடி வர, நான் , " அந்த பக்கம், நீங்க பார்த்த பையன் அவர் அம்மாவோட இருக்காரு. நான் தனியா பேசறது, எனக்கும் ரெண்டு பெரு துணைக்கு நில்லுங்கோ" என்றேனே, இருவருக்கும் கோபம் தலைக்கு ஏறியது, முகம் காமிக்க முடியாதே. ஏனென்றால் அந்த பக்கம், நேரலை வேறு. அதனால் வேறு வழியேதும் இல்லாமல், unmute போட்டு பேச தொடங்கிவிட்டோம். சிறிது குசலம் விசாரணை. பின்பு நாங்கள் இருவரும் ஒரு இருபது நிமிட சம்பாஷணை ( இங்கு தான் நான் தலைவருக்கு எச்சரிக்கை தந்தது, என் குறும்பும் அமைதியின்மையை பற்றியும்) . அடுத்த இரு நாட்களில் , தலைவர் திருமணத்திற்கு சரி சொல்ல, எனக்கோ ஒரே ஆச்சரியம் தாளலை. என் பெற்றோர்களுக்கோ , சந்தோசம் சொல்லி மாளலை. அடுத்து வந்த இரண்டு வாரங்களுக்குள், நிச்சிய புடவைகள், நகை, மண்டபம், இப்படி எல்லாம் மின்னல் வேகத்தில் நடந்து முடிந்தது. இதில் மிக வியப்பான விஷயம், நான் தலைவரிடம் பேச தொடங்காதது தான் . இதுல வேற நிச்சியதார்த்தத்துல நடந்தது, இன்னும் பெரும் சிரிப்பு. 
முழுதாய் இரண்டு வாரம் கழித்து நிச்சயதார்த்தம் . இடையில் நாங்கள் அவ்வளவாக கதைத்துக்கொள்ளவில்லை. நிச்சிய மேடையில் நான் மட்டும் நிற்கிறேன். "மாப்பிளை" காணோம். அவர், அமெரிக்காவில் இருந்து கொண்டு பங்கு கொள்கிறார். இந்த சாஸ்திரங்களும் வழக்கங்களும், பெரியவர்களின் அலும்பும் , அப்பப்பா... 
எனக்கு ஒரு ஒன்றேகால் அடி முடி உண்டு. வெறும் அதில் பின்னி கொஞ்சம் பூ வைத்து இருக்க வேண்டியது தானே.. அதற்கு கொஞ்சம் சவுரி சேர்த்தார்கள். அலங்கார பெண்மணிக்கு சரியாக சவுரி வைத்து பின்ன தெரியவில்லை. அவசரமாய் எதோ என் தலையில் காமெடி செய்துவிட்டு ஓடி போயிட்டாள் .
பூ பத்தவில்லை என்று சுமார் 20 முழம் பூ , நிச்சியம் ஆரமித்து உடன் என் மாமிகள் தலையில் சுத்த தொடங்கினார்கள். மேடையில் திடீரென என்னை கூப்பிட்டு இரண்டு மாலை போட்டார்கள். ( "மாப்பிளை"யின் மாலையோடு எனதுமாம் ). உடலில் கணம் கூடியது. இரண்டு முறை நமஸ்காரங்கள் வேறு. இதுவரை நான் நேரிலே பார்க்காத அந்த மாப்பிள்ளைக்கு ! சடங்குகள் செய்து வைத்த என் பெரியப்பா , ஒவ்வொரு முறையும் என்னை "சபைக்கு நமஸ்காரம் செய் மா குழந்தை" என்று பயந்த குரலிலே சொல்லிக்கொண்டு இருந்தார். பின்னே, என் அராஜகம் அவருக்கு நன்றாக தெரியுமே! எங்கே அவரையும் நான் தாளித்து விடுவேனோ என்ற பயம். 
இதற்கு இடையில், எங்க தலைவர், ஒய்யாரமாய் , நேரலையில் வந்து மண்டபத்தில் உள்ள அனைவருக்கும் தரிசனம் தந்து இருக்கிறார் , எனக்கு மட்டும் இல்லை! முகூர்த்த பட்டு ஓதி வைத்த  உடன், இடம் வலம் பார்த்தேன், யாரும் தென்படவில்லை உதவிக்கு வர, நான் பாட்டுக்கு போய் புடவை கட்டிக்கொண்டு மேடைக்கு வந்துவிட்டேன் துள்ளிக்கொண்டே . அங்கு இருந்த வாண்டுகள், என் புடவையை இழுத்து, "சித்தி நீ இவ்வ்ளோ சீக்ரம் கட்டிண்டுவந்துட்டே?" என்று ஆச்சரிய பட, பீதியில் என் அக்காவும் அண்ணியும் என்னை பிடித்து மெதுவாய் நடக்க வைத்து, மேடைக்கு அழைத்தனர். 
கடைசியாய், நாத்தனார் முடித்தல் என்று, என் மடியில், மட்டையுரிக்காத தேங்காயுடன் சில பல சாமான்களையும் சேர்த்து கட்டிவிட, பின்னுக்கு பின்னல் இழுக்க, முன்னுக்கு மட்டைத்தேங்காய் இழுக்க, சரக்கடிக்க போதைப்பெண் போல் தள்ளாடிக்கொண்டே நமஸ்காரங்கள் முடிந்தது, என் பெரியப்பவை முறைத்து கொண்டே, "மாப்பிள்ளை" யை திட்டி கொண்டே . .
சுமுகமாய் முடிந்த நிச்சியதார்தம் கடைசியில், மாப்பிள்ளையின் மாமா, தன தொலைபேசியை என்னிடம் தந்து,"உன் வருங்கால கணவர் திரையில் இருக்கிறான் பேசிக்கொள் " என்றவுடன், எனக்கு வந்தது முதல் பயம் . "ஐயோ, இவருக்கா என்னை நிச்சியம் செய்தார்கள் " பயபீதியில் வெளிறியது என் முகம் . . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக