வெள்ளி, 20 ஜனவரி, 2017

ஜல்லிக்கட்டு - தடை - போராட்டம் !

தமிழ் நாடு தழுவிய ஒரு போராட்டம் - வரலாறு காணாத ஒரு போராட்டம் . ஜல்லிக்கட்டை நான் ஆதரித்தாலும் , விஞான ரீதியில் சில வெளிச்சங்கள் . a 2 பால் இந்திய மாடுகள் போன்ற பெரிய பெரிய வார்த்தைகள் இல்லை. அனைவருக்கும் புரிய சில அடிப்படை விஞ்ஞான உண்மைகள் இங்கே .

ஒவ்வொரு ஜீவராசிக்கும் அதனின் மரபணுக்கள் -  விந்தணுக்கள் மற்றும் கருமுட்டைகள் பொருத்து தனித்தன்மைகள் உண்டு . மனிதர்களில் கூட , மனித ஜீனோம் திட்டம் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட பல உண்மைகளில் ஒன்று , அனைத்து மனித இனத்தின் மரபணுக்கள் ஒரே மாதிரி இருக்கும் என்றும் அதிக பக்ஷமாய் ஒரு சதவிகித வேறுபாடு மட்டுமே காணப்படும் என்றுபதும் தான் ! ஆம் , வெவ்வேறு வடிவங்கள் கொண்ட மனிதர்களின் மரபணுக்கள் சுமார் பூஜ்யம் முதல் அரிதாக ஒரு சதவிகிதம் தானாம் . 99.5% நமது மரபணுக்கள் ஒன்றாகவே இருக்கிறதாம்! விஞ்ஞான ரீதியில் பார்த்தல் , மாடு என்ற ஒற்றை சொல்லால் விளக்கபடும் அந்த உயிரினம் பலவகைகள் கொண்டவையாகவும் , ஒவ்வொரு வகைக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு என்பதும் தான் உண்மை. 

மாடுகளின் இனம் பற்றிய தகவல்களில் நமக்கு தேவையான சில. 
நான்காயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே இந்துஸ்தானத்தில் சிந்து நதி தீரத்திலும் , கங்கை கரை நிலங்களிலும் தற்போதைய கர்நாடகத்தின் பனஹள்ளி எனும் ஊரிலும் மாடுகளின் நடமாட்டங்கள் இருந்தன. அப்போது வசித்து வந்த மக்கள் , மாட்டினை வழிப்பட்டதாகவும் மாடுகளை வளர்க்க முயற்சித்ததையும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 

சங்க காலத்தில் , ஐந்து நிலங்களாய் இருந்த நம்மை சேர சோழ பாண்டிய மன்னர்கள் சேர-சோழ-பாண்டிய-கொங்கு மற்றும் நடு  நாடென்றும் ஆண்டு வந்தனர் . கறவை மாடுகளும் காளை மாடுகளும் நம் குடும்பத்துள் ஒருவராய் கருதப்பட்ட காலங்கள் அவை. தென் இந்திய மாடு வகைகளில் மேகரை மாடு ( இக்கால காங்கேய மாடு), கீக்கரை மாடு, செம்மரை மாடு ( மலையன் மாடு), பாலமலை மாடு , ஆலம்பாடி மாடு மற்றும் கொல்லி மலை மாடினங்கள் இருந்து வந்தன . மாட்டின் மடி பார்த்து பால் கறக்க பட்ட காலம் . கன்றுகள் கொஞ்சி விளையாடிப்பின் பால் கறக்க பட்ட காலம். விரல் பட்டால் நோகுமே என்று விரலுக்கும் காம்பிற்கும் எண்ணெய் தடவி பால் கறந்த காலம். 

காளை மாடுகளை ஏர் உழுவதற்கு , வண்டி பூட்டுவதற்குமாய் பயன் படுத்தினர். சங்க இலக்கியங்களில் , காளைகளை தழுவுவதன் மூலம் வீரத்தினை பறைசாற்றி , திருமணங்களும் நடத்தி வைக்க பட்டன. தாம் வளர்த்த காளைகளிடம் தோற்பதையும் பெருமையாய் கருதினர்!

சில இனங்கள் கறவைக்காகவும் சில இனங்கள் காளையின் வேலைக்காகவும் மூன்றாம் வகை மாடுகள் வறட்சியிலும் நீடித்து நிற்கும் தன்மைக்காகவும் வளர்க்கப்பட்டன. அதாவது கறவை மாட்டின் காளை இனமும் , உழைக்கும் காளைகளின் கறவை தகுதியையும் புரிந்த மக்கள் அதற்கேற்றாற் போல மாடுகளை பயன்படுத்தினர். சங்க காலத்தில் திகழ்ந்த இனம் தமிழினம் , திகழ்ந்த மக்கள் இந்துக்கள்! ஆக , தமிழினத்தின் விளையாட்டுகளில் ஏர் தழுவுதலும் நமது அடையாளம்.

பாரதம் சிந்து நாடாகி இந்துஸ்தானமாக மாறி இந்தியாவென விளிக்க தொடங்கிய காலகட்டத்தில் , நம் நாட்டிற்கான மாடுகள் - உள்நாட்டு இனங்கள் சுமார் 40 இருந்தன . காங்கேய மாடுகளும் பனஹள்ளி மாடுகளும் எப்படியோ நீடித்து வந்தன . 

நம் மாடுகளின் சிறப்புக்கள் என்ன ? சில மாடினத்தில் மாடுகளின் தோல் மிகவும் தடிமன்னாக இருக்கும். பூச்சி கடி , வறட்சி வெயில் இப்படி பல இயற்கை அபாயங்களில் தன்னை தானே காத்துக்கொள்ளும். அவற்றின் தோலில் சுரக்கும் ஒரு சில நொதிகள் கிருமி நாசினியாகவும் செயல் படுகின்றன. மற்றபடி , மாட்டின் சாணம் கோமியம் ஒவ்வொன்றிற்கும் உள்ள மருத்துவ குணங்கள் நமக்கே தெரியும். 

பால் பற்றி பார்த்தோமெனில் , பாலில் சில புரத சத்துக்கள் இருக்கின்றன. எப்படி கொழுப்பு சத்தில் நல்ல கொழுப்பு கெட்ட கொழுப்பு என்று உள்ளதோ அதே போல் , புரத சத்துக்களும் நல்லவை தீயவை என உண்டு. பால் புரத்தில் முதன்மையான புரதம் கேசின். இது இருவகை படும் . A 1 மற்றும் A2 கேசின். A2 கேசின் உடலிற்கு மிக நல்லதென்றும் , A1 கேசின் தொடர்ந்து உட்கொண்டால் பிளேக்ஸ் எனும் வாத கொள்ளை நோய் வருவதற்கான சாத்தியங்கள் நிறைய உண்டு என்றும் ஆராய்ச்சிகள் உள்ளன. (இதை பார்க்க . .  https://www.ncbi.nlm.nih.gov/pubmed/12957678).

இந்திய உள்நாட்டு இனத்தின் பாலில் A2 கேசின் நிறைய உள்ளதென்றும் , உள்நாட்டு கறவை மாடுகளை உள்நாட்டு காளைகளோடு இனப்பெருக்கம் செய்து அந்த இனத்தை பாதுகாப்பதன் மூலம் , பாலின் தரம் குறையாது . கலப்பட இன பெருக்கம் செய்வதன் மூலம் , கறவை அளவை மிகுதி படுத்தலாமே ஒழிய இந்த A2 புரத சத்தை பாலில் கொண்டு வர இயலாது. அது புரதத்தின் தன்மை. 

வளர்ந்த நமது விவசாய முறையால் , காளைகளுக்கு வேலை இல்லாமற் போனாலும் ஜல்லிக்கட்டு எனும் நமது பாரம்பரிய விளையாட்டிற்காகவே வளர்க்க பட்ட காளைகள் இனப்பெருக்கத்துக்கு பயன்படுத்தப்பட்டன.  அதன்மூலம் நமது உள்நாட்டு இனங்களின் அழிவு கொஞ்சம் தாமதமாகிக்கொண்டு இருந்தன. 

இப்பொழுது , ஜல்லிக்கட்டை தடை விதித்து நாம் போராட்ட களத்தில் இறங்கினாலும் நம்மில் பலருக்கு எதற்காக போராட்டம், யாருக்காக போராட்டம் , யாரை எதிர்த்து போராட்டம் என்றே புரியாமல் திணறுகின்றோம் . அரசியல்வாதிகளை எதிர்த்தா ? விவாசத்தை ஊக்குவிக்கவா? தமிழ் மரபை காப்பாற்றவா ? வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எதிராகவா? உள்நாட்டு சதி கும்பலை அம்பாலா படுத்தவா ? யாரை எதிர்க்கவேண்டும் என்றே தெரியாமல் , எதை காப்பாற்ற வேண்டும் என்றே புரியாமல் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாய் போராடிக்கொண்டு இருக்கிறோம்!  இதில் வேதனைக்குரிய விடயம், நம்மில் சிலர் கலப்பட காளையினத்தை படமாக வைத்து ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவிப்பது தான்!

ஏற்கணமே மஞ்சள் வேப்பம் கற்றாழை என்று நமது தாவரங்களை இழந்தாயிற்று. இன்னும் , ஆடமாடுகளையும் இழந்து விட்டு - "வல்லரசு இந்தியா" என்று கனவு காண்பதன் அர்த்தம் என்ன ? 

யோசிப்போம் - களமிறங்கிய நாம் எதிரிகளையும் துரோகிகளையும் கண்டறிவோம் - சரியான திசையில் போராட்டத்தை கொண்டு செல்வோம் ! 

பின்குறிப்பு : இதை எழுதுவதற்கு முன்பு சில ஆய்வுக்கட்டுரைகளை படித்து விட்டே எழுதி இருக்கிறேன். அவற்றில் ஒன்றை குறிப்பிடவும் செய்துள்ளேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக